Thursday, 7 June 2012

பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்






ஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்கள், மே 18 ம் தேதியை நினைவுகூரும் தினமாக அறிவித்துள்ளனர். கடந்த 64 வருடங்களாக, மே 15 ம் தேதியை, “நக்பா (Al Nakba) தினம்” என்று பாலஸ்தீனர்கள் அறிவித்துள்ளனர். யூதர்கள் அதனை இஸ்ரேலிய சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, 1967 யுத்தத்தின் வெற்றியையும் யூதர்கள் கொண்டாடினார்கள். இவ்விரண்டு சம்பவங்களின் பின்னணியில், பாலஸ்தீன அரேபிய மக்களை இனப்படுகொலை செய்து, இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கொடுமைகள் மூடி மறைக்கப் படுகின்றன. 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், யூதர்களைப் போன்று தென்னிலங்கை சிங்களவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வு இங்கே ஒப்பிடத் தக்கது.


1948 ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாதுகாப்புக்குட்பட்ட பாலஸ்தீன நாடு, யூதர்களிடம் கையளிக்கப் பட்டது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிரிட்டிஷ் காலனியான இலங்கை, சிங்களவர்களிடம் கையளிக்கப் பட்டது இவ்விடத்தே நினைவு கூறத் தக்கது. சிங்கள ஆட்சியாளர்கள், இஸ்ரேலிய யூத ஆட்சியாளர்களை பின்பற்றி நடந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய யூத அரசின் இன ஒடுக்குமுறை கொள்கை பன்மடங்கு வீச்சைக் கொண்டது. 1948 ம் ஆண்டு, யூதர்களின் மரபு வழி இராணுவம் என்ற ஒன்று இருக்கவில்லை. தனித் தனியான ஆயுதக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தன. மே 15 , அன்று தாக்குதலை தொடங்கிய யூத ஆயுதக்குழுக்கள் , சுமார் 600 பாலஸ்தீன கிராமங்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர். வெளியேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு வழங்கிய ஆயுத தளபாடங்களும், யூத ஆயுதக் குழுக்களுக்கு பெரிதும் உதவியிருந்தன.

மே 18 நினைவுகூரலை, இலங்கை நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதே போன்று, மே 15 நினைவுகூரலை, இஸ்ரேலிய நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது. அரபு மொழியில் பேரழிவு என்ற அர்த்தம் தரும், “அல் நக்பா” என்ற சொல், மே 15 நினைவுகூரல் தினத்திற்கு பெயராக வைக்கப் பட்டுள்ளது. ஜனவரி மாதம், இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, அல் நக்பா நினைவுகூரலை தடை செய்துள்ளது. எந்தவொரு நிறுவனமாகிலும், இது போன்ற நினைவுகூரலை அனுமதிக்குமானால், அரச நிதியை இழக்க வேண்டியிருக்கும். இத்தகைய தடைகளையும் மீறி, இந்த வருடம் பாலஸ்தீனர்கள் அல் நக்பா தினத்தை நினைவுகூர்ந்துள்ளனர். டெல் அவிவ் நகர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பாலஸ்தீன மாணவர்கள், வளாகத்தினுள் சிறிய ஒன்றுகூடலை ஒழுங்கு படுத்தினர். அதில், இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களின் பெயர்களை வாசித்தார்கள். அதே நேரம், பாலஸ்தீன அதிகார சபைக்குட்பட்ட பிரதேசத்தில், பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாட நூல்களிலும், சரித்திர நூல்களிலும், 1948 க்கு முன்னர் பாலஸ்தீனர்கள் வாழ்ந்ததாக, எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. ரோமர் காலத்தில் இருந்து, யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாக எழுதப் பட்டுள்ளது. சிங்கள-பௌத்த பேரினவாதிகள், இலங்கை முழுவதும் தமது என்று உரிமை கோருவது, இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்திற்கு உரிமை கோருவது மட்டுமல்ல, அப்படி ஒரு நாடு சரித்திரத்தில் இருந்ததை மறுத்து வருகின்றது. சரித்திர சான்றுகளை மறுப்பதற்கு வசதியாக, புதிய காடுகள் உருவாக்கப் படுகின்றன. 1948 ல் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களில், ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்த யூதர்கள் குடியேற்றப் பட்டனர். அந்தக் கிராமங்களின் அரபுப் பெயர்களை அழித்து விட்டு, ஹீபுரு பெயர்களை சூட்டினார்கள். கிழக்கிலங்கையிலும், வவுனியாவிலும், தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை வெளியேற்றி விட்டு, அங்கெல்லாம் சிங்களவர்களை குடியேற்றியது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலில் நடந்ததைப் போன்று, அந்தக் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப் பட்டன.

இன்று பாலஸ்தீன பிரதேசமாக கருதப்படும் காஸா வில் வாழும் என்பது வீதமானோர், இஸ்ரேலியப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த அகதிகளாவர். 1948 ம் ஆண்டு, காஸாப் பிரதேசம் எகிப்தின் பகுதியாக இருந்தமை, இங்கே குறிப்பிடத் தக்கது. அதே போன்று, அதே காலகட்டத்தில் ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த, மேற்குக் கரை பிரதேசத்தில் வாழும் நாற்பது சதவீதமான பாலஸ்தீனர்களின் பூர்வீகமும் இஸ்ரேல் ஆகும். பிற்காலத்தில், காஸா, மேற்குக்கரை மீது போர் தொடுத்த இஸ்ரேலிய படைகள், அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தன. இன்று வரை, 1948 ம் ஆண்டு, இஸ்ரேலிய தேசத்திற்குள் அகப்பட்ட சில நூறு பாலஸ்தீன குடும்பங்களுக்கு மட்டுமே பிரஜாவுரிமை உள்ளது. காஸா, மேற்குக்கரை பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு எந்த நாட்டு பிரஜாவுரிமையும் கிடையாது. அதாவது, “நாடற்றவர்கள்”.

இன்று இஸ்ரேல் என்று அறியப்பட்ட தேசத்தில் உள்ள, 418 பாலஸ்தீன கிராமங்கள் பாழடைந்து போயுள்ளன. ஏனென்றால், அங்கே குடியேறுவதற்கு போதுமான அளவு யூதர்கள் கிடைக்கவில்லை. ஆகவே, பாழடைந்த பாலஸ்தீன கிராமங்களை காடுகளாக மாற்றும் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. சைப்ரஸ் மரம் போன்று, வறண்ட பிரதேசத்தில் விரைவாக வளரும் மரச் செடிகள் கொண்டு வந்து நடப் படுகின்றன. சில வருடங்களில் அவை 2 , 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகளாக மாறி விடும். அந்தக் காடுகளுக்கு இஸ்ரேலிய தலைவர்களின் நாமங்கள் சூட்டப் படுகின்றன. காடு வளர்க்கும் திட்டத்திற்கு, மேற்கத்திய நாடுகளும் உதவி வருவதால், சில காடுகளுக்கு மேற்குலக இஸ்ரேலிய நண்பர்களின் பெயர்களும் சூட்டப் படுகின்றன.

டெல் அவிவிலிருந்து ஜெருசலேம் செல்லும் வழியில், சாரிஸ்(Saris), பெய்த் துல் (Beit Thul) என்ற கிராமங்களில், பெல்ஜிய யூதர்களால் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. அன்றைய கார்டினல் டானியல், காடுகளில் விவிலிய வாசகங்களை பொறித்துள்ளார். நாசரேத் நகருக்கு அருகில், மலூல் (Malul), முஜெய்டில் (Mujeidil) என்ற கிராமங்களும் காடுகளாக மாறியுள்ளன. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், இவ்விரண்டு கிராமங்களிலும் கிறிஸ்தவ பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே இப்பொழுதும், பாலஸ்தீன கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அறுபதுகளில் அந்தக் கிராமங்களுக்கு சென்ற, கிறிஸ்தவ மதப் பற்றாளர்களான பெல்ஜிய அரசனும், அரசியும், அங்கே முப்பதாயிரம் மரச் செடிகளை நாட்டினார்கள். மேலேயுள்ள படத்தில், அழிவடைந்த நிலையில் உள்ள பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயமும், அருகில் காடும் இருப்பதை பார்க்கலாம்.

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் புத்திஜீவிகள், தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றனர். தமிழ் தேசியம் பேசுவோரில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் பாலஸ்தீன கிறிஸ்தவர்களுடன், தோழமை உணர்வை காண்பிக்க வேண்டும். இஸ்ரேலின் சுதந்திர தினம், பாலஸ்தீனர்களால் அல் நக்பா தினமாக நினைவுகூரப் படும் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பாலஸ்தீன கிறிஸ்தவர்கள், யூத ஆயுதக் குழுக்களால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட உண்மைகள் தெரிந்தாலும், மேலைத்தேய கிறிஸ்தவ மேட்டுக்குடி இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது எதற்காக? அவர்களைப் பொறுத்த வரையில், “ஐரோப்பிய வெள்ளை இனத்தவர் மட்டுமே கிறிஸ்தவராக இருக்க முடியும்”, என்ற இனவாத சிந்தனை கொண்டவர்கள். பாலஸ்தீன கிறிஸ்தவ சகோதரர்களுடன், தமிழ் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள உணர்வுத் தோழமை, வெள்ளையின மேலாதிக்கத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment