மனிதர்களின் நிலை:
உலக முடிவு நாளின் போது மனிதர்களின் நிலை படுபயங்கரமானதாய் இருக்கும். அந்த நாளில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மோசமான நிகழ்வுகளும் அவர்களை கிலி கலங்கச் செய்யும். அந்த நிலை அதிகரிக்க, அதிகரிக்க தம்மைத்தாமே மறந்தோராய் அலைவர்.
இவ்வுலகில் உறுதியான உறவுகளில் ஒன்றுதான் ஒரு தாயானவள் தன் பிள்ளை மீது வைத்துள்ள அன்பும் பாசமுமாகும். இத்தகைய உறுதியான உறவு கூட மறுமை வந்து விடில் தகர்த்தெறியப்படும். குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய் அச்சத்தினால் தன் குழந்தையை மறந்திடுவாள். கர்ப்பிணிப் பெண் அந்நாளின் அச்சத்தால் வயிற்றிலுள்ள குழந்தையை ஈன்றெடுத்து விடுவாள். இதே போல் அந்த நாளில் மனிதர்கள் அனைவரும் புத்தி பேதலித்தோரைப் போல நடமாடித்திரிவர்.
'மனிதர்களே ! நீங்கள் உங்களது இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மகத்தானதாகும். அதனை நீங்கள் காணும் அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும் தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து போவாள். கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் சுமையை வைத்திடுவாள், மேலும் மனிதர்களை (பீதியின் கடுமையால்) மதிமயக்கமுடையோராயிருக்க நீர் காண்பீர். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியோருமல்ல. எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடினமானதாகும். (ஹஜ் 1-2)
குழந்தைகளின் தலைமயிர்களெல்லாம் அந்நாளின் கடுமையினால் வெளிறி அவர்கள் வயோதிபர்களாய்த் தோற்றமளிப்பர்.
' நீங்கள் நிராகரித்து விட்டீர்களாயின், குழந்தைகளை நரைத்த(கிழ)வர்களாக ஆக்கிவிடும் அந்நாளில் , (நமது பிடியிலிருந்து தப்பித்து உங்களை) நீங்கள் எவ்வாறு காத்துக் கொள்வீர்கள் ? அ(ந் நாளில் நிகழும் பெரும் பெரும் அமளியான)தன் காரணமாக வானம் வெடித்துப் போய் விடும். அவனது வாக்கு (சந்தேகமின்றி) செயற்படுத்தப்பட்டதாகி விடும். ( முஸம்மில் : 17:18)
முதல் ஸுர் ஊதப்பட்டதும் வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் நாடியோரைத் தவிர ஏனையோர் இறந்திடுவர். பின்பு இரண்டாவது ஸுர் ஊதப்படும்.
'மேலும் ஸுர் ஊதப்படும். பின்னர் வானங்களிலிருப்போரும், பூமிலிருப்பவர்களும் அல்லாஹ் நாடியோரைத் தவிர மூர்ச்சித்துச் (சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள். பிறகு அதில் மறுமுறை ஊதப்படும். அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பர்' (அல் ஜுமர் : 68)
மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் அவனின் நாட்டத்தைக் கொண்டு சிலரை அழிக்காது விட்டுவிடுகின்றான் என்கின்றான். இதன்படி அவர்கள் யார் என்பதை இன்னுமொரு வசனத்தில் கூறுகின்றான்.
' ஆகவே ஸுர் ஒரு முறை ஊதப்பட்டால், பூமியும் மலைகளும் உயர்த்தப்பட்டு அவ்விரண்டும் ஒரே தூளாக்கப்பட்டு விட்டால் அந்த நாளில் நிகழ வேண்டியது நிகழ்ந்து விடும். வானமும் பிளந்து அந்நாளிற் பலமற்றதாகிவிடும்.இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளிலிருப்பர். அன்றியும், அந்நாளில் உமதிறைவனின் அர்ஷை (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாய்ச் சுமந்து கொண்டிருப்பர்' (அல் ஹாக்கா : 13-17)
இவ்வசனத்தின் மூலம் அவன் நாட்டப்படியுள்ள மலக்குகளில் ஒருவர் தான் இரண்டாவது முறை ஸுர் ஊதுவார் என்பது தெளிவாகின்றது. அல்லாஹ் தனது திருமறையில் ஸுர் ஊதப்படும் நாளை பற்றி அதிகமான வசனங்களில் தெளிவுபடுத்துகின்றான். எனினும், இரண்டாவது தடவையாக ஊதப்படும் ஸுரைப்பற்றித்தான் அதிகமான வசனங்கள் பேசுகின்றன.
முதலாவது ஸுரை விட இரண்;டாவது ஸுர் ஊதுவதற்கு முக்கியத்துவமளித்துக் கூறப்பட்டுள்ளதற்கு நியாயமான காரணங்களுமுள்ளன. முதலாவது ஸுரைப் பொறுத்தவரை இதனை யுக முடிவின் போது வாழ்கின்ற சிலர் மட்டுமே அறியலாம். ஆனால் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடக்கம் இறுதி மனிதர் வரை அறியக்கூடியதாக இரண்டாவது ஸுர் காணப்படுகிறது.
இதே போல மனிதன் அவசியம் அறிய வேண்டியதும், அஞ்சவேண்டியதுமான நாளாக இந்நாளே உள்ளது. ஏனெனில், இந்நாளிலே மனிதர்களனைவரும் அல்லாஹ்வின் முன் ஒன்று சேர்க்கப்படுவர். சம்பாதித்த செல்வங்களோ, அன்பை ஊட்டி வளர்த்த பிள்ளைகளோ அன்று பயனளித்திடாது.
வாய்களுக்குப் பூட்டுப் போடப்படும். மனிதனின் உறுப்புகள் யாவும் பேசச் செய்யப்படும். அல்லாஹ்வினால் விசாரணை நடாத்தப்படும்.
மனிதர்களின் குறைகள் யாவும் வெளிப்படுத்தப்படும். தாய் தன் பிள்ளையைப் பார்த்தும், பிள்ளை தன் தாயைப் பார்த்தும் , மகன் தந்தையைக் கண்டும், தந்தை மகனைக் கண்டும் பயந்தோடும் நாள், இன்னும் கணவன் மனைவியைக் கண்டும், மனைவி கணவனைக் கண்டும் விரண்டோடுகின்ற அந்நாள், சுவனமா? நரகமா? என அனைவரும் எதிர்பார்க்கும் நாள் என்று பல வகையான வர்ணிப்புகளுடன் கூடிய அந்நாளை அவசியம் அறிந்திட வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் அதிகமாக இரண்டாவது ஸுரைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.
இவ்வகையில் இரண்டாவது முறை ஸுரின் போது நிகழும் சில நிகழ்வுகளாவன. பூமியானது கடுமையான நடுக்கத்திற்குள்ளாகி மலைகளெல்லாம் துகள்களாக்கப்படும். பூமியானது தன் சுமைகளையெல்லாம் வெளிப்படுத்துகையில் மனிதர்கள் இதற்கு என்ன நேர்ந்தது என வினவிக் கொள்வர். பூமியானது அல்லாஹ் அறிவித்த செய்திகளையெல்லாம் அறிவிக்கும், அனைவரும் விசாரணைக்கென ஒன்று திரள்வர்.
'பூமி மிகப் பலமான அசைவாக அசைக்கப்பட்டால், இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டுவிட்டால் அப்போது அவைகள் பரத்தப்பட்ட புழுதிகளாகிவிடும்' (அல்வாகிஆ: 4-6)
'பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டுவிடும் போது இன்னும் பூமி தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்தி விடும் போது இன்னும் மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது ? எனக் கூறிவிடும் போது , அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்.நிச்சயமாக உமதிறைவன் (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்கு(க் கட்டளையிட்டு வஹி மூலம்) அறிவித்ததன் காரணமாக அந்நாளில் மனிதர்கள் அவர்களின் செயல்கள் காண்பிக்கப்படுவதற்காகப் பலபிரிவினராக (மண்ணறைகளிலிருந்து) திரும்புவர்' (ஸில்ஸால் :1-6)
'வானம் பிளந்து விடும் போது அது (பிளந்து விட வேண்டுமெனும்) தன் இறைவனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது. (அவ்வாறு செவி சாய்ப்பது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டு விட்டது.பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும் போது அது (தன்னுள் இருப்பதை வெளிப்படுத்திட வேண்டுமெனவும்)தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது. (அவ்வாறு செய்வது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டு விட்டபோது, மனிதா ! நீ உனது இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேளைகளிலீடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கிறாய். பின்னர் (மறுமையில்) அவனை நீர் சிந்திக்கிறவனாயிருக்கிறாய்' ( அல் அன்ஷிகாக் : 1-6)
மேலும் அந்நாளில் உயிருக்குயிராய் நேசித்த எந்த நண்பர்களும் எப்பயனுமளிக்கமாட்டார்கள்.
'வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப் போலாகும் நாளில், இன்னும் மலைகள் சாயம் ஏற்பட்ட பஞ்சைப் போன்று ஆகும் (நாளில் அது நிகழும்) அன்றியும் , ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி விசாரித்துக் கேட்க மாட்டான்' (அல் மஆரிஜ் : 8-10)
மனிதர்கள் அனைவரும் உலகில் ஓயாது உழைத்த அனைத்தையும் அன்று காண்பர்.
'வானம் வெடித்து விடும் போது நட்சத்திரங்களும் உதிர்ந்து (சிதறி) விடும் போது. கடல்களும் பொங்கவைக்கப்பட்டு (அவைகளின் மத்தியிலுள்ள திரைகள் அகற்றப்பட்டு ஒன்றாகி) விடும் போது மண்ணறைகளும் மேலும் கீழுமாக புறட்டப்பட்டு (மறுமைக்காக) தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் நன்கறிந்து கொள்ளுங்கள். (இன்பிதார் : 1-5)
'சூரியன் (ஒளி நீக்கப்பட்டு) சுருட்டப்பட்டு விடும் போது நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்து விடும் போது, மலைகளும் (பூமியிலிருந்து) பெயர்க்கப்பட்டுவிடும் போது பத்து மாத நிறைக் கற்பமுடைய ஒட்டகங்களும் கவனிப்பாரற்று (அலைய) விடப்படும் போது, வன விலங்குகளும் (ஊர்களுள் வந்து) ஒன்று திரட்டப்படும் போது, கடல்களும் தீ மூட்டப்படும் போது, உயிர்களும் ஒன்று சேர்க்கப்படும் போது , உயிருடன் புதைக்கப்பட்ட (பெண் குழந்தையான) வளும் வினவப்படும் போது (விசாரணைக்காக) மனிதர்களது பதிவுப் புத்தகங்களும் பரிக்கப்படும் போது , வானமும் பிளந்து அகற்றப்படும் போது, நரகமும் கடுமையாக எரிக்கப்படும் போது, சுவனமும் (பயபக்தியுடையோருக்காக அலங்கரிக்கப்பட்டு) சமீபமாய்க் கொண்டு வரப்படும் போது , ஒவ்வொரு ஆத்மாவும் தான் (உலகில் செய்து கொண்டு) வந்ததை நன்கறிந்து கொள்ளும்' (அத்தக்வீர் - 1-14)
இன்னும் மனிதன் இவ்வாறான சம்பவங்களைக் கண்ட அச்சத்தால் தான் தப்பித்துக் கொள்ள எங்காவது இடமுண்டா ? என வினவுவான். எவ்வாறுதான் முயற்சி செய்யா விடினும் அந்நாளிற் தப்பிக்கவே இயலாது.
'மறுமை நாள் எப்போது (வரும்)? என (அதிசயமாக) அவன் கேட்கின்றான். (அந்நாளின் அமளிகளைக் கண்டு திடுக்கிட்டு) பார்வை நிலை குத்தி விட்டால், சந்திரனும் ஒளியிழந்து (விடுமெனில்) சூரியனும், சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும் (ஆனால்) அந்நாளில், (அனைவரின்) தங்குமிடமும் உமதிறைவனிடத்திலாகும. மனிதன் அவன் முற்படுத்தி வைத்ததையும், அவன் பிற்படுத்தி வைத்ததையும் (பற்றி) அந்நாளில் அறிவிக்கப்படுவான்' (அல்கியாமா : 6-13)
இன்னும் இவை போன்று ஏராளமான வசனங்கள் உள்ளன. எனவே இவ்வாறான நிகழ்வுகள் எத்தொடரில் இடம்பெறும் என்பதை அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
தொடரும்.....
No comments:
Post a Comment