பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா ?
பாலஸ்தீனத்தில் உள்ளவர்கள் எல்லாம் தாடி வைத்த, துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் என்கிற கருத்துதான் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டிருக்கிறது. ஹமாûஸயும், ஹிஸ்புல்லாவையும் காட்டி, இவர்களுக்கு ஆட்சிசெய்யும் அளவுக்குப் பக்குவம் போதாது என்கிறது மேற்கத்திய அரசியல், ஆயுத ஆதரவுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல்.
1967-ம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுடன் தங்களது நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் பாலஸ்தீனத்தின் முக்கியக் கோரிக்கை. அல்-அக்சா மசூதி இருக்கும் கிழக்கு ஜெருசலேமைத் தங்களிடமே தந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
இதுபோக, மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை காலி செய்வது, போரால் வெளியேறிய அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது என பல பிரச்னைகள் பாலஸ்தீன அங்கீகாரத்தில் அடங்கியிருக்கின்றன.
யாசர் அராபத் காலத்தில் தன்னிச்சையான விடுதலை அறிவிப்பு வெளியிட்ட பிறகுதான் இந்தப் பிரச்னை சூடு பிடித்தது. இன்றைய கணக்குப்படி இந்தியா உள்பட 126 நாடுகள் பாலஸ்தீனத்தின் இறையாண்மையை அங்கீகரித்திருக்கின்றன.
ஆனாலும் மேற்குக்கரை எல்லைக்குள் கட்டுமானப் பணிகள் நடத்துவதையும், ஜெருசலேம் முழுவதையும் ஆக்கிரமிக்க முயல்வதையும் இஸ்ரேல் நிறுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் போன்ற மேற்கத்திய நாடுகள், பாலஸ்தீனத்துடன் அரசுமுறை உறவுகள் வைத்துக் கொண்டிருந்தாலும், அதன் இறையாண்மையை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதுதான் இஸ்ரேலின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்குக் காரணம்.
ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்ரேலியத் தலைவர்களும் பாலஸ்தீனத் தலைவர்களும் நியூயார்க்கில் நேரடியாகச் சந்தித்துக் கொண்டனர். இந்தப் பிரச்னைக்கு ஓராண்டுக்குள் அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் என்று அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பு போன்றவை உறுதியளித்திருந்தன.
இந்த மாதத்துடன் மேற்கத்திய நாடுகள் தந்த உறுதிமொழிக்கான கெடு முடிகிறது. இனியும் மேற்கத்திய நாடுகளை நம்பிப் பயனில்லை என்று புரிந்துகொண்டதாலோ என்னவோ, முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு அடுத்த ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது. 1988-ல் தன்னிச்சையான விடுதலை அறிவிப்பை வெளியிட்டதுபோல, இப்போது ஐ.நா.விடம் அங்கீகாரம் கோரப் போவதாக பாலஸ்தீனம் அறிவித்திருக்கிறது.
என்னதான் உலகில் பெரும்பான்மை நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தாலும் ஐ.நா.வில் அதற்கு இதுவரை அங்கீகாரம் கிடைக்காததால் எல்லை வரையறுப்பது, ராணுவம் அமைப்பது, ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது, சர்வதேச நீதிமன்றங்களில் முறையிடுவது போன்றவற்றில் சிக்கல்கள் இருக்கின்றன.
பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) வடிவில்தான் ஐ.நா.வில் பாலஸ்தீனத்துக்கு இப்போது பிரநிதித்துவம் இருக்கிறது. இதற்குப் பதிலாக ஒரு நாடு என்கிற அந்தஸ்து தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாலஸ்தீனம் கோரப்போகிறது. வரும் 21-ம் தேதி பொதுச்சபை கூடும்போது இந்த விவகாரத்தை எழுப்ப பாலஸ்தீனம் முடிவு செய்திருக்கிறது. இருந்தாலும் எந்த மாதிரியான உத்தியை பாலஸ்தீனம் முன்னெடுக்கப் போகிறது என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
வழக்கமாக இதுபோன்ற அங்கீகாரம் கோரும் விண்ணப்பங்கள் நேரடியாகப் பாதுகாப்பு அவைக்கு அனுப்பப்படும். பின்னர் இது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். என்றாலும், எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதற்கு 15 உறுப்பு நாடுகளில் குறைந்தது 9 நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இப்படியொரு வாக்கெடுப்பு நடந்தால், அதை எதிர்த்து ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
அதேநேரத்தில் பொதுச் சபையில் நேரடியாக வாக்கெடுப்பு நடத்தும்படி தீர்மானம் கொண்டுவரப்பட்டால், பாலஸ்தீனத்துக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 193 உறுப்பு நாடுகளில் 122 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், தங்களால் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்று பாலஸ்தீனம் கூறி வருகிறது. ஒருவேளை அதுபோல், 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய தார்மிக நிர்பந்தம் பாதுகாப்பு அவைக்கு ஏற்படும்.
அங்கீகாரக் கோரிக்கை ஐ.நா.வில் விவாதிக்கப்படுவதே மேலை நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பல்வேறு உண்மைகள் இந்த விவாதங்களின் மூலம் வெளிவரும் என்பதால் இப்படியொரு விவாதம் நடைபெறுவதையே தடுத்துவிட முயற்சிகள் நடந்து வருகின்றன.
பெரும்பான்மையான நாடுகள் பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்கும்போது, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டிய தர்மசங்கடமான நிலை அமெரிக்காவுக்கு ஏற்படும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வந்தால், அது அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கைத் தகர்த்துவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மேலை நாடுகளின் செல்லப் பிள்ளையாக இருந்துவரும் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படும். அந்த வகையில் அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாலஸ்தீனத்துக்கு வெற்றி என்பதுதான் உண்மை.
சுற்றியுள்ள எல்லா நாடுகளிலும் மக்கள் கிளர்ந்தெழுந்து புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, எதுவுமே நடக்காததுபோல பழைய பல்லவியையே தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பதை சொந்த மக்களேகூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை இஸ்ரேலும் புரிந்துகொள்ள வேண்டும்.
44 ஆண்டுகளாக பாதுகாப்பு அச்சுறுத்தலுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இரு பிரிவு மக்களுக்கும் அதுதான் நன்மையைத் தரும். அமெரிக்காவும், பிரிட்டனும் இஸ்ரேலுக்கு உண்மையான நட்பு நாடுகளாக இருந்தால், இதையேதான் வலியுறுத்த வேண்டும். எல்லா நாடுகளின் ஒத்துழைப்புடன் பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் அங்கீகாரம் கிடைக்கட்டும். மத்திய கிழக்குப் புரட்சி முழுமையடையட்டும்.
Source:
புளியங்குடி பூலியன்
Dinamani
புளியங்குடி பூலியன்
Dinamani
No comments:
Post a Comment