Thursday 7 June 2012

வெள்ளி கிரகம் எவ்வாறு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வருகிறது ? எவ்வாறு நிகழ்கிறது இந்த வெள்ளி கிரகணம் ?







சூரிய கிரகணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஏதாவது ஓர் அமாவாசையன்று பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே சந்திரன் வந்து நிற்கும் போது சூரியன் முற்றிலுமாக அல்லது அரைகுறையாக் மறைக்கப்படுகிறது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே வெள்ளி கிரகமும் வந்து நிற்கலாம். வெள்ளி கிரகம் அப்படி குறுக்கே வந்து நின்றால் சூரியனின் ஒளித் தட்டு மறைக்கப்படுவதில்லை.






 மாறாக சூரியனின் ஒளித்தட்டில் சிறிய கருப்புப் பொட்டு தெரியும். அதுவே வெள்ளி கிரகம். நாளை (ஜூன் 6) காலையில் சூரியன் உதிக்கும்போதே இப்படியான கருப்புப் பொட்டுடன் காணப்படும். தொடர்ந்து சூரியனைக் கவனித்துக் கொண்டிருந்தால் இந்தக் கருப்புப் பொட்டு இடது புறத்திலிருந்து வலது புறமாக நகர்ந்து செல்வதும் தெரியும். சுமார் நாலரை மணி நேரம் இது நீடிக்கும். சென்னை நகரை வைத்துச் சொல்வதானால் இது காலை 10 மணி 19 நிமிஷம் வரை நீடிக்கும். அதன் பிறகு வெள்ளி கிரகம் சூரியனின் ஒளித் தட்டிலிருந்து அகன்று விடும் வெறும் கண்ணால் சூரியனைக் காண முற்பட்டால் கண் பார்வை பாதிக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது.

ஆகவே இதற்கென உள்ள கருப்புக் கண்ணாடியால் மட்டுமே பார்க்க வேண்டும். பூரண சூரிய கிரகணத்தன்று சந்திரன் முற்றிலுமாக சூரியனை மறைப்பதுபோல வெள்ளி கிரகம் ஏன் சூரியனை முற்றிலுமாக மறைப்பதில்லை என்று கேட்கலாம். சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ பூமியிலிருந்து சுமார் 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவேதான் அது சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைப்பதில்லை.








நீங்கள் டிவி பார்க்கும்போது உங்கள் ஆள்காட்டி விரலை புருவம் மீது படியும் வகையில் கண்ணுக்கு அருகே வைத்துக் கொள்ளுங்கள். உங்களது விரல் டிவி திரையை முற்றிலுமாக மறைக்கும். ஆனால், அடுத்து நீங்கள் கையை நன்கு நீட்டி வைத்துக்கொண்டால் உங்கள் ஆள்காட்டி விரல் டிவி திரையை மறைக்காது. டிவி திரையின் பின்னணியில் உங்கள் ஆள்காட்டி விரல் கருப்பாகத் தெரியும். அதேபோன்று தான் சூரியனை வெள்ளி கிரகம் முற்றிலுமாக மறைப்பதில்லை. சொல்லப்போனால் சந்திரனைவிட வெள்ளி கிரகம் மிகப் பெரியது. அது கிட்டத்தட்ட பூமி அளவுக்குப் பெரியது. சந்திரனைவிட மிகத் தொலைவில் இருப்பதால் அது கரும் பொட்டு அளவுக்குத்தான் தெரிகிறது.


சூரிய ஒளித்தட்டில் வெள்ளி கிரகம் நகருவதை வைத்து சூரியன் மீது வெள்ளி கிரகம் ஒட்டிக்கொண்டு வழுக்கிச் செல்வதாகக் கருதி விடக்கூடாது. வெள்ளி கிரகம் சூரிய ஒளித்தட்டில் கருப்பாகத் தெரிகின்ற நேரத்தில் சூரியன் வெள்ளி கிரகத்தின் பின்னால் சுமார் 11 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும். புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டால் சூரியனை ஒன்பது கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சுற்றுப்பாதை உண்டு. சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் கிரகம். அதாவது சூரியனைச் சுற்றி அமைந்த முதல் வட்டத்தில் புதன் கிரகம் உள்ளது. இரண்டாவது வட்டத்தில் வெள்ளி கிரகம் (இதற்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் வெள்ளி கிரகத்துக்கு வீனஸ் என்று பெயர்).

மூன்றாவது வட்டத்தில் பூமி அமைந்துள்ளது. வேறு விதமாகச் சொன்னால் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே புதன், கிரகமும், வெள்ளி கிரகமும் அமைந்துள்ளன. புதன், வெள்ளி ஆகிய இரண்டும் பூமியைப் போலவே சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆனால், இந்த இரண்டின் சுற்றுப்பாதைகளும் சம தளத்தில் இல்லை. ஆகவே, இவை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே மிக அரிதாக எப்போதாவதுதான் நேர் குறுக்காக வந்து நிற்கும். உதாரணமாக, வெள்ளி கிரகம் 583 நாள்களுக்கு ஒருமுறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வந்து நிற்கிறது. ஆனால், அப்போது அது சூரியனுக்கு மேலே அல்லது கீழே அமைந்ததாகக் கடந்து சென்று விடுகிறது.


சூரிய ஒளித்தட்டில் கருப்புப் பொட்டாகத் தெரிகின்ற அளவுக்கு நேர் குறுக்காக இருப்பதில்லை. எனினும், 105 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போதுதான் வெள்ளி நேர் குறுக்காக வந்து நின்று சூரிய ஒளித்தட்டில் கரும் பொட்டாகத் தெரிகின்றது. இந்த நிகழ்வை வெள்ளிக் கடப்பு என்று வானவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இப்போதைப்போல வெள்ளிக் கடப்பு நிகழ்ந்தது. அதற்கு எட்டு ஆண்டுகள் கழித்து இப்போது அது மறுபடி நிகழ்கிறது. இதன் பிறகு 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் இது நிகழும். தமிழகத்தில் உள்ளவர்கள் இப்போதைய வெள்ளி கடப்பு நிகழ்வைக் காணத் தவறினால் 243 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


ஏனெனில், அடுத்த தடவை நிகழும் வெள்ளிக் கடப்பு தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளிக் கடப்புதான் தமிழகத்தில் தெரியும். வெள்ளி கிரகத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. வானில் பளீரென்று ஜொலிப்பதில் வெள்ளி கிரகம் முதலிடம் வகிக்கிறது. சில சமயங்களில் இது சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு வானில் ஜொலிக்கும். வேறு சமயங்களில் சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கு வானில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் தோற்றம் அளிக்கும். ஆகவே வெள்ளி கிரகத்துக்கு அது தெரிகின்ற நேரத்தைப் பொருத்து விடி வெள்ளி, அந்தி வெள்ளி என்ற பெயர் உண்டு. கடந்த பல மாதங்களாக வெள்ளி கிரகம் மேற்கு வானில் தெரிந்து வந்தது.


வெள்ளிக் கடப்பு நிகழ்வு கழிந்து ஜூன் மாத மூன்றாவது வாரத்திலிருந்து வெள்ளி கிரகம் கிழக்கு வானில் விடிவெள்ளியாகத் தெரிய ஆரம்பிக்கும். முன்னர் 1761 ஆம் ஆண்டிலும் பின்னர் 1769 ஆம் ஆண்டிலும் நடந்த வெள்ளிக் கடப்பு நிகழ்ச்சிகளுக்கு வரலாற்று மற்றும் அறிவியல் முக்கியத்துவம் உண்டு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என்ன என்பது அறியப்படாத காலம் அது. ஆகவே, அப்போது இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல வானவியல் நிபுணரான எட்மண்ட் ஹாலி ஒரு திட்டத்தைக் கூறினார். 1761 ஆம் ஆண்டு மற்றும் 1769 ஆம் ஆண்டு வெள்ளிக் கடப்பை உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஒரே சமயத்தில் ஆராய வேண்டும். வெள்ளி கிரகம் சூரிய ஒளித்தட்டைத் தொடுகின்ற நேரத்தையும் ஒளித்தட்டிலிருந்து விலகுகின்ற நேரத்தையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். இத்தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்தால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு விடலாம் என்று அவர் கூறினார்.

எட்மண்ட் ஹாலி 1742 இல் காலமாகி விட்டார் என்றாலும் அவர் கூறிய திட்டத்தின்படி 1761 ஆம் ஆண்டில் பல நிபுணர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வெள்ளிக் கடப்பை ஆராய்ந்தனர். அந்தத் தடவையில் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. இரண்டாம் தடவை அதாவது 1769 ஆம் ஆண்டில் இதேபோல நிபுணர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சேகரித்த தகவல்களை வைத்துக் கணக்கிட்டபோது பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 93 மிலியன் மைல்களிலிருந்து 97 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று உத்தேசமாகத் தெரிய வந்தது. அதுவரை சூரியனுக்குள்ள தூரம் 55 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டு வந்தது. நவீன காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி சூரியன் சுமார் 92.96 மில்லியன் மைல் தொலைவில் (150 மில்லியன் கிலோ மீட்டர்) உள்ளது. எட்மண்ட் ஹாலியின் திட்டப்படி வெள்ளிக் கடப்பை உலகின் பல்வேறு பகுதிகளிருந்து ஆராயச் சென்றவர்களின் அனுபவம் வெவ்வேறாக இருந்தது. கில்லாமே டி ஜெண்டில் என்ற பிரெஞ்சு நிபுணரின் அனுபவம் துயரம் நிறைந்தது.

வெள்ளிக் கடப்பை பாண்டிச்சேரியில் பதிவு செய்ய விரும்பிய அவர் 1760 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிலிருந்து பாண்டிச்சேரி நோக்கிக் கிளம்பினார். அப்போது இந்தியாவில் காலுன்றுவதில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடும் போட்டா போட்டி இருந்தது. இந்தியாவில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த சண்டைகளில் பாண்டிச்சேரி அடிக்கடி கைமாறியது. ஜெண்டில் பிரான்சிலிருந்து கிளம்பியபோது பாண்டிச்சேரி பிரான்ஸ் வசம் இருந்தது. ஆனால், அவர் பல மாத கப்பல் பயணத்துக்குப் பிறகு பாண்டிச்சேரியை நெருங்கியபோது பாண்டிச்சேரி இங்கிலாந்தின் படைகள் வசமாகிவிட்டிருந்தது. ஆகவே, பிரிட்டிஷார் அவரை பாண்டிச்சேரியில் நுழைய அனுமதிக்கவில்லை.

வேறு வழியின்றி அவர் அங்கிருந்து கிளம்பினார். 1761 ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக் கடப்பு நிகழ்ந்தபோது கப்பலிலிருந்து அதைக் கவனித்து விவரம் சேகரித்தார். ஆனால், கப்பலின் ஆட்டம் காரணமாகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியவில்லை. அடுத்த வெள்ளிக் கடப்புக்கு இன்னும் எட்டு வருடங்கள்தானே இருக்கிறது. எதற்கு இப்போது நாடு திரும்ப வேண்டும் என்று கருதிய ஜெண்டில் ஆப்பிரிக்க கடல் ஓரமாக பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான பகுதிக்குச் சென்று அங்கு தங்கிவிட்டு 1768 மார்ச் மாதம் மறுபடி பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தார். இந்தத் தடவை அது பிரான்ஸ் வசம் இருந்தது. அவர் வானை ஆராய பாண்டிச்சேரியில் சிறிய ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை நிறுவினார். 1769 ஜூன் 4 ஆம் தேதி வெள்ளிக் கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அவர் ஆவலாகக் காத்திருந்தார்.

அந்த நாளும் வந்தது. ஆனால், பெருத்த ஏமாற்றம். வானை மேகங்கள் கப்பியிருந்தன. அவரால் சூரியனைக் காண முடியவில்லை. வெள்ளிக் கடப்பையும் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர் போலானார். இறுதியில் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரான்ஸ் திரும்பினார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாது போகவே ஜெண்டில் செத்து விட்டார் என அறிவித்திருந்தனர். பிரெஞ்சு ராயல் அகாடமியில் அவர் வகித்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜெண்டிலின் மனைவி வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். சொந்தக்காரர்கள் அனைவரும் அவரது சொத்தைப் பிரித்துக்கொண்டு விட்டனர். ஜெண்டில் மனம் இடிந்தவரானார்.

கடைசியில் பிரெஞ்சு மன்னரிடம் முறையிட்டதில் சொத்துகளை மீட்க முடிந்தது. மீண்டும் பதவி கிடைத்தது. அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கை நடத்தலானார். நாளை காலை உங்கள் ஊரில் வானம் மேக மூட்டமாக இல்லாமல் இருந்தால்தான் உங்களால் வெள்ளிக் கடப்பைக் காண இயலும். 105 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போதுதான் வெள்ளி நேர் குறுக்காக வந்து நின்று சூரிய ஒளித்தட்டில் கரும் பொட்டாகத் தெரிகின்றது. இந்த நிகழ்வை வெள்ளிக் கடப்பு என்று வானவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்

No comments:

Post a Comment