Sunday 11 September 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 9)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 9) 


தொடர் ..... 9

பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
ஸ்ரீநகரின் கடை வீதிகளையும், நகர அமைப்பையும, மக்களின் வாழ்க்கை முறைகளையும் காரில் இருந்தவாரே பார்த்து சென்றோம்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 85% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் 90% முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள்.

அவர்களது உடைகள் வட இந்திய மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அணியும் ஆடைகளாகவே உள்ளது.

பெரும்பாலான வீதிகள் சுத்தமாக இருக்கின்றன. கடைகள் பெரும்பாலும் 10 மணிக்கு பிறகே திறக்கப்படுகின்றன. ஆனால், உலக சுற்றுலா நகருக்கேற்ற வகையில் அழகுப்படுத்தப்படாமல் வழக்கமான இந்திய நகர்களைப் போலவே இருக்கிறது. இந்தியாவின் புதுடெல்லி, சண்டிகர், பெங்களூருக்கு அடுத்து சுத்தமான வீதிகள் உள்ள நகர் எனலாம்.

பெரும்பாலான ஆட்டோக்கள் தூய்மையாகவும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்டது போலவும் இருக்கின்றன. குளிரை தாங்கும் வகையில் ஆட்டோக்களில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேருந்துகள்தான் படுமோசமாக இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பாக நம் தமிழகத்தில் ஓடிய பேருந்துகளை விட மோசமாக இருக்கிறது. அதைவிட மோசம் என்னவெனில், அதை அலங்கரிப்பு என்ற பெயரில் பல வண்ணங்களை தீட்டி, அருவெறுப்பான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இது காஷ்மீரில் கோடைக்காலம் என்பதால், மக்கள் இயல்பாக இருந்தார்கள். நாங்கள் எதிர்பார்த்த குளிர் இல்லை.
எங்கள் கார் டிரைவர் காரை, ஜாமியா மஸ்ஜித் அருகே நிறுத்தினார். இது காஷ்மீரிகளுக்கு மிகமிக முக்கியமான பகுதி. பள்ளிவாசலை சுற்றிலும் சிறிய பஜார் இருந்தது.

பிரம்மாண்டமான நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றோம். பெரிய, பெரிய மரங்களை தூண்களாக கொண்டு இப்பள்ளி அமைக்கப்பட்டிருப்பதுதான் அதன் சிறப்பாகும்.
தேவதாரு மரங்களாலான அந்த மரத்தூண்கள் ஒங்வொன்றும் அழகாக செதுக்கப்பட்ட மஞ்சள் வண்ணத்தில் பளீரென காட்சியளிக்கிறது.

42 அடிகளில் உயரமான தூண்கள் முக்கிய பகுதிகளை தூக்கி பிடித்திருக்கின்றன. மற்ற உள் பகுதிகளில் 32 அடி உயர தூண்கள் தூக்கிப்பிடித்திருக்கின்றன.

ஒரே அளவான சுற்றளவில் தூண்கள் இருக்கிறது. மொத்தம் 346 மரத்தூண்கள் இருப்பது உலகிலேயே இம் மஸ்ஜிதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளே சுற்றி வந்தோம். 1,46,000 சதுர அடியில் அமைக்கப்பட்ட இப்பள்ளியில் நான்கு திசைகளிலும் நான்கு டூம்கள் இருக்கின்றன.

இது டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் இருப்பதுபோல் குவி மாடமாக இல்லை. மாறாக, சீன கட்டிட அமைப்பை போல உருவாக்கப்பட்டு அதன் உச்சியில் கூர்மையான மினாராக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேற்பகுதியில் உட்பக்கங்கள் அழகானவை. மரத்தினால் அலங்கார வேலைகள் மிக நுட்பமாக செய்யப்பட்டிருக்கின்றது. பள்ளியில் உட்பகுதி திறந்த வெளியாக இருக்கிறது. ஒளு செய்ய அகழியும் இருக்கிறது.

பள்ளியின் இடபுறத்தில் பெண்கள் தொழுவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கின்றது. ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழும் வகையில் இப்பள்ளி கட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் ரமளானில் பள்ளிக்கு வெளியேயும் கூட்டம் திரளுமாம். சுமார் 1 லட்சம் பேர் வரை மக்கள் தொழுகைக்கு திரள்வார்களாம்.

சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கி.பி.1394ல்  இப்பள்ளி கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வளவு பிரம்மாண்மாக இப்பள்ளியை அவர் கட்டி முடித்திருக்கிறார்.
ஆனால் மூன்று முறை இப்பள்ளி தீப்பற்றி சேதமடைந்திருப்பதாக கல்வெட்டு கூறுகிறது. சுல்தான் அஸ்லன்ஷா 1480ல் ஒரு முறை இப்பள்ளியை புனரமைத்திருக்கிறார்.
பிறகு முகலாய மன்னர் ஜஹாங்கீர் 1620ல் ஒருமுறையும், அவுரங்கஸீப் 1672ல் ஒரு முறையும் புனரமைப்பு செய்திருக்கிறார்கள்.

உலகில் வேறு எங்கும் இல்லாத இப்பள்ளிவாசல் போதிய பராமரிப்பின்றி இருப்பதை, மினாரக்களில் இருக்கும் தகர துண்டுகளும், அழுக்கான கார்பெட்களும் உணர்த்துகின்றன.
ரமளான் மாதம் வருவதால் சில பணியாட்கள் கார்பெட்டுகளை உதறி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். Wakkam Cleaner ஐ பயன்படுத்தும் வசதி கூட அங்கு இல்லை என்பது வருந்தத்தக்கது.

நாங்கள் இப்பள்ளிக்கு வருகை தந்ததில் முக்கியத்துவம் இருக்கிறது. காரணம், இப்பள்ளிவாசல் காஷ்மீரிகளின் தேசிய அடையாளமாகவும், அவர்களின் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு மையமாகவும் திகழ்கிறது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் இப்பள்ளிவாசல் பிரதான மையமாக இருந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதன் விளைவாக கடந்த 600 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதன்முறையாக இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது காஷ்மீரிகளை உணர்வுப்பூர்வமாக பாதித்ததோடு, தங்களின் மத உணர்வுகளிலும் இந்திய அரசு தலையிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். இவ்விஷயத்தில் ராணுவத்தின் மீது மட்டுமின்றி, உமர் அப்துல்லா அரசின் மீதும், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதும் அவர்களுக்கு கோபம் இருக்கிறது.

காஷ்மீரிகளை மேலும் அந்நியப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்துவிட்டது. அந்த பள்ளியில் காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ஹஸ்ரத் பால் பள்ளிக்கு புறப்பட்டோம்.

(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)

பூங்காக்களுடன் கூடிய பள்ளியின் உட்பகுதி...
காஷ்மீர் அரசு ஊழியருடன் பள்ளிவாசலின் தொழுகை பகுதியில்...,

No comments:

Post a Comment