காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 12) தொடர் ..... 12 தொடர்ந்து பூங்காவில் மேலும் பலரை சந்தித்தோம். அங்கு பயாஸ் (21) என்ற இளைஞரை சந்தித்தோம். சோபுர் (Sopure) என்ற ஊரிலிருந்து வந்திருப்பதாக கூறினார். அங்குள்ள கல்லூரியில் B.A. மூன்றாமாண்டு படிப்பதாகவும் கூறினார். காஷ்மீரின் நிலவரம் குறித்து சகஜமாக பேசினார். இந்திய ராணுவம் எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. இந்திய ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்றவர் எங்களுக்கு சுதந்திரம் கூட இரண்டாவதுதான். முதலில் எங்களுக்கு நிம்மதிதான் தேவை என்றார். பிறகு ஜான் முஸ்தாக் (21) என்பவரை சந்தித்தோம். அவரோடு ஏழெட்டு நண்பர்கள் ஒன்றாக இருந்தனர். குப்வாரா (KUPWARA) என்ற ஊரிலிருந்து சுற்றுலா வந்திருப்பதாக சொன்னார்கள். எங்கள் ஊர் காஷ்மீரின் அன்பையும், அழகையும் தன்னகத்தே கொண்டது என்று தங்கள் ஊர் பெருமையையும் கூறினார்கள். அங்குள்ள கல்லூரியில் அனைவரும் மூன்றாமாண்டு படிப்பதாகவும் கூறினார்கள். எங்களை நாங்கள் அறிமுகம் செய்து கொண்டோம். மிக தைரியமாகவும், சுற்றிலும் யாராவது கண்காணிப்பார்களோ என்ற அச்சமும் துளி கூட இல்லாமல் பேசினார்கள். எங்களது போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறுகிறார்கள். சுதந்திரத்திற்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும்! என்றவர்கள், காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரமளிப்பது தவிர்க்க முடியாததாகும் என்றார்கள். எங்கள் மண்ணை நாங்களே ஆள வேண்டும் என்று விரும்புகிறோம். இது தவறா? என்று எங்களிடம் கேள்வியெழுப்பினார்கள். அந்த நண்பர்கள் குழாம் சராமாரியாக எங்களை நோக்கி தங்களின் நியாயங்களை கேட்டனர். காஷ்மீரில் செல்வாக்குள்ள தலைவர்கள் யார் என்று கேட்டதுதான் தாமதம், அனைவரும் ஒரே குரலில் சொன்னது ஜீலானியின் பெயரைத்தான். இங்கே ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறோம். காஷ்மீரில் அரசியல் களத்தில் அப்துல்லா குடும்பத்தினரின் தேசிய மாநாட்டு கட்சியும், முப்தி மெஹபூபா ஷரிபின் மக்கள் ஜனநாயக கட்சியும் செயல்படுகின்றன. லடாக் மற்றும் ஜம்மு பகுதியில் காங்ரஸ், பாஜக, சீக்கியர்களின் சிறுத்தைகள் கட்சி ஆகியன வலுவாக உள்ளது. ஆனால் தனி நாடும் கேட்கும் போராட்ட தலைவர்களுக்குதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரவேற்பு இருக்கிறது. அரசியல் ரீதியாக உமர் அப்துல்லாவையும், அவர் குடும்பத்தையும் காஷ்மீரிகள் வெறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிய முடிந்தது. சேக் அப்துல்லா, அவர் மகன் ஃபருக் அப்துல்லா, பேரன் உமர் அப்துல்லா ஆகியோரை துரோகிகள் என இளைஞர்கள் விமர்சித்தார்கள். அதே நேரம் மெஹபூபா முஃப்தி மீது பலருக்கு நல்ல மரியாதை இருந்ததையும் அறிந்தோம். இதனிடையே மக்கள் செல்வாக்கு என்ற வகையில் ஹுரியத் அமைப்பின் தலைவர் ஜீலானி, மற்றொரு ஹுரியத் அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் பாரூக், ஜனநாயக விடுதலை கட்சி தலைவர் சபீர், ஜம்மு&காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோருக்கிடையே தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்வாக்கு இருக்கிறது. இதில் 90 சதவீத ஆதரவு ஜீலானிக்குதான் இருக்கிறது என்பது எங்களது பேட்டிகளின்போதும், சந்திப்புகளின் போதும் அறிய முடிந்தது. அவரை ஆதரித்தவர்களிடம் ஏன் அவரை ஆதரிக்கிறீர்கள்? என்றதற்கு, அவர்தான் எங்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுகிறார் என்றார்கள். அவருக்கு இப்போது வயது 83 ஆகிறது. ஜமாதி&இ&இஸ்லாமிதான் அவரது பள்ளிக்கூடம். அதே நேரம் அவரது இஸ்லாமிய அறிவுரைகளிலிருந்து மாறுபடும் மற்றவர்களும் கூட அவரை சமரசமில்லாத உறுதியான தலைவர் என்று பாராட்டுகிறார்கள். நாங்கள் முகல் பூங்காவிலிருந்து சாலிமார் தோட்டம் போனாம். அங்கு மொஹ்சின் என்பவரை, சந்தித்தோம். அவர் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பல்கலைக் கழகத்தில் படிப்பதாக சொன்னார். காஷ்மீரில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாக வருத்தப்பட்டவர், அரசுப் படைகளின் நடவடிக்கைகள் குறித்து குற்றம் சாட்டினார். இங்கு யாரை கேட்டாலும், எங்களுக்கு முதலில் சுதந்திரம் தாருங்கள் என்பதையே கூறுவார்கள் என்றார். அங்கு பல கல்லூரி மாணவ & மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நாங்கள் பேட்டி என்றதும் மறுத்துவிட்டார்கள். (இன்ஷா அல்லாஹ் பணயங்கள் தொடரும்...) பூங்காவிலும் சுதந்திரம் கோரும் வாசகங்கள்... சாலிமார் தோட்டத்தின் எழில்மிகு மண்டபம்... பயாஸ் மற்றும் அவரது நண்பர்கள்... |
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Sunday, 11 September 2011
காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 12)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment