தொடர் ..... 2
நேரடியாக ஜம்மு செல்ல ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆக்ரா வரை மட்டுமே டிக்கெட் கிடைத்தது. ஆக்ராவிலிருந்து ஜம்முவுக்கு அன்று மாலை வேறு ஒரு ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தோம். ஆனால் அது கன்பார்ம் ஆகாமல் இருந்தது.
சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 18 அன்று இரவு 10 மணிக்கு ரயில் புறப்பட்டது. எங்களோடு இப்பயணத்தில் அதே நிகழ்வில் பங்கேற்க வழக்கறிஞர்கள் ஜெய்னுலாபுதீன், வாசுதேவன், புகைப்பட நிபுணர் சந்திரன் ஆகியோரும் வந்தனர்.
எங்கு செல்கிறோம்? உலகில் மிகவும் பதட்டமான பகுதிகளில் ஒன்றான காஷ்மீருக்கல்லவா........ போகிறோம். அடிக்கடி துப்பாக்கி சூடுகள், சில சமயங்கள் குண்டு வெடிப்புகள், அரசுப் படைகளும், ஆயுத குழுக்களும் மோதிக் கொள்ளும் நிகழ்வுகள், யாரையும் சுட்டுக் கொள்ளலாம் என அனுமதி பெற்ற அரசுப் படைகள், காவல் நிலைய மரணங்கள், ஆயுதக் குழுக்களின் துப்பாக்கி சூடுகள், மனித உரிமை மீறல்கள் என சகல அபாயங்களும் நிறைந்த ஒரு பகுதிக்கல்லவா...... பயணிக்கிறோம்!
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கவலைகளும், அறிவுறைகளும் எங்கள் மனதை சூழ்ந்து நிற்க எமது பயணம் புறப்பட்டது.
இரவு முழுக்க ஆந்திராவில் ஓடிய ரயில் காலை நாங்கள் கண்விழித்தபோது மஹாராஷ்டிராவில் ஓடிக் கொண்டிருந்தது. தென்மேற்கு பருவமழைக்காலம் என்பதால் மழையில் நனைந்த வயல்களையும், மழைச் சாரல்களையும் ரசித்துக் கொண்டே சென்றோம்.
இப்பயணத்தில் இந்திய விடுதலை போராட்டத்தின் முதன்மை தலைவர்களுடன் ஒருவரான அபுல்கலாம் ஆசாத் எழுதிய India wins Freedom என்ற நூலை நான் முழுமையாக படிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
எங்களோடு ஆக்ராவுக்கு காலணி வணிகம் தொடர்பாக கொள்முதல் செய்ய மண்ணடியை சேர்ந்த இரு சகோதரர்களும் பயணித்தனர். இரவு மஹ்ரிபுக்கு பிறகு ரயில் மத்திய பிரதேசத்தில் நுழைந்தது. குவாலியர், ஜான்ஸியை தொடர்ந்து உ.பி.க்குள் நள்ளிரவில் பயணம் தொடர்ந்தது. விடியற்காலை பாங்கு சப்தம் கேட்ட அதிகாலையில் ஆக்ராவில் இறங்கினோம்.
(இடையில் ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இக்கட்டுரை முடிந்த பிறகு தனிக்கட்டுரை ஒன்று எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்)
அன்று மாலை எங்களது ஆக்ரா -----------ஜம்மு ரயில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் மாலை 5 மணி ரயிலில் பயணிக்க முடியவில்லை.
மாலை 7 மணியளவில் டெல்லி செல்லும் ஒரு பேருந்தில் நெரிசலில் சிக்கியபடியே ஏறி அமர்ந்தோம். விடியற்காலை 2 1/2 மணியளவில் டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் என்ற பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.
அங்கு நேரடியாக ஜம்மு செல்வதற்கான பேருந்துகள் இந்த நேரத்தில் இல்லையென்றார்கள். பஞ்சாப் மாநிலம் பதான் கோட் என்ற நகருக்கு 3 மணிக்கு ஒரு பேருந்து நின்றது.
அதுதான் பஞ்சாபின் எல்லை. அங்கிருந்து சில கிலோ மீட்டர்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடங்கிவிடும். இரண்டு மணி நேரத்தில் பதான் கோட்டிலிருந்து இரண்டு மணி நேரத்தில் ஜம்மு நகருக்கு சென்றுவிடலாம் என்றார்கள். ஏற்கனவே ஆக்ராவிலிருந்து மோசமான பேருந்தில் வந்ததால் மிகுந்த களைப்புற்றிருந்தோம். இப்போது பதான் கோட் செல்லும் பேருந்தை பார்த்தால் 10,15 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த பேருந்துகளின் ஞாபகம்தான் வந்தது.
வேறு வழியின்றி ஏறி உட்கார்ந்தோம். படு வேகமாக வண்டி புறப்பட்டது. தமிழகமே ஆவலோடு கவனித்துக் கொண்டிருக்கும் திஹார் சிறையில் வழியே புறப்பட்டு ஹிமாச்சல் பிரதேசத்திற்குள் வண்டி நுழைந்தது. ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளை கடந்து காலையில் பஞ்சாபுக்குள் நுழைந்தோம்.
இமயமலையில் உருவாகும் வற்றாத ஐந்து நதிகள் பாய்வதால் இதற்கு பஞ்சாப் என்று பெயர் வந்ததது. வழியெங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மழை காலங்களில் பசுமையாக இருப்பது போன்ற வயல்களின் காட்சிகளை இங்கு பார்த்தோம். எங்கும் பரவலாக சீக்கிய மக்கள். ஆங்காங்கே நதிகள் ஓடும் கால்வாய்கள்! விவசாயம் மட்டுமல்ல, தொழில்களும் நிறைந்த மாநிலம் அது.
இடையில் படையெடுப்பது போல பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்த சட்லெஜ் நதியை பார்த்தோம். இவையெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்தவை.
ரயிலில் வந்திருந்தால் முக்கிய நகரங்களையும், முக்கிய காட்சிகளையும் பார்த்திருக்க முடியாது. காரணம் பெரும்பாலும் ரயில்கள் ஊருக்கு வெளியேதான் ஓடும்!
சிறிது நேரத்தில் புகழ்பெற்ற லுதியானா, நகரை கடந்தோம். தையல் மெஷின்கள் தயாரிப்பு, டிராக்டர்கள் தயாரிப்பு, ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு என லூதியானா பஞ்சாபிகள் வர்த்தக நகரங்களில் ஒன்றாகும்.
1980 களின் தொடக்கத்தில் சீக்கியர்கள் பஞ்சாபை தனிநாடாக்கி சுதந்திர காலிஸ்தான் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தினர். அப்போது எண்ணற்ற சீக்கிய இளைஞர்கள் ரத்தம் சிந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.
காலை 11 மணிவாக்கில் ஜலந்தர் நதரின் முக்கியப் பேருந்து நிலையத்திற்கு வந்தோம். ‘தியாகிகளின் தலைவர்’ பகத்சிங் பேருந்து நிலையம் என அதற்கு பெரிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டுக்கு மருதநாயகம், கட்டபொம்மன் போல பஞ்சாபியர்களின் பெருமைக்குரிய விடுதலை நெருப்பு பகத்சிங் என்பதை அனைவரும் அறிவோம்.
மதியம் 4 மணி அளவில் பதான்கோட் வந்து சேர்ந்தோம். அங்கேயே எங்களது பரபரப்பு தொடங்கியது. நிறைய ராணுவ வாகனங்கள். ராணுவ வீரர்கள் என இந்தியாவின் தலைப்பகுதிக்குரிய பாதுகாப்பு அம்சங்கள் தெரிந்தது.
சற்று நேரத்தில் அதே போன்ற இன்னொரு பழைய பேருந்து ஜம்மு செல்ல நின்றுக் கொண்டிருந்தது. ஆக்ராவில் தொடங்கிய ‘டப்பா’ பேருந்து பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஓய்வே இல்லை. எல்லோரும் சோர்ந்து விட்டோம்.
எங்களோடு ரயிலில் ஹாரூன் வரவில்லை. காரணம் அவர் வணிக நிமித்தமாக முன் கூட்டியே புறப்பட்டு குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து டெல்லி வழியாக ஜம்முவுக்கு விமானத்தில் வருவதாக சொல்லியிருந்தார். அதன் படியே ஜம்முவுக்கு அப்போதுதான் வந்து இறங்கி, தான் ஜம்மு பேருந்து நிலையத்தில் நிற்பதாகவும் இங்கு Postpaid செல்போன்கள் மட்டுமே இயங்குவதாக கூறி தனது Prepaid செல்போன்கள் இயங்கவில்லை என்றார்.
பிறகு ஜம்மு பேருந்து நிலையத்தில் ஒரு பெட்ரோல் அருகில் நிற்பதாகவும், அந்த இடத்திற்கு வந்துவிடும்படி கேட்டுக் கொண்டார்.
எங்களுக்கு சின்ன கவலை தொற்றியது. புரியாத, பரபரப்பான ஒரு நகரில் செல்போன் தொடர்பற்ற நிலையில் அவரை எங்குபோய் தேடுவது என யோசித்தோம்.
மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஜம்மு போய் சேர்ந்ததும், அவரை அதே இடத்திற்கு சென்று சந்தித்துக் கொண்டோம்.
(பயணம் தொடரும்...)
காஷ்மீரில் பேருந்துகளின் தோற்றம்...
No comments:
Post a Comment