Tuesday 4 June 2013

தூக்கத்தை அறிய ஒரு இணையதளம்.



 
தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்.ஆனால் நாம் ஏன் தூங்கிறோம் என்று தெரியுமா?தூக்கம் நமக்கு ஏன் அவசியம் தெரியுமா?
இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் என்றால் ‘ஸ்லீப் பார் கிட்ஸ்’இணையதளம் பக்கம் போய் பார்க்கலாம்.
தூங்குவது மிகவும் முக்கியமானது என்று சொல்லும் இந்த தளம் தூக்கம் தொடர்பான விஷயங்களை சிறுவர்களுக்கு புரிய வைப்பதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.
சின்ன பூச்சி முதல் பெரிய திமிங்கிலம் வரை எல்லா உயிரினங்களும் தூங்குகின்றன ,ஒரு சில விலங்குகள் தினமும் 20 மணி நேரம் கூட தூங்குகின்றன என்று சொல்லும் இந்த தளம் நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தூக்கம் அவசியம் என்கிறது.
இந்த அறிமுக குறிப்புகளோடு தூக்கம் பற்றி அறிந்து கொள்ள வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் தூக்கம் பற்றி வரிசையாக கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை தருகிறது.
நாம் ஏன் தூங்கிறோம்? என்பது தான் முதல் கேள்வி!.
படித்ததை நினைவில் வைத்து கொள்ளவும்,பாடத்தில் கவனம் செலுத்தவும்,பிரச்ச்னைகளுக்கு தீர்வு கண்டு புதியவை பற்றி யோசிக்கவும் மூளைக்கு ஓய்வு தேவை என்பதாலும்,தசைகளும் எலும்புகளும் வளரவும் அவற்றின் காயங்கள் ஆறவும் உடல் ஆரோக்கியத்தோடு இருந்து உடல்நலக்குறைவை எதிர் கொள்ளவும் உடலுக்கு ஓய்வு தேவை என்பதாலும் தூங்குகிறோம் என்று இந்த கேள்விக்கு பாயின்ட் பாயின்டாக பதில் அளிக்கிற‌து.
அடுத்த கேள்வி,தூக்கத்தின் போது என்ன நடக்கிறது?
இதற்கு முதலில் தூக்கத்தின் சுழற்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது.ஆம் தூக்கம் என்ப‌து ஐந்து கட்டங்க‌ளை கொண்டதாக இருக்கிறது.ஒவ்வொரு கட்டமும் 90 நிமிடங்கள் கொண்டது.
முதல் இரண்டு கட்டத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆழமான தூக்கமாக அது இருப்பதில்லை.மூன்றாவது மற்றும் நான்காவது கட்டத்தில் ஆழமான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம்.இதயத்துடிப்பும் சுவாசமும் சீராகி உடலும் ஓய்வில் ஆழ்கிறது.
ஐந்தாவது கட்டத்தில் மூளை விழித்து கொண்டு கணவுகள் வருகின்றன.
இந்த சுழற்சியானது ஒவ்வொரு முறை தூங்கும் போதும் ஐந்து அல்லது ஆறு முறை மீண்டும் மீண்டும் நிகழ்கின்ற‌ன.
எல்லாம் சரி நாம் ஏன் இரவில் தூங்கிறோம்?இந்த கேள்விக்கும் இதே பகுதியில் பதில் இருக்கிறது!
ஒளி தான் எப்போது தூங்க வேண்டும் எப்போது விழித்திருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.காலையில் கண் விழித்ததும் சூரிய ஒளி விழிக்க வேண்டிய நேரம் என்பதை மூளைக்கு உணர்த்தி விடுகிறது.பின்னர் பகல் மாறி இரவு வரும் போது மூளையில் மெலாடோனின் என்னும் ரசாயனம் சுரந்து கண்களை தூக்கம் தவழச்செய்கிற‌து.
சிறுவர்களை பொறுத்த வரை பத்து முதல் பதினோறு மணி நேரம் தூக்கம் தேவை என்கின்றனர்.அப்போது தான் பள்ளியில் பாடத்தில் கவனம் செலுத்த முடியும்.ஆரோக்கியமாக இருக்க முடியும்.புதிதாக‌ யோசிக்க முடியும்.இல்லை என்றால் படித்ததெல்லாம் மறந்து போகும்.சரியாக முடிவெடுக்க முடியாது,குழப்பமாக இருக்கும்.சொன்னதை கேட்க முடியாது.
இப்படி தூக்கத்தின் அவசியத்தை சொல்லும் இந்த தளம் நீங்கள் சரியாக தூங்குகீறிர்களா என்று அறிந்து கொள்வதற்காக தூக்கத்திற்கான டைரியை உருவாக்கி கொள்ளவும் உதவுகிறது.தூக்கத்தை கணக்கிடுவதற்கான கால்குலேட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படியே நன்றாக தூங்குவதற்கான வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.தூங்க முடியாமல் தவித்தால் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ள‌ன.
கனவுகள் இல்லாமல் தூக்கம் உண்டா என்ன?கனவுகள் பற்றிய விளக்கமும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
தூக்கம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் இந்த தளம் தூக்கம் தொடர்பான புதிர்களும் விளையாட்டுகளும் இருக்கின்ற‌ன.
ஆக இந்த தளத்தின் மூலமாக தூக்கத்தை நன்றாக புரிந்து கொண்டு பிரிஸ்க்காக இருக்கலாம்.
———
நன்றி: சுட்டி விகடன்

No comments:

Post a Comment