காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 13)
தொடர் ..... 13
அடுத்து NISHAT எனப்படும் பகுதிக்கு சென்றோம். இதுதான் முகலியர் கட்டிய பூங்காக்களிலேயே மிகவும் பெரியது.
ஸ்ரீநகரின் அனைத்து பூங்காக்களுமே நகரின் கிழக்கு எல்லையான அந்த மலைத் தொடருக்கும், டால் ஏரிக்கும் இடையே அமைந்திருப்பவைதான் என்பதை அறிந்து கொண்டோம்.
இப்பூங்காவில் இருந்து எட்டிப் பார்த்தால் டால் ஏரியின் மறுமுனையில் உள்ள ஹஸ்ரத்பால் தெரியும்.
1634ல் முகலாய மன்னர் ஷாஜஹானின் ஆட்சியில் அவரது மருமகன் உருவாக்கியது என அங்கிருந்த கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கிறது.
அங்கிருந்து பார்த்தால் மலை உச்சியில் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு முகலாயர் கோட்டைகள் தெரிந்தது. அவை இப்போது ராணுவ முகாம்களில் செயல்படுகிறது.
நாங்கள் அங்கு லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை நிறைவேற்றினோம். இப்போது அங்கு வெயில் காலம். நாங்கள் மலையிலிருந்து ஓடிவரும் அந்த தண்ணீரில் ஒளு செய்தபோது மிகவும் இதமாக இருந்தது.
இங்கிருந்து வெளியேறும் நீர் டால் ஏரிக்கு சென்று, பிறகு விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. பேட்டி எடுப்பதற்கான உகந்த சூழல் இல்லை. காரணம் இதே பகுதியை 1/2 மணி நேரம் கடந்து மீண்டும் நாங்கள் வந்தபோது அரசுப்படைகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். காஷ்மீரில் சுவையான சாப்பாடு மிகவும் அரிது என்பதை நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.
பிறகு நாங்கள் ராஜ்பவன் கடந்து Chesma Shahi என்ற பூங்காவுக்கு போனாம். ராணுவ கெடுபிடிகள் நிறைந்திருந்தது.
பொதுவாக காஷ்மீரில் இரவு நேரத்தில் பயணிக்கும்போது வாகனங்களில் விளக்குகள் எரிய வேண்டும். கறுப்பு வண்ண கூலிங் ஸ்டிக்கர்கள் அங்கு கார் கண்ணாடிகளில் ஒட்டக் கூடாது.
அதாவது வெளியிலிருந்து பார்த்தாலே, உள்ளே இருப்பவர்கள் தெரிய வேண்டும்.
இதற்கு இடையிலேயே துலிப் தோட்டமும், நேரு பூங்காவும் இருக்கிறது. இவையெல்லாம் சமீப காலத்தில் உருவாக்கப்பட்டவை.
நாங்கள் இதையெல்லாம் சுற்றி வந்தபோது ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது. அங்கு தீவிரவாத பயம் துளியும் இல்லை என்பதையும், வெளிமாநில மக்களும், வெளிநாட்டு மக்களும் இயல்பாக சுற்றிதிரிவதையும் இந்துக்களும், சீக்கியர்களும், மற்றவர்களும் பயமின்றி அங்கு வாழ்கிறார்கள் என்பதையும், அவரவர் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன என்பதையும் அறிந்தோம்.
ஆனால், இந்திய அரசும், சில ஊடகங்களும் மிகைப்படுத்திய செய்திகளை பரப்பி மக்கள் நடமாடவே முடியாத தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது போல தோற்றம் உருவாக்கப்பட்டடிருப்பதையும் புரிய முடிந்தது.
காஷ்மீரில் நான்கு பேருக்கு ஒரு அரசுப்படை வீரர் நிறுத்தப்பட்டிருப்பது ஏன்? என காஷ்மீரிகள் கேட்கும் கேள்வி நியாயமானதே.
ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் எல்லையில் நிறுத்தாமல், பீதியும், பயங்கரவாதமும் நிலவுவது போல காரணங்களை உருவாக்கி அதை சாக்காக வைத்து எங்களை அடிமைப்படுத்துவது நியாயம்தானா? என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?
பிறகு நாங்கள் எங்களின் பேட்டிகளை முடித்துவிட்டு புகழ்பெற்ற டால் ஏரிக்கு புறப்பட்டோம். அது 18 கி.மீ. சுற்றளவு கொண்டது. பல கரைகள் உண்டு. ஒவ்வொரு கரையிலும் வாடகை படகுகள் காத்திருக்கின்றன. இதை நம்பியே பல ஆயிரம் பேர் வாழ்கிறார்கள்.
ஒரு படகுக்கு என்ன விலை என்பது அரசு சார்பில் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு படகில் 4 பேர் செல்லலாம். இதுதான் மிகச்சிறியது. நாங்கள் ஏழு பேர் இரண்டு படகை 900 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தோம்.
மிகவும் ரம்மியமான இன்பமான பயணம் அது. இதே ஏரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வந்தால் பயணம் செய்ய முடியாதாம். காரணம் தண்ணீர் உறைந்து பனிக்கட்டிகளாக கிடக்கும். அதில் ஏறி குதித்து விளையாடுவார்களாம்.
(இன்ஷா அல்லாஹ் (05.09.2011) திங்கட்கிழமை பணயங்கள் தொடரும்...)
நிஷாட் பூங்கா....
தொழுகையில்...
நிஷாட் பூங்காவிலிருந்து டால் ஏரியின் அடுத்த முனையில் ஹஜரத்பால் தெரியும்...
டால் ஏரியில் படகில் புறப்படுகிறோம்.
No comments:
Post a Comment