Monday 26 March 2012

கின்னஸ் சாதனையா? சமூக சோதனையா?

கின்னஸ் சாதனையா? சமூக சோதனையா?






நான் சிறுவனாக இருந்தபோது, கின்னஸ் உலக சாதனை என்பது மிகப்பெரிய விஷயமாக போற்றப்படும். அப்போது, உடல் பலத்திலோ அல்லது மதி நுட்பம் மூலமாகவோ செயற்கரிய சாதனைகளை செய்த வீரர்கள் தங்கள் வீரதீரச்செயல்கள் மூலம் உலக சாதனை நிகழ்த்தி அப்புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
ஆனால், காலப்போக்கில் சுவாரசியம் மற்றும் புத்தக சர்குலேஷன் கூடவேண்டும் என்பதற்காக... நோஞ்சான்கள், சோம்பேறிகள், சாப்பாட்டு ராமன்கள், கயவர்கள், அயோக்கியர்கள், வேலைவெட்டி இல்லாத போழுது போக்கிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் செய்யும் உப்புசப்பில்லாத விஷயங்கள் எல்லாம் உலக சாதனைகள் என்ற பெயரில் அந்த கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறத் துவங்கின.
இவை கின்னஸ் சாதனையாக மக்களிடம் போகும் போது, "ச்சே... என்னடா இது...!? இப்படியாக தன் நேரத்தை, பணத்தை, திறமையை வெட்டியாக வீணாக்கி உள்ளார்களே..." என்று அவர்கள் மீது வெறுப்பையும், பரிதாபத்தையுமே வரச்செய்தன. இதனால் கின்னஸ் சாதனை புத்தகம் தனக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நிஜ வீரர்களிடம் இழந்தது.
ஆனால்... மூடர்களிடம் 'அதில் நாமும் சுலபமாக இடம்பெற்றிடலாமே' என்ற ஆர்வம் அவர்களை எதையும் செய்ய வைத்தது..! அப்படி ஒரு மூடத்தனம்தான் சென்ற வாரம் உலக சாதனையாக போற்றப்பட்டது..! அது என்ன தெரியுமா சகோ..?
"THIS IS MUHAMMAD" என்று ஒரு புத்தகம் கின்னசில் சென்றவாரம் இடம்பிடித்தது..! இப்புத்தகம் 'துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டார்.
அதில், அண்ணல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் (Saudi author and Secretary General of the Complex for Islamic Fiqh Research in Riyadh) என்பவர் எழுதியதாகும். புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மேற்படி உயர்ந்த விஷயங்களினாலா கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது..? அதுதான் இல்லை..! வேறென்ன காரணமாம் சகோ..?
420 பக்கம் கொண்ட இப்புத்தகத்தின்
நீளம் 5 மீட்டர்.
அகலம் 4 மீட்டர்.
ஆக மொத்த எடை... 1500 கிலோ..!
100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு
இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும்
இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டு
ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க
11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!
அதாவது... இதுதான் இன்று உலகிலேயே மிகப்பெரிய... கனமான... விலை அதிகமான புத்தகம்..! இதற்காகத்தான் இது சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது..!
இவ்வளவு பெரிய புத்தகத்தை யாராலும் புரட்டி படிக்க முடியுமா..? முடியாது..? அப்புறம் அதற்கு வேறு என்ன பயன்..? "உலகசாதனை புத்தகம்" என்ற புகழுடன் குவைத்திலிருந்து உலகின் சில நாடுகளுக்கு தொடங்குகின்ற சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இப்புத்தகம் இறுதியாக அபுதாபியில் உள்ள ஷைக் சாயித் கிராண்ட் பள்ளிவாசலில் நிரந்தரமாக பார்வைக்கு வைக்கப்படும்..! தட்ஸ் ஆல் சகோ...!
தற்போது இது கின்னஸ் சாதனை புரிந்திருப்பதால், 'முஹம்மது என்றால் யார்' என்று இந்த புத்தகம் பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் என்று இவ்வளவு பணம் கொட்டி இந்த புத்தகத்தை தயாரித்தவர்கள் தங்கள் நோக்கமாக கூறுவார்களேயானால் அவர்கள் குறித்து வருத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை..!
இஸ்லாம் குறித்து கொஞ்சநஞ்சம் நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட இம்மாதிரியான வெட்டி ஆடம்பர மூடத்தனமான நடவடிக்கைகள் தூர விலக்கி வைக்கவே செய்யும்..!
இறைவன் கொடுத்த கல்வியையும், நேரத்தையும், செல்வத்தையும் இப்படி வெட்டித்தனமாகவும் ஊதாரித்தனமாகவும் யார்க்கும் எவ்வித பயனும் இன்றி செலவிடுபவர்கள், செல்வம் தந்த இறைவனுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்கெல்லாம் மறுமை தண்டனை காத்திருக்கிறது என்பதை மறந்து ஆட்டம் போடுகிறார்கள்..!
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களின் பசியை ஒரு மாத காலத்திற்காவது போக்கி இருந்தார்கள் என்றால் அதுதான் நிஜமான உலக சாதனை.
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து கல்வியோ, வீடோ அல்லது வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான மக்கள் நலப்பணித்திட்டங்களோ அமைத்து மக்களுக்கு அழகான வாழ்வை வாழ வழிவகுத்திருந்தார்கள் என்றால் அது தான் நிரந்தர உலக சாதனை.
'இல்லை.... நான் இந்த புத்தகத்தைத்தான் வெளியிடுவேன்' என்று அடம்பிடிக்கிறீர்களா...? அப்போ...சரி, அதை... 11 திர்ஹாமில் தரமான புத்தகம் ஒன்றாக மொத்தம் ஒரு மில்லியன் புத்தகம் அச்சடித்து, அவற்றை எல்லாம், இஸ்லாம் இன்னும் அறியப்படவேண்டிய நாடுகளில் விநியோகித்து இருந்திருந்தால்... அதைப்படித்து மில்லியனில் ஒரு பதினோரு பேராவது நேர்வழி பெற்று இருந்திருந்தால்... இவைதான் நிலையான சாதனைகள் அல்லவா உங்களுக்கு..?
இறைவன் கொடுத்த செல்வத்தை தவறான வழியில் பயன்படுத்தும் இம்மாதிரியான முஸ்லிம்களை கண்டால் வெறுப்பு தான் வருகின்றது. எந்த அளவுக்கு என்றால்... நரமாமிச மோடி... மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததை அறிந்ததை விட பன்மடங்கு... வெறுப்பு வருகிறது சகோ..!
ஏனெனில், மதநல்லிணக்கத்துக்கு சாவுமணி அடிக்கும் ஒருவர் அதன் மறுமலர்ச்சிக்காக பாடுபடுவது மிகப்பெரிய முரண்நகை அன்றோ..!
இதேபோலத்தான்......
எளிமை, சிக்கனம், பயன்தரும் செய்கை இவற்றை அனுதினமும் போதித்த மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி ஆடம்பரம், பகட்டு, வீண்விரையம், பிறருக்கு பயனற்ற செயல்கள் மூலமாக சொல்கிறார்களாம்..! அட... காலக்கொடுமையே..! இவற்றை எல்லாம் ஒழிக்க அல்லவா வந்தார்கள் நபிகள் நாயகம்..! என்னே ஒரு முரண்நகை..?!
இவர்களுக்கு இறைவனின் எச்சரிக்கை இதுதானோ சகோ..?
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)
இவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றே சொன்ன எச்சரிக்கை, இதோ... !
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)
கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்ற அந்த புத்தகமா நாளை மறுமையில் இவர்களுக்காக வாதாட போகிறது..? செல்வம் எனும் சோதனையில் தோற்காமல் வெல்ல வேண்டுமல்லவா இவர்கள்..! என்று திருந்துவார்கள் இவர்கள்..? சகோ, நாம் இந்த பணக்கார மூடர்கள் நல்லறிவு பெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக..!

No comments:

Post a Comment