Tuesday 27 September 2011

இந்தியாவிற்கு வந்த சோதனை


இந்தியாவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடுச்செய்து அமெரிக்க காங்கிரசினால் ரிசர்ச் சர்வீஸ்(சி.ஆர்.எஸ்) தயாராக்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விமர்சனங்களை ஊடகங்கள் விவாதத்திற்கு இடமாக்கியுள்ளன.
அமெரிக்க காங்கிரஸின் சுதந்திர ஆய்வு பிரிவான சி.ஆர்.எஸ் அமெரிக்க கொள்கை உருவாக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் நிலைமைகளை குறித்த ஆய்வறிக்கைகளை ஒவ்வொரு மாதமும் சமர்ப்பித்து வருகிறது. அமெரிக்காவின் தூதரக கேபிள்கள்களுக்கு சமமான இவ்வறிக்கை அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை உருவாக்குவதிலும், பல்வேறு நாடுகளுக்கிடையேயான உறவுகளை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கை ஆற்றிவருகிறது.
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட 98 பக்கங்களைக் கொண்ட அறிக்கை தற்பொழுது விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கையில்தான் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியைக் குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமாக நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் சூத்திரதாரியான நரேந்திர மோடிக்கு அமெரிக்கா இதுநாள் வரை விசா அளிக்க மறுத்துவருகிறது. மதச் சுதந்திரத்திற்கு எதிரான கொடூரமான அத்துமீறலுக்கு எதிராகத்தான் இத்தடையை அமெரிக்கா மோடிக்கு விதித்துள்ளது. அமெரிக்காவின் இத்தகைய தீண்டாமை பட்டியலிருந்து மோடியின் பெயர் விரைவில் நீக்கப்படும் என்பதன் முதல் அறிகுறியாக சி.ஆர்.எஸ்ஸின் அறிக்கையை தேசிய ஊடகங்கள் கோலாகலப்படுத்தி வருகின்றன.
2014-ஆம் ஆண்டு இந்திய மக்களவை தேர்தலில் முக்கிய போட்டி ராகுல்-மோடிக்கு இடையே நடைபெறும் என சி.ஆர்.எஸ் முன்னறிவிப்புச் செய்துள்ளதாக ஊடகங்களை பறையடிக்கின்றன.
குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்கில் இந்தியாவின் உச்சநீதிமன்ற அண்மையில் அளித்துள்ள தீர்ப்பை தங்களுக்கு அனுகூலமாக மாற்றி மோடியும், பா.ஜ.கவும் பரப்புரைச் செய்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அமெரிக்காவின் அறிக்கை விவாதமாக்கப்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃபிரியின் மனைவி ஸாக்கியா ஜாப்ஃரி தொடர்ந்த வழக்கில் மோடியை வழக்கில் சேர்ப்பதும், விசாரணை நடத்துவதும் விசாரணை நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வரும் காரியம் என்பதால் அவர்கள்தாம் தீர்மானிக்கவேண்டும் எனவும், அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை தனக்கு வழங்கப்பட்ட ‘பரிசுத்தர்’ பட்டம்போல கொண்டாடிய மோடி தனது ‘பரிசுத்தத்தை(?)’ மேலும் நிரூபிப்பதற்காக 3 நாட்கள் உண்ணாவிரதம்(?) இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையேதான் ஊடகங்கள் அமெரிக்காவின் சி.ஆர்.எஸ் அறிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி ஃபெடரேசன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட் வெளியிட்டுள்ள இந்த ஆவணம் இவ்வளவு நாட்களாக விவாதத்திற்கு காரணாமாகாமல் தற்பொழுது மோடி ‘உண்ணாவிரதம்(?)’ இருக்கும் முகூர்த்தத்தில் எவ்வாறு வெளியே குதித்தது என்பது மர்மமாகவே உள்ளது.
குஜராத்தில் முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்ததன் மூலம் சர்வதேச அளவில் இமேஜை இழந்து நிற்கும் மோடியை தேசிய அரசியலின் நடுத்தளத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை தேசிய ஊடகங்கள் துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன.
கடந்த தேர்தலில் வளர்ச்சியின்  முடிசூடா மன்னனாக மோடியை உயர்த்திப்பிடித்த தேசிய ஊடகங்கள் அவரது சொந்த தொகுதியான மணிநகரை நோக்கி திரும்பிக்கூட பார்க்கவில்லை என்று அன்றே குற்றச்சாட்டு எழுந்தது. பாரம்பரிய தொழில் வளர்ச்சியில் மேலும் தனியார், வெளிநாட்டு முதலீடுகளை இழுத்து வருவது மட்டும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியின் நிபந்தனையாக மாறிவிடாது. அனைத்து பிரிவு குடிமக்களின் பாதுகாப்பும், சட்டம்-ஒழுங்கும் அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாட்டு நலனின் தற்கால அளவுகோலிலும் முதல் முன்னுரிமை இவற்றுக்குத்தான் அளிக்கப்படும். ஆகையால்தான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்து மதத்தைச் சார்ந்த சில பிரிவினர் பாதுகாப்பற்று வாழும் குஜராத்தில் அதன் முதல்வரான மோடி அமெரிக்காவின் தீண்டாமை பட்டியலில் இடம்பிடித்தார். சர்வதேச அளவில் பரிசுத்தவானாக மாறுவதற்கான சான்றிதழை அமெரிக்காவிடம் பெறவேண்டும் என்பதால் அந்நாட்டின் தீண்டாமை பட்டியலில் தான் இடம்பிடித்தது மோடியின் நிம்மதியை இழக்கச் செய்தது. இவ்வாறு ‘முஸ்லிம் இனப்படுகொலையின்’ அசுத்தத்தை களைய மோடி ‘வளர்ச்சியின் நாயகன்(?)’ வேடத்தை புனைந்தார். அதன் ஒரு பாகமாகத்தான் மோடியின் ‘வளர்ச்சி கொள்கை(?)’ என அமெரிக்காவின் சி.ஆர்.எஸ் அறிக்கையும் கூறுகிறது.
’மோடியை பிரதமராக்கியே தீருவோம்’ என்பதுதான் சில முதலாளித்துவ குத்தகை முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் ஊடகங்களின் பிடிவாதமாகும். துவேச அரசியலுக்கு குஜராத்திற்கு வெளியே மார்க்கெட் இல்லை என்பதால் கடந்த தேர்தலில் மோடியின் செல்வாக்கு எடுபடாமல் போனது.
மோடியை மேற்கு இந்தியாவின் ஸ்டாராக பிரச்சாரம் செய்தபிறகும் அருகிலுள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கூட பா.ஜ.கவுக்கு ஆதாயம் கிடைக்கவில்லை.மராட்டிய மண்ணில் நாங்கள் இருக்கும் வேளையில் மோடி எதற்கு? என பால்தாக்கரேயை தலைவராக கொண்ட சிவசேனா வாதத்தை எழுப்பியது.
தற்பொழுது டெல்லி இந்திரபுரியில் மோடியை பிரதமர் பதவிக்கான ஸ்டாராக மாற்றுவதிலும் அத்வானி, ஜெட்லி, சுஷ்மா போன்ற உள்கட்சி ரோதனைகளின் எதிர்ப்பு கிளம்பவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் மோடியை பிரதமராக்குவதற்கான ‘மிஷனை(?)’ ஏற்றுக்கொண்டுள்ளது சில கார்ப்பரேட் ஊடகங்கள்தாம் என்பதை தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை பார்த்தாலே நமக்கு புரியும். அவைகள்தாம் அமெரிக்காவின் சி.ஆர்.எஸ் அறிக்கையில் மோடிக்குறித்த விமர்சனங்களுக்கு மெருகூட்டி வருகின்றனர்.
இந்தியா அமெரிக்காவின் காலனியாதிக்க கொள்கைக்கு அடிபணிந்துவிட்டதன் நிதர்சனம்தான் உண்மையில் சி.ஆர்.எஸ்ஸின் அறிக்கை.
2004-ஆம் ஆண்டு தீவிரமடைந்த இந்தியா-அமெரிக்க உறவு, அணுசக்தி ஒப்பந்தம்,பத்துவருட பாதுகாப்பு ஒப்பந்தம், விரிவான ராணுவ-வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளின் வாயிலாக பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான உறவாக வளர்ச்சியடைந்துள்ளதன் விபரங்கள் சி.ஆர்.எஸ்ஸின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே அதிகமாக ஆயுதம் இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியதிலும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் நிரந்தரமான இருப்பிற்கு இந்தியா ஒத்துழைப்பதற்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது இவ்வறிக்கை.
ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் அரங்கேற்றத்தையும், இடதுசாரிகளின் வீழ்ச்சி குறித்தும் இவ்வறிக்கை விவரிக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம், ஈரான் எரிவாயு ஒப்பந்தம் ஆகிய விவகாரங்களில் இந்தியா அமெரிக்காவிற்கு அடிபணிந்துவிட்டது என விமர்சித்தவர்களின் கூற்றை உறுதிச்செய்கிறது சி.ஆர்.எஸ் அறிக்கை. அணிசேரா கொள்கையிலிருந்து அமெரிக்காவின் சார்பு நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதற்கும், இந்தியாவை ஆட்சி புரிவது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும் அமெரிக்காவின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கும் உறுதியான ஆவணம்தான் சி.ஆர்.எஸ் அறிக்கை.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோடியைக் குறித்த விமர்சனங்களை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய ஊடகங்கள் யாருக்காகவோ தங்களை பிரதிநிதிகளாக மாற்றி வருகின்றார்கள் என்பதை மட்டுமல்ல இந்திய தேசத்தை ஆக்டோபஸ்களின் கரங்களில் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் விளங்கிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment