வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால் நாட்பட்ட வலிகளின் பாதிப்பு அதிகமாகலாம்....
வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.
மூட்டு நோய்களோடு வாழ்தல் பற்றி மேலும் படிக்க இது இணைப்பு.
குடும்பத்தில் ஒருவருக்கு வலி
வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?
உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம்.
உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.
இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும்
- கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.
- அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
- கோபம் வரலாம்,
- எரிச்சல் ஏற்படலாம்,
- கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.
- இவை எதுவும் இல்லையேல் 'இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை' என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.
இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.
நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே
- தொடர்பாடலை குறைக்கிறது.
- கலந்துரையாடுவது விட்டுப் போகிறது.
- இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது.
- இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.
முன்னைய ஆய்வுகள்
குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன்.
- இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது.
- நம்பிக்கை இறுக்கமாகிறது.
- உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.
மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்கினால்
- அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.
- விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும்.
- மன விரக்தியும் ஏற்படலாம்
இந்த ஆய்வு
நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.
உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்மாறாக இருக்கிறது.
- வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மறையான உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது.
- வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.
பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர் என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?
'பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில்
- ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள்.
- ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது
உங்களுக்கான செய்தி என்ன?
இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா மற்றவரில் அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?
நிச்சமாக இல்லை.
- மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும்.
- பரிவு காட்ட வேண்டும்.
- ஆறுதல் சொல்ல வேண்டும்.
- ஒத்தாசை செய்ய வேண்டும்.
அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.
இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.
SOURCE: American Pain Society, news release, December 2011
No comments:
Post a Comment