ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக "ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது"என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!
முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.
ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அதே சமயம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!
இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆகவேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.
இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. தடை செய்வதாக இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்தில் "X"குறியிட்டுள்ள இரண்டு வகைகள்தான் :
ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய எத்தகைய சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக எகிப்து நாட்டு 'அல் அஜ்ஹர் பல்கலைகழக'த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்தன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்!ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!
==================
அறியத்தந்த சகோதரி அஸ்மா மற்றும் பரங்கிப்பேட்டை Jamal Maraicayar இவர்களுக்கு சமுதாயம் சார்பாக நன்றி
No comments:
Post a Comment