Monday, 22 August 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 4)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 4)

முகநூல் தொடர் ..... 4



சினாப் நதி துள்ளிக்குதித்தோடும் அமைதியான தோடா நகர் எங்களுக்கு நல்ல மனநிலையைக் கொடுத்தது. அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், ஒரு சின்ன பேருந்துநிலையம், அதிகபட்சம் 100கடைகள். இதுதான் தோடா நகரம். இது ஒரு மாவட்டத் தலைநகரம் என்பதை நம்ப முடியவில்லை. பஜாரில் ஒரு ஜாமியா மஸ்ஜித் இருந்தது. மேலும் இரு மஸ்ஜிதுகளும், கோயில்களும் இருந்தன.



முதல் பாதி நாள் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போய்விட்டது. மதியத்திலிருந்து நிகழ்ச்சியில் இணைந்து கொண்டோம். முதல்நாள் கருத்தரங்கில் காஷ்மீரிகளின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. ராணுவத்தாலும், உளவு அமைப்புகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் காயங்களை வார்த்தைகளாக கொட்டினார்கள்.



நாடெங்கிலிருந்தும் வந்திருந்த அரசு சாரா அமைப்பினர் (NGO) தங்களது அறிக்கைகளையும், செயல்பாடுகளையும் சமர்ப்பித்தனர். சிலர் தனியாகவும், குழுக்களாகவும் வந்து உணர்வுப்பூர்வமான பாடல்களைப் பாடினர்.



காஷ்மீரிகள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கணவனை இழந்த மனைவி, தந்தையை பறிகொடுத்த பிள்ளைகள், காணாமல் போன பிள்ளைகளுக்காக காத்திருக்கும் பெற்றோர்கள் என அரசு படைகளால் இன்னல்களுக்கு ஆளாகியோரின் துயரங்கள் கண்ணீரை வரவழைத்தது. அங்கு ஆங்கிலம், இந்தி, உருது, காஷ்மீரி மொழிகளில் ஒவ்வொருவரும் நெருப்பை கக்கினார்கள்.



எனக்கும் ஹாருனுக்கும் ஆங்கில உரைகள் மட்டுமே புரிந்தது. எங்களுக்கு இந்தியும், உருதும் தெரியாதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை வடஇந்தியாவுக்கு வரும் போதெல்லாம் உணர்ந்து இருக்கிறோம். அது இப்போதும் உணர வைத்தது. நல்ல வேளையாக அண்ணன் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ராணுவத்தில் பணியாற்றியதால் அவர் இந்தி உரைகளை எங்களுக்கு விளக்கி கூறினார். அண்ணன் ஜெ.எஸ்.ரிஃபாயி அவர்கள் பெங்களூரில் பட்டம் பெற்றவர் என்பதால் உருது உரைகளை விளக்கி கூறினார். நாங்கள் ஆங்கில உரைகளை அவர்களுக்கு விளக்கினோம். அந்த கருத்தரங்கமே எங்களுக்குள் ஒரு மொழிபெயர்ப்பு மையமாக மாறியது.



இறுதி அமர்வுக்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஹாஜத் ஹபிபுல்லாஹ் டெல்லியிலிருந்து வந்திருந்தார். இது மத்திய அமைச்சருக்கு இணையான ஒரு இலாகா. சிறுபான்மையினருக்கு உரிமைகளை சொல்ல ஒரு வழித்தடம். அந்த வகையில் மத்திய அமைச்சருக்கு இணையானவராக வாஹாஜத் ஹபிபுல்லா செயல் படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





நிறைய பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர்.

அப்போது எங்களது தமிழக ஒருங்கிணைப்பாளரான டாக்டர்.அஜ்மல் எங்களிடம் வந்து, சிறுபான்மை தேசிய கமிஷன் தலைவர் வஹாஜத் ஹபிபுல்லாவுடன் ஒரு தனி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



நானும், ஒ.யு.ஆர், ஜெ.எஸ்.ஆர், ஹாரூண் நால்வரும் அவருடன் காரில் புறப்பட்டோம். அது ஒரு அரசு விருந்தினர் மாளிகை.

நாங்கள் சென்றதும் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். தமுமுக தமிழகத்தில் ஆற்றிவரும் பணிகளையும், மனிதநேய மக்கள் கட்சியின் பணிகளையும் அவரிடம் விளக்கினோம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 4, 5 சகோதரர்கள் அங்கு இருந்தனர். அவர்களும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.



பிறகு நான் சச்சார் கமிட்டி பரிந்துரைகள் மீது என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரிடம் கேட்டேன். அதில் உள்ள 15 அம்ச திட்டங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அமல்படுத்தப்படுவதாகக் கூறினார்.



நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அப்பாவி முஸ்லிம்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் வழக்கு நடத்துவதற்கு கூட பணமில்லை. இவர்களின் விடுதலைக்காக உங்கள் கமிஷன் என்ன செய்யப் போகிறது? என்றோம்.

அதற்கு அவர், ஹைதராபாத் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக கூறினார். ஒவ்வொன்றாகச் செய்வோம் என்றார்.

பிறகு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய அரசின் பதவிகளில் 15% இடஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதே. அதற்காக என்ன முயற்சி நடந்துள்ளது? என்றேன்.



இடஒதுக்கீடு என்பது பிரச்சனைக்கு விடையாக இருக்க முடியாது என்றார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சமூகத்தில் ஒரு சாரரும், இரண்டு மூன்று தலைமுறையினரும் மட்டுமே அதனால் பயனடைவார்கள் என்றார்.



நாங்கள் தென் இந்தியாவில் இதனால் பலன் பெற்றிருக்கிறோமே என்றோம். ஏற்கனவே அங்கே முன்னேற்றம் இருக்கிறது என்று பூசி மெழுகினார்.

இவர் ஒரு 'காங்கிரஸ்'காரர் என்பதும், அதற்கு ஏற்ப பேசுகிறார் என்பதும் புரிந்தது. சக்திவாய்ந்த பதவிகளில் டெல்லிக்கு அருகில் இருக்கின்ற காரணத்தால் வட முஸ்லிம் தலைவர்கள் உட்கார்ந்து கொள்கிறார்கள்.



இவர்களிடம் மார்க்கமும் இல்லை. சமுதாய உணர்வும் இல்லை, தொலைநோக்குப் பார்வையும் இல்லை. ஏதாவது தங்களுக்கு பதவி கிடைக்க வேண்டும். கிடைத்த பதவிகளில் நீடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். இவரை சந்தித்த பிறகு எங்களுக்கு அப்படித்தான் தோன்றியது.

போராட்ட உணர்வுமிக்க சமுதாய பிரதிநிதிகள் தென்னிந்தியாவில் தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் டெல்லி அரசியிலிருந்து வெகுதூரம் இருக்கிறார்கள். அதுவே சமுதாயத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.



அவரை சந்தித்துவிட்டு, வெளியே வந்தோம் உள்ளே அமர்ந்திருந்த காஷ்மீரை சேர்ந்த இருவர் வெளியே வந்து தங்களை அறிமுகப்படுத்தி சாலையில் நின்றவாரே பேசத் தொடங்கினர்.

ஒருவர்பெயர் ராஜாமுசாபர், இன்னொருவர் பெயர் ஷாநவாஸ். இருவர் காஷ்மீரில் ஊழலுக்கு எதிராகப் போராடும் என்.ஜி.ஒ. அமைப்பை நடத்துபவர்களாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜம்மு&காஷ்மீர் ஆர்.டி.ஐ. மூவ்மென்ட் என்ற பெயரில் என்.ஜி.ஒ அமைப்பை நடத்துவதாகச் சொன்னார்கள். பிறகு நாங்கள் எங்கள் விடுதிக்கு வந்துவிட்டோம். அன்று இரவு எங்களுக்கு உறங்கியும், உறங்காத இரவாக கழிந்தது. காரணம் எங்களை வந்து சந்தித்தவர்கள் சொன்ன செய்திகள்தான்...



இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்....



No comments:

Post a Comment