உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
அது 1938 ஆம் வருடம்.
கிறிஸ்துமசுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன (Dec 22). தென் ஆப்ரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில், சாலும்னா ஆற்றின் வாயிற்பகுதியில் தன் குழுவினருடன் மீன் பிடித்து கொண்டிருந்தார் கேப்டன் கூசன்.
அப்போது வலையில் சிக்கியது ஒரு வினோதமான மீன்.
ஆம், அது மிகவும் வினோதமான மீன். ஏனென்றால் அப்படிப்பட்ட மீனை இதுவரை அவர் பார்த்ததில்லை. தன்னுடைய வலையில் சிக்கிய அந்த மீன் இன்னும் சிறிது நாட்களில் உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்த போகின்றது என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.
அப்போது அவருக்கு தோன்றியதெல்லாம் இந்த வினோதமான மீனைப் பற்றி கிழக்கு லண்டன் (East London - தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நகரம்) அருங்காட்சியகத்திற்கு தகவல் கொடுப்போம் என்பதுதான்.
அப்போது கிழக்கு லண்டன் அருங்காட்சியகத்தின் டைரக்டராக இருந்தவர் கோர்ட்னி லாடிமர் (Miss Marjorie Courtney-Latimer) அவர்கள். மீனின் உடலமைப்பு அவருக்கு வியப்பை கொடுக்க, அந்த மீனை தன்னுடைய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்தார்.
படு சுவாரசிய காட்சிகள் நடந்தேற ஆரம்பித்தன.
மீன்கள் பற்றிய ஆய்வில் தனித்துவம் பெற்றவரான டாக்டர் ஸ்மித் (Dr.J.L.B Smith) அவர்களை தொலைப்பேசியில் அழைத்தார் லாடிமர். பதிலில்லை. ஓய்வு மற்றும் சில காரணங்களுக்காக தன் மனைவியுடன் தன் அலுவலகத்திலிருந்து சுமார் 350 மைல்கள் தொலைவில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டிற்கு சென்றிருந்தார் ஸ்மித்.
தொலைப்பேசியில் அழைத்து பார்த்து பதில் இல்லாததால், தான் பார்த்த அந்த மீன் குறித்து குறிப்புகள் எழுதி அந்த மீனை படமாக வரைந்து ஸ்மித்திற்கு கடிதம் எழுதினார் லாடிமர்.
ஜனவரி மூன்றாம் தேதி அலுவலகம் வந்து கடிதத்தை பார்த்த ஸ்மித்திற்கோ பேரதிர்ச்சி. இது குறித்து அவர்"என்னுடைய மூளையில் குண்டு வெடித்தது போல உணர்ந்தேன். நிச்சயமாக இது மற்ற மீன்களை போல இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் வந்து 11 நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்த அவர், அந்த மீனின் உடல் அழுகிவிடப்போகின்றது என்று அஞ்சி உடனடியாக லாடிமருக்கு தந்தி அடித்தார்.
அதில் "மிக முக்கியமானது. பாதுகாக்கவும் (MOST IMPORTANT PRESERVE SKELETON AND GILLS [OF] FISH DESCRIBED)" என்று குறிப்பிட்டிருந்தார்.
பிறகு வீட்டிற்கு சென்று லாடிமருக்கு கடிதம் எழுதினார், அதில்
உங்களுடைய 23ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. நன்றி. நான் கிரஹம்ஸ்டவுனில் இல்லாததால் உங்களது கடிதத்தை பார்க்க முடியவில்லை. உங்களிடம் உள்ள மீனை வெகு விரைவில் வந்து பார்க்கமுடியும் என்றும் எனக்கு தோன்றவில்லை. நான் தற்போது பணி நிமித்தமாக வேறு ஒரு இடத்திற்கு செல்ல இருப்பதால் அந்த மீனை பாதுகாத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்களுடைய படம் மற்றும் குறிப்புகளிலிருந்து எனக்கு தெரிய வருவது என்னவென்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த மீன் பல காலங்களுக்கு முன்னதாகவே அழிந்து விட்டதாக கருதப்படும் ஒரு உயிரினத்தை ஒத்திருக்கின்றது. எனினும் நான் அதனை பார்க்கும் வரை எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை. நான் வரும் வரை அதனை மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். --- (Extract from the Original quote of) Dr.J.L.B. Smith's Letter to Miss.Latimer, 3rd January 1939.
அவரால் இந்த ஆச்சர்யத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளமுடியவில்லை. அடுத்த நாள் லாடிமரை தொலைப்பேசியில் அழைத்து பேசினார்.
ஸ்மித் அவர்கள் கிழக்கு லண்டனுக்கு அந்த மீனை பார்க்க சென்றது பிப்ரவரி 16ஆம் தேதி. ஆனால் அதற்கு முன் வரை பல கடிதங்களை அவர் லாடிமருக்கு எழுதியுள்ளார். லாடிமர் அவர்களும் ஸ்மித்திற்கு பல தகவல்களை கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளார். இவ்வளவு ஏன்? அந்த மீனின் செதில்கள் சிலவற்றை கூட ஸ்மித்திற்கு அனுப்பி வைத்துள்ளார் லாடிமர்.
ஆனால், தான் மனதில் நினைத்திருக்கும் மீனாக அது நிச்சயம் இருக்காது என்றே நம்பினார் ஸ்மித். ஒருவேளை அந்த மீன் தான் நினைத்த மீனாக இருந்தால், அது உயிரியல் உலகையே ஸ்தம்பிக்க வைக்க போகின்றது என்பதையும் நன்கு உணர்ந்தே இருந்தார்.
ஆனால், எது நடக்க வாய்ப்பே இல்லை என்று அவர் கருதினாரோ அது தான் கடைசியில் நடந்தது.
ஆம். அந்த மீனைப் பார்த்த ஸ்மித் அவர்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஆச்சர்யம் என்பதை காட்டிலும் திகைப்பு என்பதே சரியான வார்த்தையாக இருக்க முடியும். எந்த மீனை அவர் கற்பனை செய்து வைத்திருந்தாரோ அதே மீன் தான் அது.
தான் அந்த மீனை முதல் முறை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பின்னர் எழுதிய ஸ்மித் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
Although I had come prepared, that first sight [of the fish] hit me like a white-hot blast and made me feel shaky and queer, my body tingled --- Dr.J.L.B Smith in his book "The four Legs" நான் அனைத்திற்கும் தயாராகி தான் வந்தேன். இருந்தாலும் அந்த மீனை முதலில் பார்த்த போது எனக்குள் நடுக்கம் ஏற்படுவது போல உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தது --- (Extract from the original quote of) Dr.J.L.B Smith in his book "The four Legs"
ஸ்மித் அவர்கள் என்ன நினைத்தாரோ அது தான் நடந்தது. "அந்த மீன் தான் இது" என்று அவர் உறுதிப்படுத்தியதும் உயிரியல் உலகம் பரபரப்புக்கு உள்ளானது. அவர்கள் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அறிவியல் உலகே ஆச்சர்யத்தில் மூழ்கியது.
இந்த மீன் கண்டுபிடிப்பு இன்றளவும் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விலங்கியல் கண்டுபிடிப்பாக கருதப்படுவதாக ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் கூறுகின்றது.
பத்திரிக்கைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த செய்தியை வெளியிட்டன.
அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற பல மீன்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை பார்த்ததை வைத்து, இந்த மீனிற்கான முக்கியத்துவம் எந்தளவிற்கு இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்திருப்பீர்கள்.
இனி, ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்? எந்த மீன் இது? அறிவியலாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக பரிணாமவியலாளர்களுக்கு ஏன் மிகுந்த அதிர்ச்சியை இது அளித்தது? என்று பார்ப்போம்.
இந்த மீனிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
பின்னே இருக்காதா என்ன? 65-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்து விட்டதாக கருதப்பட்ட இந்த மீன் இனம், இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றன என்று தெரிய வந்தால் யார் தான் ஆச்சர்யப்படாமல் இருப்பர்? (அழிந்து விட்டதாக கருதப்படும் டைனாசர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று தெரிய வந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?, அது போன்றதொரு சூழ்நிலை தான் இது)
எந்த மீன் இது? பரிணாமவியலாளர்களுக்கு ஏன் அவ்வளவு அதிர்ச்சி?
இந்த மீனிற்கு பெயர் சீலகந்த் (Coelacanth). சுமார் நூறு கிலோ எடை வரை, சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன் பரிணாம வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்தது.
மீன்கள் படிப்படியாக நிலவாழ் உயிரினங்களாக (Tetrapods - eg. amphibians, reptiles, mammals) மாறியிருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாம கோட்பாடு.
அதன்படி, பரிணாமவியலாளர்களால், மீன்களுக்கும் நிலவாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினமாக (Transitional form or Missing Link) நம்பப்பட்டு வந்தது சீலகந்த்.
அதாவது, மீன்கள் சிறுக சிறுகச் சீலகந்த்தாக மாறி பின்னர் இவற்றிலிருந்து நிலவாழ் உயிரினங்கள் வந்திருக்கவேண்டுமென்று அப்போது பரிணாமவியலாளர்களால் நம்பப்பட்டு வந்தது.
சீலகந்த்கள் இடைப்பட்ட உயிரினமாக கருதப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எல்லோருக்கும் புரியும் ஒரு முக்கிய காரணமென்றால், இவற்றின் துடுப்புகள் (Fins) கால்கள் போன்று இருந்ததுதான்.
It was once thought to be a missing link between fishes and amphibians because of its leg-like lobed fins - Natural History Museum, London. ஒரு காலத்தில் இவை மீன்களுக்கும், நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினமாக கருதப்பட்டு வந்தன. அதற்கு காரணம், இவற்றுடைய துடுப்புகள் கால்கள் போன்று இருந்தது தான் - (Extract from the original quote of) Natural History Museum, London. ஆக, மீன்களுக்கு கால்கள் வளர்ந்து (சீலகந்த் ஆக மாறி) நிலத்திற்கு வந்ததாக நம்பப்பட்டு வந்தது.
400-360 மில்லியன் ஆண்டுகள் பழமையான சீலகந்த் மீன்களின் உயிரினப்படிமங்கள் (Fossils) காணக்கிடைக்கின்றன. சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான நிறைய படிமங்கள் கிடைத்திருக்கின்றன.
1938 ஆம் ஆண்டு இந்த மீன் பிடிக்கப்படும் வரை, சுமார் 65-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மீன் இனம் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இந்த கால கட்டத்தில் தான் டைனாசர்களும் அழிந்து போனதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஏன் இவற்றுடைய இடைப்பட்ட கால படிமங்கள் கிடைக்கவில்லை?
இதற்கு என்ன விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், பழங்காலத்திய சீலகந்த்கள், படிமம் உருவாகுவதற்கு ஏற்ற சூழ்நிலையில் வாழ்ந்தனவாம். ஆனால் தற்காலத்திய (சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து இன்று வரை) சீலகந்த்களோ படிமம் உருவாகுவதற்கு சாதகமான இடங்களில் வசிக்க வில்லையாம்.
How could Coelacanths disappear for over 80 million years and then turn up alive and well in the twentieth century? The answer seems to be that the Coelacanths from the fossil record lived in environments favouring fossilisation. Modern Coelacanths, both in the Comoros and Sulawesi were found in environments that do not favour fossil formation. They inhabit caves and overhangs in near vertical marine reefs, at about 200 m depth, off newly formed volcanic islands --- Coelacanth, Latimeria chalumnae Smith, 1939. australianmuseum.net.au
ஆக, 80 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே அழிந்து விட்டதாக கருதப்பட்ட இந்த இனம் இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றன என்று தெரியவந்தால் எந்த அறிவியலாளர் தான் ஆச்சர்யமடையாமல் இருப்பார்?
பரிணாமவியவியலாளர்களுக்கோ, ஆச்சர்யம் என்பது சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். ஏனென்றால், எதனை பரிணாம கோட்பாட்டிற்கு மிக வலிமையான ஆதாரம் என்று காட்டி வந்தார்களோ அது அன்றோடு மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது.
சீலகந்த் உயிரோடு காட்சியளித்து பரிணாமவியலாளர்களின் நம்பிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டது.
(80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய) சீலகந்த்களுடைய படிமங்களை வைத்து தான்அவைகளை இடைப்பட்ட உயிரினமாக அவர்கள் கருதினார்கள். இன்று உயிரோடு உள்ள இந்த இனத்தை ஆராய்ந்து பார்த்ததில் பரிணாமவியலாளர்களின் இந்த மீன் பற்றிய கருத்துக்கள் தவறு என்று தெரிய வந்தன.
உதாரணத்துக்கு, படிமங்களை வைத்து இந்த மீனினுடைய துடுப்புகளை கால்களாக எண்ணிக்கொண்டிருந்தனர் என்று மேலே பார்த்தோமல்லவா? உயிரோடு உள்ள இந்த மீன் இனத்தை ஆய்வு செய்து பார்த்ததில், ஆழ்கடல் மீன்களான இவை, அந்த துடுப்புகளை கால்களாக உபயோகப்படுத்துவதில்லை என்று தெரிய வந்தது. அதாவது, கடலின் தரைப்பகுதியில் கூட இவை அந்த துடுப்புகளை வைத்து சீல்களை போல நடந்து போவதில்லை என்று தெரிய வந்தது. அந்த துடுப்புகள் கால்களில்லை, அவை துடுப்புகள் மட்டுமே.
ஆக, ஆய்வுகளின் மூலம் இவை இடைப்பட்ட உயிரினம் இல்லை என்பது தெளிவானது.
இதில் இன்னொரு முக்கிய செய்தியும் அடங்கியிருக்கின்றது. சற்று யோசித்து பாருங்கள், இந்த மீன் இனம் இந்நேரம் காட்சியளித்திருக்காவிட்டால், இன்றளவும் இடைப்பட்ட உயிரினமாக இவை கருதப்பட்டிருக்கும். ஆக, படிமங்களை வைத்து எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் நிரூபித்தது சீலகந்த்.
தான் இடைப்பட்ட உயிரினமில்லை என்று நிரூபித்ததோடு மட்டுமல்லாமல் சில கேள்விகளையும் பரிணாமவியலாளர்கள் முன் தூக்கி போட்டது சீலகந்த்.
மிகவும் சிக்கலான உடலமைப்பை கொண்டிருக்கும் ஆழ்கடல் மீன்களான சீலகந்த், சுமார் 150-400 மீட்டர்கள் ஆழத்தில் வாழ்பவை. இவைகளை தூண்டில் மூலம் கடலின் மேல்மட்டத்திற்கு இழுத்து வர செய்து சோதித்து பார்த்ததில், இவை அங்கு சில மணி நேரங்களே உயிரோடு இருப்பது தெரிய வந்தது (இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன). இதனாலேயே இவைகளை மீன் காட்சியகத்தில் வைப்பதென்பது முடியாத காரியமாய் இருக்கின்றது. கடலின் மேல்மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டால் சில மணி நேரங்களில் இறந்துவிடும் இவை, பிறகு எப்படி கரைக்கு வர முயற்சித்து சிறுக சிறுக மாறி நிலவாழ் உயிரினமாக மாறியிருக்க முடியும்?
ஒருவேளை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சீலகந்த் மீன்கள் கடற்கரைக்கு அருகில் வரக்கூடிய தகுதியை கொண்டிருந்திருக்கலாமோ? அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை. பரிணாமவியலாளர்களின் கற்பனையில் மட்டுமே அது உண்மையாக இருக்க முடியும்.
இந்த மீன் பல ஆச்சர்ய தன்மைகளை தன்னகத்தே கொண்டது. ஆய்வு செய்து பார்த்தால் அறிந்து கொள்வீர்கள்.
இப்போது பரிணாம ஆதரவாளர்களுக்கு சில கேள்விகள்:
1. நீங்கள் இன்னும் சீலகந்த்தை இடைப்பட்ட உயிரினமாக கருதுகின்றீர்களா? (Is the coelacanth still a missing link?)
ஏன் இதை கேட்கின்றேன் என்றால், பரிணாமம் குறித்த முன்னொரு பதிவின் பின்னூட்ட உரையாடலின் போது தருமி என்பவர் பின்வரும் கருத்தை தெரிவிக்கின்றார்.
**** தருமி said... யாஹ்யா துணிந்து சொல்லும் தவறுக்கு இன்னொரு சான்று: //Although a great many fossils of living things which existed billions of years ago, from bacteria to ants and from leaves to birds, are present in the fossil record, not a single fossil of an imaginary transitional form has ever been discovered.//
I think he means - imaginary transitional form = MISSING LINKS OR CONNECTING LINKS.
அப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்களே... நீங்கள் சொல்லும் சீலகாந்த், ஆர்கியாப்ட்ரிக்ஸ் --இதெல்ல்லாம் என்னவாம்? Tuesday, July 20, 2010௦ ****
ஆக, பெரியவர் தருமி போன்ற துறைச்சார்ந்தவர்களே இதனை இன்னும் இடைப்பட்ட உயிரினமாகத் தான் நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.
பரிணாமத்திற்கு ஆதாரமாக கருதப்பட்ட சீலகந்த் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆதாரமில்லை என்று நிராகரிக்கப்பட்டு விட்டதை மறந்து விட்டனரா அல்லது அவர்களுக்கு இது குறித்த தகவல் இன்னும் போய் சேரவில்லையா?
இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பரிணாம ஆதரவாளர்கள் பதில் சொல்லட்டும். அவர்களது பதிலைப் பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் வைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்...
இறைவன் உங்கள் அனைவருக்கும் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
My Sincere Thanks to:
1. Public Broadcasting service.
2. Australian Museum.
3. Natural History Museum, London.
4. Wikipedia.
References: 1. Coelacanth, Latimeria chalumnae Smith, 1939 - Australian Museum. link2. Moment of Discovery - Peter Tyson, Public Broadcasting Service. link3. Fishes of the deep sea - Natural History Museum, London. link
4. Latimeria chalumnae - Natural History Museum, London. link
5. Coelacanth - Wikipedia. link6. Thinking about biology - Stephen Webster, Cambridge University Press, p.81-83. 7. Aquarium snaps world's first photos of young coelacanth - Japan Times. link8. Claim CB930.1 - Talkorigins. link9. Coelacanths - Aquatic Community. link
10. The discovery - Berkeley website. link
11. The One Minute Coelacanth: A Brief Overview - Dinofish Website. link
12. Coelacanth Evolution - Pharyngula, Science Blogs. link
13. Living Coelacanths: Values, Eco-ethics and Human Responsibility - Hans Fricke, Max Planck Institute, Germany.
14. History of the Coelacanth Fishes - Peter L.Forey, Springer, p-38. |