காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 10)
தொடர் ..... 10
... ஹஸ்ரத் பால் பள்ளிக்கு புறப்பட்டோம்.
இடையில் ஒரு பெரிய சீக்கிய குருத்வாரா இருந்தது. சீக்கிய மக்கள் சகஜமாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கோயில்கள் குறைவாக இருந்தாலும் மக்கள் பயமின்றி வந்து போகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில சர்ச்சுககளையும் நாங்கள் பார்த்தோம். சிறுபான்மை சீக்கியர், இந்துக்கள், கிரித்தவர்களின் வழிபாட்டுரிமைக்கு அங்கே எந்த தடையும் இல்லை.
அதுபோல் தொழில் மற்றும் வணிகத்திலும் அம்மக்கள் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். சமய நல்லிணக்கமாக அங்கு மக்கள் வாழ்கிறார்கள். என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
ஹஸ்ரத்பாலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய ஏரி இருக்கிறது. சற்று தூரத்தில் National College Of Institute என்ற கல்லூரி வருகிறது. அழகான வளாகமாக அது காட்சியளித்தது. பசுமையான புல்வெளி, தகர கூரை வேய்ந்த கட்டிடங்கள் என அது உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதன் வளாக நுழைவாயிலுக்கு மௌலானா ரூமியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எங்களின் கார் ஓட்டுனர் இங்கு நிறைய இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் என்றார். இந்த ஒற்றை வரி காஷ்மீரிகள் தங்களை இந்தியர்களாக கருதுவதில்லை என்பதையும், தங்களை காஷ்மீரிகள் என கூறிக் கொள்வதையே விரும்புகிறார்கள் என்பதையும் உணர்ந்தோம்.
அடுத்தடுத்த பல சந்திப்புகளிலும் பலரும் எங்களை இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்.
நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவில் வடகிழக்கில் வாழும் மக்களும் இதே போன்ற மனநிலையில், டெல்லிக்கு வருவதை இந்தியாவுக்கு போகிறோம் என்று சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சற்று நேரத்தில் ஹஸ்ரத் பால் வந்துவிட்டது.
மார்பிள்ஸ்களால் அழகான வேலைப்பாடுகளை கொண்ட மூன்று தனித்தனி நுழைவாயில்கள் அருகருகே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் வலது புறத்தில் பெரிய ஈத்கா மைதானம் உள்ளது.
ஹஸ்ரத் பாலை ஒரு தர்ஹா என்றே நாங்கள் அறிந்திருந்தோம். அதன் ஒரு பெரிய டூம் தாஜ்மஹாலை நினைவூட்டியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி ஒன்று இங்கு பாதுகாக்கப்படுவதாக ஒரு சாரர் நம்புகிறார்கள். உள்ளே சென்றால் அது தர்ஹா இல்லை. பள்ளிவாசல் என்று அறிந்தோம்.
மிஹ்ராபுக்கு மேலே ஒரு மாடம் இருக்கிறது. போலிசார் உள்ளே இயந்திர துப்பாக்கிகளுடன் சுற்றுகிறார்கள்.
அந்த மாடத்தில்தான் நபிகள் நாயகத்தின் தலை முடி பாதுகாக்கப்படுவதாக கூறினார்கள்.
நபிகள் நாயகத்தின் தலைமுடியை யார்? எப்போது? கொண்டு வந்தது என்பது பற்றிய ஆதார தகவல்கள் எதுவுமில்லை. இது நபிகள் நாயகத்தின் முடிதானா? என்பதை இறைவன் அறிவான்.
இப்படி தனது முடியை புனிதமாக கருதி பாதுகாக்க நபிகள் நாயகம் உத்தரவிட்டார்களா?? என்பதற்கான எந்த ஹதீஸ் குறிப்புகளும் இல்லை.
இதை நாங்கள் எங்களுக்குள் விவாதித்துக் கொண்டோம். சில வருடங்களுக்கு முன்பாக அந்த முடி காணமல் போனதும், பிறகு கண்டெடுக்கப்பட்டதாக அரசு அறிவித்ததும் நினைவுக்கு வந்தது.
இங்கு இறைவனுக்காக தொழுகை நடக்கிறதா? புனித முடிக்காக தொழுகை நடக்கிறதா? என புரியாமல் அதிலிருந்து வெளியானோம்.
டல் ஏரியின் அழகிய கரையில்தான் ஹஸ்ரத் பால் இருக்கிறது. முகலாயர் காலத்தில் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஒரு போலிஸார் கூறினார். சுமார் 45 வருடங்களுக்கு முன்பாக இது புதிதாக கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
காரணம் முகலாயர்களின் கட்டிடக் கலை போன்ற டூம் வடிவ மஸ்ஜிதுகள் காஷ்மீரில் மிகவும் குறைவு.
பிறகு நாங்கள் புகழ்பெற்ற சார்மினார் கார்டனுக்கு சென்றோம். எல்லாப் பூங்காக்களிலும் நுழைவுக் கட்டணம் உண்டு.
அங்கு நிறைய பள்ளிக்கூட பிள்ளைகளை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.
அப்படி பிள்ளைகளை கூட்டி வந்த ஆசிரியரிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம். காஷ்மீரில் இப்படி திறந்த வெளியில் பேட்டி எடுப்பதெல்லாம் மிகவும் ஆபத்தானது.
நாங்கள் எங்களை பத்திரிக்கையாளர்களாவோ, உண்மை அறியும் குழுவினராக காட்டிக் கொள்ளவில்லை. சுற்றுலா பயணிகள் போலவே பேச்சுக் கொடுத்தோம்.
காஷ்மீர் இப்போது இருப்பதுபோல் தொடரவேண்டும் என விரும்புகிறீர்களா? அல்லது வேறு அரசியல் தீர்வை விரும்புகிறீர்களா? என்றதும், எங்களுக்கு சுதந்திரம் தேவை. நாங்கள் நிம்மதியாக வாழ அது உதவும் என்றவர், நீண்ட நேரம் பேசவில்லை.
காரணம் பல்வேறு இடங்களை பார்க்க அவருக்கு பின்னால் பள்ளிக்கூட மாணவிகள் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர்.
அந்த பூங்கா சிறிய அளவிளானது. ஆனாலும் நிழல் பரப்பி இதமாக இருந்தது.
அந்த பூங்கா ஒரு சிறிய அணையை ஒட்டியிருந்தது. அருகிலுள்ள பெரிய மலையிலிருந்து சுரக்கும் தண்ணீர் இந்த அணையில் சேமிக்கப்படுகிறது.
அதிலிருந்து ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டு சலசலவென தண்ணீர் பூங்காவின் நடுவே ஓடிக் கொண்டிருந்தது. நேராக விவசாய நிலங்களை நோக்கி இத்தண்ணீர் ஓடுகிறது.
நாங்கள் அந்த அணைக்கு சென்று மலையை ரசித்தோம். அப்போது நாலைந்து கல்லூரிப் பெண்கள் அங்கு வந்தனர்.
அவர்களிடம் சென்று எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். முதலில் அவர்கள் மெல்ல தயங்கினாலும் பிறகு சகஜமாக பேசினார்கள்.
(இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்...)
ஹஸ்ரத் பாலுக்கு வெளியே...
கண்ணியமான ஆடைகளுடன் சுற்றி வரும் பொதுமக்கள்...
பள்ளிகூட ஆசிரியருடன் பேட்டி..._
No comments:
Post a Comment