Sunday 11 September 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 11)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 11) 



தொடர் ..... 11

அப்போது நாலைந்து கல்லூரிப் பெண்கள் அங்கு வந்தனர்.

அவர்களிடம் சென்று எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். முதலில் அவர்கள் மெல்ல தயங்கினாலும் பிறகு சகஜமாக பேசினார்கள்.

எங்களுக்கு சுதந்திரம் தேவை. ஆனால் அதற்கு ரத்தத்தையும் தாண்டி நிறைய விலை கொடுக்க வேண்டிவரும் என அஞ்சுகிறோம் என்று முதலில் ஒரு மாணவி கருத்து கூறினார்.

அருகிலிருந்த இன்னொரு மாணவி, நிறைய இளைஞர்களை எங்களின் போராட்டத்தில் இழந்து விட்டோம். இனியும் அப்படி உயிர்களை இழக்க விரும்பவில்லை. இங்கு தீவிரவாதிகள் யாருமில்லை. இந்திய ராணுவம்தான் தீவிரவாதத்தை உருவாக்குகிறது என பொட்டில் அறைந்தது போல கூறினார்கள். இந்திய ராணுவம் காஷ்மீர் பெண்களை கற்பழிக்கிறது. என்ற கோபத்தையும் அம்மாணவிகள் வெளிப்படுத்தினர்.

அந்த மாணவிகள் தங்களது முதலாம் ஆண்டு படிப்பு வீணாகிவிட்டது, பெரும்பாலான நாட்கள் கல்லூரி திறக்கவே இல்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

இந்திய மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டோம். ஒரே குரலில் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றனர்.

காஷ்மீர் அரசின் செயல்பாடு குறித்து கேட்டோம். அதில் ஒரு மாணவி உமர் அப்துல்லாவை பாராட்டினார். மற்ற மாணவிகள் இது அவருடைய கருத்து என்று கூறி தங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றனர்.

ஸ்ரீநகர் அரசு கலைக் கல்லூரியில் B.A. இரண்டாமாண்டு படிப்பதாக சொன்ன அவர்கள் தங்கள் பெயரை கூறவும், படம் எடுக்கவும் பயந்தார்கள்.

எங்களுடைய பேட்டி வரும். அப்போது நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம் என்று ஒரு மாணவி காஷ்மீரின் பீதி நிலையை எடுத்துரைத்தார்.

அதன் பிறகு Green Park சென்றோம். முந்தைய பூங்காவைப் போலவே அனைத்தையும் கொண்டதாக இருந்தது. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். ஸ்ரீநகரின் கிழக்கு எல்லையாக இருக்கும் அந்த ஒரே மலைத் தொடரின் வெவ்வேறு பகுதிகளில்தான் சற்று இடைவெளி விட்டு அனைத்து பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பூங்காக்கள் யாவும் ஒரு சிறிய மண்டபம், அதன் வழியாக மலையிலிருந்து துள்ளி வரும் நதி நீரை அரவணைக்கும் சிறிய கால்வாய் என இவ்விரண்டையும் கொண்டதாக இருக்கிறது.

நாங்கள் Shalimar Mughal Garden சென்றபோது அங்கு பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுள் 4வது படிக்கும் உமர் என்ற மாணவனிடம் பேச்சுக் கொடுத்தோம்.

இங்கு சுவர்களில் எல்லாம் Go India Go  என எழுதியிருக்கிறார்களே... என்றோம். ஆமாம் எங்களுக்கு Freedomவேண்டும் என்றான்.

நாங்கள் மேலும் பேச்சுக் கொடுத்தபோது, அவன் விளையாட்டில் ஆர்வம் காட்டியபடியே ஓடிவிட்டான். சிறுவர்களிடமும் கூட சுதந்திரம் வேண்டும் என்ற அரசியல் உணர்வு தலைதூக்கி இருப்பதை உணர்ந்துகொண்டோம். காஷ்மீரின் வரலாறும், அங்கு நடைபெறும் சமகால நிகழ்வுகளும், சுதந்திரம் பற்றிய செய்திகளும் காஷ்மீரிகளின் குடும்பங்களில் அன்றாட உரையாடல்களாக இருக்கின்றன. அதனுடைய விளைவு தான் சிறுவர்களிடமும் பிரதிபலிக்கிறது. அங்கு பள்ளிகூட ஆசிரியர்களும் இதை போதிக்கிறார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. காரணம் உண்மைகளை தடுக்க இது வரை எந்த ஆயுதங்களும் தயாரிக்கபடவில்லை தானே...

(இன்ஷா அல்லாஹ் பணயங்கள் தொடரும்...)


பூங்காவின் அழகிய தோற்றம்...
சுவர்களில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள்...
கல்லூரி மாணவிகளுடன் பேட்டி...
பள்ளிகூட மாணவர்களுடன் ...

No comments:

Post a Comment