Thursday 18 August 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்



முன்னுரை
 தொடர் - 1
(அன்பார்ந்த சகோத, சகோதரிகளே அனைவரும் மீதும் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக! நீங்கள் படிக்க போகும் இத்தொடர் வரலாறு, மனித உரிமை மீறல்கள், உணர்வு பூர்வமான உண்மைகள், சுற்றுலா தகவல்கள் என உள்ளடக்கியதாக இருக்கும். இது பயணக் கட்டுரையாக மட்டுமில்லாமல் பயண இலக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதால் பயண அனுபவங்களையும், அது குறித்த பின்னணிகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். இது பிறகு விரிவாக இன்ஷா அல்லாஹ் புத்தக வடிவம் பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் சந்திப்போம்....)

காஷ்மீர் என்றாலே இதயம் குளிரும். கண்கள் மிளிரும். அப்பூமி இறைவனின் அருட்கொடை. அது ஆசியாவின் இதயம் என்றும், கிழக்கின் சுவிட்சர்லாந்து என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இமயமலையின் எழில் மிகு பகுதியில், இயற்கை கவிதைகளாய் அமைந்திருக்கும் காஷ்மீரில், புகழ்பெற்ற டால் ஏரியும், பனிக்கட்டிகள் ஐஸ்கீரீம்களாய் கொட்டிக் கிடக்கும் காட்சிகளும் அனைவராலும் அறியப்பட்டவை.

ஓங்கி உயர்ந்து நிற்கும் தேவதாரு மரங்களும், குங்கும்பூ வயல்களும், ஆப்பிள் மற்றும் மாதுளை தோட்டங்களும் அதன் பசுமையின் மறுபக்கங்கள்.

ஆனால் இவையும் தாண்டிய பல விஷயங்கள் உண்டு. வரலாற்று சிறப்பு மஸ்ஜிதுகள், பல்சமய மக்களின் ஆலயங்கள், அழகிய முகலாய பூங்காக்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம் அழகிய காஷ்மீரின் சிறப்புகளை!

ஆனால்; இவைற்றையெல்லாம் தாண்டிய சொல்லப்படாத காஷ்மீர் மக்களின் சோகங்களை சொல்வதுதான் எனது இத்தொடரின் நோக்கம்!

வரலாறும், உண்மைகளும் மூடி மறைக்கப்பட்டு, பிரிவினை மற்றும் பயங்கரவாத முத்திரைக்குத்தப்பட்ட காஷ்மீரைதான் நம்மில் பெரும்பாலோர் இதுவரை அறிந்திருக்கிறோம்.

எழில் மிகு அழகும், கவிதை உணர்வும் கொண்ட மெல்லிய மனங்களை கொண்ட அம்மக்களின் உணர்வுகளையும், அவர்கள் சொல்லத் துடிக்கும் உண்மைகளையும் அறிய ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்தது.

ஏற்கனவே விடியல் பதிப்பகம் 1990 -களில் வெளியிட்ட ‘காஷ்மீரீல் தொடரும் துயரம்’ என்ற நூலை நான் வாசித்திருக்கிறேன். பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் நேரில் சென்று வந்து மக்கள் உரிமையில் தொடராக எழுதிய ‘என்ன நடக்குது காஷ்மீரில்....’ என்ற கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன்.

அதே நேரம் தன்னுரிமை போருக்கு முன்னுரிமை கொடுக்கும் உலக விடுதலை போராட்டங்களை கூர்ந்து கவனிப்பவன் என்ற வகையில் நான் காஷ்மீரையும், நாகாலாந்தையும், மணிப்பூரையும் அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்களையும் ஆய்வு செய்து வருகிறேன்.

இப்பகுதிகளுக்கு நேரில் சென்று அம்மக்களிடம் பழகி உண்மைகளையும், அவர்களது உணர்வுகளையும் அறிய வேண்டும் என்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது.

மனித உரிமை களங்களில் ஈடுபாடு காட்டிவரும் தமுமுக பொருளாளர் ளி.ஹி.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இலங்கைக்கு ஒருமுறையும், நக்ஸல்கள் வாழும் சத்தீஸ்கருக்கு ஒரு முறையும் மனித உரிமைகளை அறியும் வகையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

சென்ற ஆண்டு நான் அவரிடம், இப்படியொரு பயணம் காஷ்மீருக்கு புறப்படுவதாக இருந்தால், நானும் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன்.

இந்நிலையில் தமுமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.யி.ஷி.ரிபாயி அவர்கள் ஜூன் 24 அன்று தோப்புத்துறைக்கு கொள்கை சகோதரர் ஜியாவுல் ஹக் என்பவரின் திருமணத்திற்கு பங்கேற்க வந்திருந்தனர். அவருடன் சகோ. குணங்குடி. ஹனீபா மற்றும் வழக்கறிஞர் ஜெய்னுலாபுதீன் ஆகியோரும் வந்திருந்தார்.

அன்று மாலை எங்கள் ஊருக்கு அருகில் உள்ள அக்கறைப்பள்ளி தர்ஹா இருக்கும் பெரிய குத்தகை கிராமத்திற்கு ஓய்வுக்காக சென்றிருந்தோம். அது கடலும், ஆறும் சூழ்ந்த ஒரு தீவு எனலாம். அதன் மணல்பாங்கும், பனை மரங்களும், மா மற்றும் முந்திரி தோப்புகளும், சவுக்கு காடுகளும் அக்கிராமத்தின் முகவரிகள்.

ஒருமுறை நான் கவிக்கோ. அப்துல் ரஹ்மானை அங்கு அழைத்துப் போயிருந்தேன். அப்பகுதியை பார்த்ததும் இது யாழ்ப்பாணம் போல் இருக்கிறது என்று வியந்தார்.

அந்த பொன்மாலைப் பொழுதில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது யி.ஷி.ரிபாய்க்கு அவரது நண்பர் டாக்டர். அஜ்மல் என்பவரிடமிருந்து காஷ்மீர் நிகழ்ச்சி குறித்து போன் வந்தது.

என்னிடம் போகலாமா? என்றார். இதே போன்ற அழைப்பு ஒரு மனித உரிமை அமைப்பிலிருந்து    ளி.ஹி. ரஹ்மத்துல்லாவுக்கும் வந்திருக்கிறது.

நாங்கள் சென்னை திரும்பியதும் இது குறித்து விவாதித்தோம். மத்திய அரசின் பிரதமர் அமைச்சகத்தின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் நிணீஸீபீலீவீ ஷினீக்ஷீவீtவீ & ஞிணீக்ஷீsலீணீஸீ ஷிணீனீவீtவீ என்ற காந்திய சிந்தனைகளை நாடெங்கிலும் பரப்பும் தொண்டு இயக்கம் ஜூலை 23 முதல் 25 வரை காஷ்மீரில் தோடா (ஞிளிஞிகி) நகரில் மூன்று நாட்கள் கருத்தரங்கை நடத்துவதாக அறிந்தோம்.

இதோடு பல மனித உரிமை அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன என்பதும் தெரியவந்தது.

எங்களைப் போல 25 பேருக்கு மட்டும்தான் தமிழகத்தில் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளதாக நிதழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து தகவல் வந்தது. வேறு சில அனைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் அடக்கம்.

எங்களோடு மமக பொருளாளர் ஹாருன் ரஷீதும் இணைந்துக் கொள்வதாக கூறினார். நாங்கள் எமது தலைமை நிர்வாகக் குழுவில் இப்பயணத்திற்கு ஒப்புதல் பெற்று ஜூலை 18 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்படுவதாக திட்டமிட்டோம்.

(பயணம் நாளை தொடரும்....)

காஷ்மீரில் நிகழ்ச்சி நடைபெற்ற டோடா நகரில் ஒரு மலைத் தொடர் காட்சி....

No comments:

Post a Comment