மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை.
பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி
மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா
மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகியவை
மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச்
செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை
காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
* அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை,
கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு,
சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை
தீரும்.
* அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
* முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு,
சர்க்கரைக்வள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5
மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த
தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
* அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு
இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி
நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி
ஆகியவை தீரும்.
* அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு
எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக
உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு,
இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
* அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
* அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.
No comments:
Post a Comment