Sunday 7 August 2011

மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்


மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) விசாரணை நடத்திவரும் இவ்வழக்கில் இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட சிவநாராயண கல்சங்கரா, சியாம் ஸாஹு ஆகியோருக்கு ஒருலட்சம் ரூபாய் வீதம் பிணைப்பத்திரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜாமீன் வழங்கிய நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: முதல் நோக்கில்(prima facie) இவர்கள் குற்றவாளிகள் தாம் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்த சதித்திட்டத்திலும் இவர்களுக்கு பங்கில்லை. முக்கிய குற்றவாளி ராமசந்திர் கல்சங்கராவுடன் நட்பு இருப்பதுதான் குண்டுவெடிப்புடன் இவரை தொடர்பு படுத்தும் ஒரே ஆதாரம். ராமச்சந்திரா கல்சங்கரா இதுவரை கைதுச் செய்யப்படவில்லை. கல்சங்கரா சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும், ஹிந்துத்துவா கொள்கையை பின்பற்றுகிறார் என்பதும் இவரை குற்றவாளியாக்க போதுமான ஆதாரமாகாது. குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிரான தெளிவான ஆதாரங்களை சமர்ப்பிக்க இயலாத சூழலில், வழக்கின் விசாரணை இதுவரை துவங்கவில்லை என்பதாலும் இவர்களை சிறையில் அடைக்கவேண்டிய தேவையில்லை. இவ்வாறு நீதிமன்றத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் விஷயத்திலும் நீதிமன்றங்கள் இவ்வாறு நடந்துக்கொள்ளுமா?

நன்றி : தூதுஆன்லைன்  

No comments:

Post a Comment