Thursday 20 October 2011

இறைவனுக்கு உருவம் கற்பித்த டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கண்ணீர்புகை வீச்சு

in

இறைவனுக்கு உருவம் கற்பித்த டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கண்ணீர்புகை வீச்சு


திரையிட்ட கார்ட்டூன் படம் ஒன்றில் முஸ்லிம்கள் வணங்கும் இறைவனுக்கு உருவம் இருப்பதுபோல் கற்பனையாகக் காண்பித்ததால்
துனிஷிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக, ஆயிரக்கணக்கான துனிஷிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம், பேரணி கண்டனர். “இஸ்லாமில் இது மதநிந்தனைக் குற்றமாகும்” என்று அவர்கள் கூறினர்.
தனது வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர், எரிக்க முயன்றனர் என்று சர்ச்சைக்குரிய துனிஷிய தொலைக்காட்சியான நெஸ்மாவின் உரிமையாளர் நபில் கரோயி கூறினார்.
அண்மைக்காலமாக உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கான ‘முதலெழுத்தை’ துனிஷியாவே துணிந்து எழுதியது என்பது குறிக்கத்தக்கது.
இந்நிலையில், புரட்சிக்குப் பிந்தைய துனிஷியாவின் அரசியலமைப்புப் பேரவைக்கு அடுத்தவாரம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
நெஸ்மா என்ற அந்தத் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக துனிஷிய முஸ்லிம்களின் இத்தகைய பேரணி இரண்டாவது முறையாகும் என்று கூறப்படுகிறது.
1979ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியை விளக்கும் வகையிலமைந்த பெர்செபொலிஸ் (Persepolis) என்ற ஓவியப்படத்தில் இறைவன்  ஒரு இளம்பெண்ணுடன் பேசுவது போன்ற காட்சியமைப்பும், இன்னும் பல கற்பனை காட்சியமைப்புகளும் நெஸ்மா திரையிட்ட கார்ட்டூன் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இதனை மதகுருமார்களும், மற்ற முஸ்லிம் மக்களும் கடுமையாக எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கும், பேரணிக்கும் அழைப்பு விடுத்தனர்.
கடந்த வெள்ளியன்று மதியத் தொழுகைக்குப் பின்னர் கூடிய கூட்டம் அமைதியான முறையில் பேரணி கண்டதாகவும், ஆயினும், மத்திய தூனிஸ்ஸில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள இடமருகே, சிலர் அத்துமீற முயன்றனர் என்று காவல்துறை கண்ணீர்புகைக் குண்டுகளைக் கூட்டத்தினர் மீது வீசியது. தொடர்ந்து இருபக்கமும் கல்வீச்சு நடந்துள்ளது.
இதற்கிடையே  தொலைக்காட்சி உரிமையாளர் நபில் கரோயி முழுமனதுடன் மன்னிப்பு கோரியுள்ளார். “ஆர்ப்பாட்டக்காரர்கள் எனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்த நாட்டில் இறைவனையே இழிவுபடுத்த எண்ணுகிறார்கள். ஆளுவோர் மீது சிறிய விமர்சனம் என்றாலும் அடக்குமுறையைக் கையாளுகிறார்கள்” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கூறினார்.
நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் பேரணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment