Thursday 18 August 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...........

அன்பான சகோதர சகோதரிகளே!

நபி (ஸல்) அவர்கள் சந்திரனை அடிப்படையாக வைத்து நோன்பை வையுங்கள், சந்திரனை அடிப்படையாக வைத்து நோன்பை விடுங்கள் என்று கூறியதை நாம் 29 வது நாளின் பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், 29 வது நாளின் பிறையை பார்த்து நோன்பு விடுங்கள் என்று செயல்படுத்திவருவதை நாம் தற்போது கவனித்து வருகின்றோம்.

இந்த அடிப்படை சரியா? தவறா? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  சந்திரனின் அஹில்லாக்கள் அனைத்தும் மக்களுக்கு தேதியை அறிவிப்பதற்காக என்று அல்லாஹ் நமக்க இறக்கிவைத்த வேதத்தில் 2:189 வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளான் என்பதை நம்மில் அதிகமானோர் அறிந்து வைத்துள்ளனர்.

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; "அவை மக்களுக்குக் தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன............ (2:189)

இந்நிலையில் நாம் தற்போது ஹிஜ்ரி ஆண்டுமான கணக்கின் அடிப்படையில் 1432 வது வருடத்தின் ரமளான் மாதத்தை அடைந்துள்ளோம்.  இந்த 1432 ரமளான் மாதம் கீழ்கண்டவாறு மூன்று தினங்கள் உலகில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நம்மில் குறைவான நபர்களை தவிர உலக மக்கள் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமை ரமளான் 1 (கிறிஸ்துவ நாட்காட்டிபடி Sunday 31.07.2011) -  குர்ஆன் கூறும் சந்திர மன்ஸில்களின் அடிப்படையில் ஆரம்பிக்கபட்ட நாள்

திங்கள் கிழமை ரமளான் 1  ( "  Monday 1.8.2011)  -  சவூதியை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட நாள்

செவ்வாய் கிழமை ரமளான் 1 ( " Tuesday 2.8.2011)  - பிறையை கண்ணால் பார்த்து இந்தியா போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட நாள்.

கிழமை மாறினால் தேதி மாறும் என்பது இயற்கை விதி.  மேலே 1432 ரமளான் மூன்று கிழமைகளில் உலகில் துவங்கியது.  கிழமைமாறிவிட்டது தேதி மட்டும் மாறாமல் இருப்பதை கவனியுங்கள்.  

இந்த நாட்காட்டி விதியை கூட தற்போது சிலர் எங்களுக்கு தேதியும் கிழமை மாறியுள்ளது தானே என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்களுக்கு உலகத்திற்கு அருள்கொடையாக வந்த ஒரே தூதர், இறுதித்தூதர், நபி(ஸல்) அவர்களின் வேதத்தில் உள்ள நாட்காட்டி பற்றிய அடிப்படை விதியே தெரியாமல் இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் இது போன்று கூறி மக்களிடம் தப்பித்து வருகின்றார்கள். அப்படி கூறுபவர்களுக்கு பவுர்ணமி தினம் மட்டும் ஒரே கிழமையில் வருவது ஏன் என்பதை சிந்திக்க தவறிவிட்டார்கள்.  அவர்கள் சொல்வது உண்மையென்றால், மூன்று தினங்களில் பவுர்ணமி தினம் வரவேண்டும் தானே? ஏன்என்றால் வித்தியாசமான மூன்ற கிழமைகளில் 1432 ரமளான் மாதத்தை ஆரம்பித்தவர்களுக்கு பவுர்ணமி நாளும் மூன்று கிழமைகளில் வந்தால் தான் அவர்கள் கூறுவது சரியாகும் என்பதை சாதாரணமாக சிந்தித்தாலே நாம் புரிந்து கொள்ளலாம். 

தற்போது நாம் விஷயத்திற்குள் வருவோம்.

1432 ரமளான் மூன்று கிழமைகளில் ஆரம்பித்ததால் யாருக்கு பவுர்ணமி தினம் ( பூரண சந்திரன்) சரியாக வரும் என்பதை நாம் தற்போது கணக்கிடுவோம்.

ஞாயிற்றுக்கிழமை (31.07.2011) குர்ஆன் கூறும் சந்திர மன்ஸில்களின் அடிப்படையில் (Sunday 31.07.2011) ரமளானை ஆரம்பித்தவர்களுக்கு பவுர்ணமி தினம் (யவ்முல் பத்ர்) 14 வது நாள் சனிக்கிழமை (13.08.2011) வருகிறது. 

அதற்கு அடுத்து சந்தினின் மன்ஸிலை பார்க்க முடியாத 30வது நாள் (நபி(ஸல்) அவர்கள் கூறிய கும்மவுடைய நாள்) திங்கள்கிழமை (29.08.2011).  அன்று சந்திரன் சந்திர மாதத்திற்கான ஒரு சுற்றை முடித்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் நாளாகும். அன்றையதினம் பூமியில் இருந்து சந்திரனை யாரும் பார்க்க முடியாமல் இருக்கும். 

நபியவர்கள் சொன்ன அடிப்படையில் பிறையை பார்க்க முடியாத கும்மவுடைய நாளை, நாம் பிறையை கண்ணால் பார்த்து கணக்கிட்டு எண்ணிக்கொண்டு வருகின்ற 1432  ரமளான் மாதத்தில்,  ஞாயிற்றுக்கிழமை (28.8.2011) அன்று 29வது நாளின் பிறையை பஜ்ர் தொழுதுவிட்டு கிழக்குபகுதியில் உதிக்கும் நிலையில் பார்க்க முடியும். இதைத்தான் அல்லாஹ் உர்ஜ{னல் கதீம் என திருக்குர்ஆன் அத்தியாயம் 36:39 வசனத்தில் கூறுகின்றான்.   

எனவே 1432 ரமளானின் 29 வது நாளான ஞாயிற்றுக்கிழமையுடன் பிறை தெரியாத திங்கள்கிழமையை கூட்டிவிட்டால் மாதம் 30 ஆக நிறைவு பெற்றுவிடும்.  

ஞாயிற்றுக்கிழமை (31.7.2011) 1432 ரமளானை ஆரம்பித்தவர்கள் 14வது நாளில் பவுர்ணமி தினத்தை அடைவார்கள். அதற்கு அடுத்து 16 நாட்களுடன் 1432 ரமளானை முப்பது நாட்களை கொண்டு முடிப்பார்கள். குர்ஆன் கூறும் மன்ஸில்கள் அடிப்படையில் பிறையை கணக்கிட்டவர்கள் 1432 ரமளான் மாதத்தில் மாறி மாறிவரும் 29 பிறை மன்ஸில்களை பார்க்க முடியும். ஒரு திங்கள்கிழமையன்று (29.08.2011) பிறையை பார்க்க முடியாத 30வது நாளாக இருக்கும்.  எனவே அவர்கள் முப்பது நாள்கள் நோன்பு நோற்று அல்லாஹ் சொன்ன அடிப்படையில் 1432 ரமளான் மாத்தின் எண்ணிக்கையை முழுமையாக பூர்த்தி செய்து செவ்வாய் கிழமை (30.8.2011) அன்று ஷவ்வால் மாதத்தின் முதல்நாளில் நுழைவார்கள்.  அன்று நபியவர்கள் நோன்புவைக்க கூடாது என்று தடுத்து ஹராமாக்கிய ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினமாகும்.


அடுத்ததாக சவூதியை அடிப்படையாக வைத்து நோன்பை ஆரம்பித்தவர்களின் நிலையை பார்ப்போம்.

திங்கள் கிழமை ரமளான் 1  ( "  Monday 1.8.2011)  -  சவூதியை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட நாள்

சவூதி அரேபியாவும், அவர்களை பின்பற்றியவர்களும், 1432 ரமளானின் முதல் நாளை ஷஃபானில் நுழைத்துவிட்டார்கள்.  ஏன்என்றால் அவர்கள் ஷஃபானின் முப்பதாவது நாள் என்று கூறிய ஞாயிற்றுக்கிழமையன்று (31.07.2011) அன்று சந்திரனின் முதல் நாளுக்குரிய படித்தரத்தை கண்களால் பார்க்க முடிந்தது. அது கடைசி நாளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் கூறிய சந்திரனை பார்க்க முடியாத கும்மவுடைய நாளாக அது இருந்திருக்க வேண்டும். அன்றைய தினம் உலகில் 1432 ரமளான் மாதத்தின் முதல் நாளுக்குரிய பிறை மன்ஸிலை உலகில் அதிகமானோர் கண்களால் பார்த்ததை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

எனவே சவூதியை பின்பற்றி 1432 ரமளான் மாதத்தை திங்கள்கிழமை (1.8.2011) முதல் நாள் என கூறி ஆரம்பித்தவர்கள்பெளர்ணமி தினத்தை (யவ்முல் பத்ர்) சனிக்கிழமை தான் (13.8.2011) அடைவார்கள். அன்றைய தினம் அவர்களுக்கு ரமளான் மாதத்தின் 13 வது நாளாக இருக்கும்.  13வது நாளில் பவுர்ணமி தினம் வருவது மிகவும் அறிதான ஒன்று. 1432 ரமளான் மாதத்தை இவர்கள்  துவங்கிய அடிப்படையில் பவுர்ணமி தினம் வேறு கிழமையில் தானே இவர்களுக்கு வரவேண்டும். இவர்களுக்கும் சந்திர மன்ஸில்களின் கணக்கின் அடிப்படையில் ஆரம்பித்தவர்களுக்கும் பவுர்ணமி தினம் மட்டும் ஒரே கிழமையில் எப்படி வருகின்றது என்பதைத்தான் இங்கு நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள் சவூதியை பின்பற்றுவதால், சவுதியின் பிறை நாட்காட்டி கணக்கின் அடிப்படையில் இவர்கள் 30 நாட்களை கொண்ட 1432 ரமளான் மாதத்தை திங்கள்கிழமை (29.08.2011) அன்று 29 நாட்களுடன் பிறையை கண்ணால் பார்க்காமலேயே முடித்து செவ்வாய்கிழமை பெருநாளை கொண்டாடுவார்கள் என்பதை நாம் இங்கே தகவலாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.   திங்கள் கிழமை பிறையை பார்க்க முடியாத கும்மவுடைய நாளாக உள்ளதால், அன்று உலகில் யாரும் பிறையை கண்களால் பார்க்க முடியாது.

அடுத்து பிறையை கண்ணால் பார்த்து ஆரம்பித்தவர்கள் நிலையை நாம் பார்ப்போம்.

செவ்வாய் கிழமை ரமளான் 1 ( " Tuesday 2.8.2011)  - பிறையை கண்ணால் பார்த்து இந்தியா போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட நாள்.

இவர்கள் பிறை மன்ஸில்களை கணக்கிட்டு ஆரம்பித்தவர்களுக்கும், சவூதியை பின்பற்றி ஆரம்பித்தவர்களுக்கும் மாற்றமாக அதன் பின்னால் தத்தமது பகுதியில் பிறையை பார்த்து ரமளான் முதல் நாளை செவ்வாய்கிழமை (2.8.2011) ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் பவுர்ணமி தினம் சனிக்கிழமைதான் (13.08.2011)  வருகின்றது.  இவர்கள் இருநாட்கள் கழித்து மூன்றாம் பிறையை முதல் பிறையாக கொண்டவர்களுக்கு பவுர்ணமி மட்டும் எப்படி ஒரே கிழமையில் வருகிறது என்பதையும் நாம் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.  முதல் நாளை இரண்டு நாட்கள் தள்ளி ஆரம்பித்தவர்கள் எப்படி ஒரே கிழமையில் பவுர்ணமி தினத்ததை பெற்றுக்கொள்கின்றார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 

செவ்வாய்கிழமை (2.8.2011) அன்று ரமளான் மாதத்தை துவக்கியவர்கள்,  1432 ரமளான் மாதத்தில் 28 நோன்புதான் வைக்க முடியும். அவர்களுடைய 29வது நாளான செவ்வாய்கிழமை (30.8.2011) சந்திர மன்ஸில்களின் அடிப்படையில் பெருநாளுடைய தினமாகும்.  எனவே அவர்கள் தங்களுடைய 29வது நோன்பை ஷவ்வால் மாதத்தில் நோற்பார்கள். செவ்வாய்கிழமையன்று (30.8.2011)ஷவ்வால் மாதத்தின் முதல் நாளுக்குரிய சந்திர மன்ஸிலை கண்களால் பார்க்க முடிகின்ற நாள் என்பதால் அன்ற பிறையை கண்களால் பார்க்க முடியும். எனவே அவர்கள் அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை (31.08.2011) பெருநாள் கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் மழையால் மேகமூட்டம் ஏற்பட்டால் புதன்கிழமையை 30 வது நாளாக எடுத்துக்கொண்டு காரணத்தினால் வியாழக்கிழமை (01.09.2011) பெருநாள் கொண்டாடுவார்கள். 

இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,  ரமளானை மூன்று கிழமைகளில் ஆரம்பித்தவர்களுக்கும் முடிப்பவர்களுக்கும், பவுர்ணமி தினமும் மூன்று கிழமைகளில் வரவேண்டும் என்பதுதானே உண்மை. 

அதற்கு மாற்றமாக சந்திர மன்ஸில்களின் கணக்கின் அடிப்படையில் ஆரம்பித்தவர்களுக்கும் சனிக்கிழமைதான்பூரண சந்தினை ஏற்படுகின்றது.   

திங்கள்கிழமை 1432 ரமளான் ஒன்று என சவூதியை பின்பற்றி ஆரம்பித்தவர்களுக்கு பவுர்ணமிசனிக்கிழமையன்றுதான் ஏற்படுகின்றது.  

அதே போல் மூன்றாம் பிறையை முதல்பிறையாக கணக்கிட்டு செவ்வாய்கிழமை 1432 ரமளான் முதல் நாளை ஆரம்பித்தவர்களுக்கும் சனிக்கிழமையன்றுதான் பவுர்ணமி தினம் ஏற்படுகின்றது.   

பவுர்ணமி தினம் (13.08.2011) ஒரு கூட்டத்திற்கு சனிக்கிழமை 14 ம் தேதி,
 
மற்றொரு கூட்டத்திற்கு அதே சனிக்கிழமை 13 ம் தேதி.  

இன்னுமொரு கூட்டத்திற்கு அதே சனிக்கிழமையே 12 ம் தேதியாக உள்ளது.  

ஒரே சனிக்கிழமைக்கு மூன்று தேதிகள் கொடுக்க முடியுமா என்பதையும் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  இஸ்லாமியர்களின் நாட்காட்டிப்படி அப்படித்தான் வரும் என்று மனோ இச்சையின் அடிப்படையில் கூறப்போகின்றீர்களா?  இல்லையென்றால் அல்லாஹ்வின் நாட்காட்டி விதிகளை ஆய்வு செய்து, சரியான முறையில் இயற்கை விதிகளுக்கு எதிரில்லாமல், அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை நடைமுறைப்படுத்த போகின்றீர்களா?

உங்கள் சிந்தனைக்காகவே இந்த விஷயம் பதிவிடப்படுகின்றது. யாரையும் புண்படுத்துவதற்காக இது எழுதப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை நாம் பயன்படுத்தி அதை உலக மக்களுக்கும் மீண்டும் அறிமுகப்படுத்தி, உலகில் உள்ள யூத, கிறிஸ்துவ காலண்டர்கள் பொய்யான காலண்டர்கள் என்பதை உலகிற்கு நாம் உணர்த்தி ஈறுலகிலும் வெற்றிபெற பிரார்த்திக்கும் உங்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டி சகோதரர்கள்.

இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி
12.09.1432 வியாழக்கிழமை (CE:11.08.2011 கிறிஸ்துவ நாட்காட்டி)

No comments:

Post a Comment