'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்தொடர்-17 |
மாயாவின் அழிவுக்குக் காரணமாக யார் இருந்தார்கள் என்ற கடந்த பகுதியின் கேள்வியுடன், மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மாயா! மாயா இனத்தவர் சொன்ன உலக அழிவைப் பற்றிப் பேசும் நாம், மாயாக்கள் பற்றிய சரித்திரத்தை சிறிதளவேனும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா. அறிவியல், கணிதம், கட்டடக் கலை, வானியல், விவசாயம், சித்திரம், சிற்பம் என்னும் பன்முகத் திறமை பெற்றிருந்த மாயன் இனத்தவருக்கு, இன்னுமொரு ஆச்சரியமான ஒரு முகமும் இருந்திருக்கிறது. அது யாருமே ரசிக்க முடியாத, சகிக்க முடியாத ஒரு முகமாகவும் இருந்திருக்கிறது. மாயன்களிடம் இதுவரை நாம் பார்த்த முகங்கள் எல்லாமே நல்ல முகங்கள். ஆனால் அந்த மற்ற முகமோ மிகக் கொடுமையானது, கொடூரமானது.
மாயன் இனத்தவர்கள் கடவுள் பக்தி மிகவும் அதிகம் உள்ளவர்கள். அவர்களின் அதிகப்படியான கடவுள் பக்தியே, அவர்களைக் காட்டுமிராண்டிகள் எனப் பார்க்கும்படி வைத்தது. உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்து வந்தது, இன்றும் இருந்து வருகிறது. ஆனால், மாயன்கள் கடவுளுக்குச் செலுத்திய காணிக்கை கொஞ்சம் வித்தியாசமானவை. அது என்ன தெரியுமா…? மனிதர்களின் தலைகளும், இருதயங்களும்தான்.
உயிருடன் இருக்கும் ஒரு மனிதனை, ஒரு பீடத்தில் படுக்க வைத்து, அவன் இருதயத்தை நோக்கிக் கத்தியைச் செலுத்தி, இருதயத்தை வெளியே எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதும், ஒரே வெட்டாகத் தலையைத் துண்டிப்பதும் மாயன்களின் வெகு சாதாரணமான ஒரு வழிபாட்டுமுறை. மாயன்கள், இந்து மதத்தைப் போலவே, பல கடவுள்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். சிலை வணக்கமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் வணங்கும் கடவுள்களில், முக்கியமான கடவுள்களுக்காகப் பல பிரமிடுகளையும் கட்டியிருந்தார்கள். அப்படிக் கட்டப்பட்ட பிரமிடுகளின் உச்சிகளில்தான் கடவுள் தொழுகை நடக்கும். அங்குதான் பலிகொடுக்கும் மனிதர்களைக் கொண்டு சென்று, அவர்களை உச்சியில் உள்ள பீடத்தில் படுக்க வைத்து……… கூரிய வாளால் கழுத்தில் ஒரே போடு...........! வெட்டப்பட்ட தலை பிரமிடின் உச்சியிலிருந்து படிகள் வழியே உருண்டபடி கீழே விழும்.
"இவ்வளவு நாளும் மிக நாகரீகம் உள்ளவர்களாக, அறிவாளிகள் போலப் பார்க்கப்பட்ட மாயாக்கள் இப்படி ஒரு காட்டுமிராண்டிகளா?" என நீங்கள் இப்போது முகம் சுழிப்பீர்கள். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாகரீகத்தில் வளர்ந்த நாம் அதைக் கற்பனைகூடப் பண்ண முடியாது என்பதால் முகஞ்சுழிக்கிறோம். ஆனால் இந்த நரபலி முறை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. எங்கள் இந்து மதத்திலும் இருந்திருக்கிறது. போருக்குச் செல்லும்போது ஒவ்வொரு அரசனும், தன் போர் வீரன் ஒருவனை நரபலியாக கொடுத்துவிட்டே சென்றிருக்கிறான் என்பது வரலாறு. சாக்தம், பைரவம் என்னும் இந்து மதப் பிரிவு மதங்களில், இந்த நரபலி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 'கால பைரவன்' என்பவரே நரபலி கேட்பவர்தான். அதிகம் ஏன், இன்றும் கூட காசியில், கங்கை ஆற்றங்கரைக்கு அருகில் தவம் செய்யும் 'அகோரிகள்', எரியும் பிணத்தை உண்ணுவது உண்டு. சமீபத்தில் 'நான் கடவுள்' என்னும் படத்தில், நடிகர் ஆர்யா கூட ஒரு அகோரியாகத்தான் வருகிறார். இதைச் சொல்வதால் நரபலியை நான் நியாயப்படுத்துவதாக அர்த்தம் கிடையாது. ஆதிகாலத்தில் இது தப்பான ஒரு விசயமாக கருதப்படவில்லை என்பதையும், தெய்வீகமான ஒன்றாகத்தான் பார்க்கப்படது என்பதையுமே சொல்ல வருகிறேன். இதில் மாயன்களும் விதிவிலக்காக இருக்கவில்லை.
"அட..! அப்படியென்றால் இந்து மதமும், மாயாக்களும் மட்டுமே நரபலியைக் கொடுப்பவர்களா?" என்று நீங்கள் கேட்டால், "அப்படி இல்லை. இது அனைத்து மதங்களிலும் இருந்திருக்கிறது" என்றே பதில் சொல்ல வேண்டும். கிருஸ்தவ, யூத மதங்களுக்குச் சொந்தமான வேதங்களிலும் இந்த நரபலி இருந்திருக்கிறது. தீர்க்கதரிசியான ஆபிரகாம், அவரது மகனான ஈசாக்கை கடவுளுக்குப் பலி கொடுக்க மலையுச்சிக்கு அழைத்துப் போனதும், பலி கொடுக்கப் போகும் கடைசிக் கணத்தில் கடவுள் அதைத் தடுத்ததும் வேதத்தில் இருக்கிறது. யூத, கிருஸ்தவ, மதங்களின் வரலாறுகளிலும் நரபலியின் அடையாளங்கள் இருந்திருக்கின்றன.
ஆனாலும் மத ரீதியாக எங்கள் மூதாதையர்கள் நரபலி கொடுத்த போது, தெய்வீகமாகப் பார்க்கப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது, மாயன்கள் செய்த போது கொடுமையாகப் பார்க்கப்பட்டது. அதுவே அவர்களின் வரலாறு அழிவதற்கும் காரணமாகியது. இந்தக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாயனை, மாயன் கலாச்சாரத்தை, மாயன் மதங்களை என அனைத்தையும் அழிக்க, மேற்படி ஒரு மனநிலை திட்டமிட்டே விதைக்கப்பட்டது. மாயன் என்றாலே மிகவும் கொடூரமானவர்கள் என்னும் அபிப்பிராயம் ஆதிகாலத்தில் இருந்தே புகுத்தப்பட்டது. இப்படி ஏன் புகுத்த வேண்டும் என்று ஆராய்வதற்கு முன்னர், நாம் ஒரு ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் பற்றிப் பார்க்க வேண்டும்.
2006ம் ஆண்டு 'மெல் கிப்சன்' (Mel Gibson) என்பவரால் 'அபோகலிப்டோ' (Apocalypto) என்னும் ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் ஒடிய அந்தப் படம், மாயன் என்னும் இனத்தவர்கள் உலக மகாக் கொடியவர்கள் எனச் சொல்லியது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எவரும் மாயன் இனத்தவர் மேல், அவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்திருந்தாலும், மதிப்புக் கொள்ள மாட்டார்கள். மாயன் இனம் அழிக்கப்பட வேண்டிய இனம்தான் என நினைப்பார்கள். அவ்வளவு மோசமாக ‘அபோகலிப்டோ’ படத்தில் மாயன்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதாவது, மாயன்களின் கலாச்சார அழிவுக்கு யார் காரணமாக இருந்திருந்தாலும், அவர்கள் மேல் எமக்குச் சிறிதேனும் கோபம் வராது. இதுவே மெல் கிப்சனின் உள்மன நோக்கமாகவும் இருந்தது. "மெல் கிப்சன் அந்தப் படத்தில் அப்படி எதுவுமே செய்யவில்லையே? அவர் வெளியிட்டது ஒரு மிக நல்லதொரு படமாச்சே!" என நீங்கள் நினைக்கலாம்.
உண்மைதான்! ‘அபோகலிப்டோ’ என்னும் படம், சாதாரணமாகப் பார்க்கும் போது மிக நல்லதொரு படம்தான். ஆனால், அதில் உள்ள நுண்ணரசியலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி மேலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மெல் கிப்சன், 2004ம் ஆண்டில் வெளியிட்ட இன்னுமொரு படமான 'த பாசன் ஆஃப் த கிரைஸ்ட்' (The Passion of the Christ) படத்தையும் பார்த்திருக்க வேண்டும். ‘த பாசன் ஆஃப் த கிறைஸ்ட்’ படம் ஏன் மெல் கிப்சனால் எடுக்கப்பட்டது என்பதையும் நீங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
யேசுநாதரின் சரித்திரத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்றே இந்தப் படத்தை எடுத்திருந்தார் மெல் கிப்சன். ஆனால் யூதர்கள், யேசுநாதரை எப்படி, எப்படி எல்லாம் சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதே இப்படத்தில் மிக முக்கிய பகுதியாக அமைக்கப்பட்டது. படத்தின் காட்சி வடிவங்களை மிகவும் அதிர்ச்சிகரமாக உருவாக்கியிருந்தார். படத்தைப் பார்த்த அனைவரின் அடிவயிறே கலங்கும் வண்ணமாக காட்சிகள் அமைந்திருந்தன. இதனால், பலதரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது அந்தப் படம்.
முடிந்தால் 'த பாசன் ஆஃப் த கிரைஸ்ட்' படத்தைப் பாருங்கள். உங்களால் பல காட்சிகளைக் காண முடியாத அளவிற்கு கொடூரமாகக் காட்சிகள் இருக்கும். யேசுவின் சரித்திரம் இதுவரை இப்படிச் சொல்லப்பட்டதே இல்லை. படத்தைப் பார்க்கும் உங்களுக்கு, யேசுநாதரைச் சித்திரவதை செய்தவர்கள் மேல் இனந் தெரியாத வெறுப்பும், கோபமும் உருவாகும். மெல் கிப்சனுக்கு வேண்டியதும் அதுதானோ என்ற சந்தேம் பலருக்கு எழுந்தது. தனது படங்களின் மூலம், பார்ப்பவர்கள் ஒரு இனத்தில் மொத்தமாக வெறுப்படைய வேண்டும், கோபப்பட வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமோ, என விமர்சகர்களை நினைக்க வைத்தது. அதில் உண்மையும் கூட இருக்கலாம்.
மெல் கிப்சன் அடிப்படையில், மிகத் தீவிரமான பழமைவாத கிருஸ்தவ மதவாதி. பழமைவாத கிருஸ்தவ மதத்தை நிலைநிறுத்த, எந்த விதமான படங்களை எடுக்கலாம் என்பதில் அவர் ஒரு 'டாக்டர்' பட்டமே பெற்றவர் போல சிந்திப்பார் என்கிறார்கள். இந்த மெல் கிப்சன் என்பவர் ஒரு ஹாலிவுட் நடிகர். ஆனால் அவர் வெளியிட்ட மேற்படி இரண்டு படங்களையும் தானே தயாரித்தும், இயக்கியும் வெளியிட்டிருந்தார். ஆனால் நடிக்கவில்லை.
தயவுசெய்து இனி நான் சொல்லும், சொல்லப் போகும் கருத்துகளை மதம், நம்பிக்கை என்னும் இடங்களிலிருந்து பார்க்காமல், எட்ட இருந்து பாருங்கள். அப்படிப் பார்த்தால், பல உண்மைகளைத் தொலைத்துவிடுவீர்கள். யேசுநாதரின் வரலாற்றைப் படமாக எடுத்த மெல் கிப்சன், ஏன் மாயனின் வரலாற்றை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்? ‘அபோகலிப்டோ’ என்னும் படத்தின் மூலம், மெல் கிப்சன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்? மாயன் இனத்திற்கும், மெல் கிப்சனுக்கும், கிருஸ்தவ மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இங்கு ஏன் தேவையில்லாமல் கிருஸ்தவ மதத்தை நான் இழுக்க வேண்டும்?’ என்ற கேள்விகளுக்குப் பதில்களை மாயன் கலாச்சாரம் அழிக்கப்பட்ட சரித்திரத்துடன் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
எல்லாவறையும் விளக்கமாகச் சொல்கிறேன்.......!
மாயன் இனத்தின் வளர்ச்சிகள் ஆரம்பித்தது கி.மு.10000 ஆண்டு அளவுகளில்தான். படிப்படியாக வளர்ந்த மாயன் நாகரீகம், கி.மு. 3000 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது. பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை அதி உச்சத்தைத் தொட்டது. ஒரு இனத்தின் நாகரீகம் என்பது கலை, கலாச்சாரம், மதம் ஆகிய அடையாளங்களுடன் சேர்ந்தே பயணம் செய்வது அல்லவா. மாயன்களின் நாகரீக வளர்ச்சியிலும் அவர்கள் மதம் பாரிய பங்கெடுத்தது. சூரியன், மழை, காற்று, மரணம், மருத்துவம், சந்திரன் என பல கடவுள்கள் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதிகம் ஏன், அவர்கள் விவசாயத்தில் வல்லவர்களாக அந்தக் காலத்திலேயே இருந்த காரணத்தால், சோளத்துக்கே (Maize-Corn) கடவுள் ஒன்றை வைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, பெண் கடவுள்களும் மாயன்களிடம் உண்டு.
மாயன்களின் கடவுள்களில் இருக்கும் இன்னும் ஒரு கடவுள் யாரென்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். "அடப் பாவிகளா!" என்று கூடச் சொல்லத் தோன்றும். ஆம்…! மாயன்கள் தற்கொலைக்கு என, 'இக்ஸ்டாப்' (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தனர். "என்ன..? தற்கொலைக்குக் கடவுளா....?" என்றுதானே கேட்கிறீர்கள். உண்மைதான் மாயன்களிடம் தற்கொலைக்குக் கூட கடவுள் உண்டு. தற்கொலை தப்பானதாகவே மாயன்களால் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்கொலை செய்பவர்கள் சொர்க்கத்தில் கடவுளின் அருகே இருப்பார்கள் என்பது மாயனின் நம்பிக்கை. மாயனின் அரசன் அமர்ந்திருக்கும் அரியணைக்கு கீழே, மாயனில் யாராவது ஒருவர், தானே கழுத்தில் கயிறு சுற்றி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வெகு சாதாரணம் அவர்களுக்கு. அப்படித் தற்கொலை செய்பவர்கள் சொர்க்கத்தில் உள்ள செடியில் பூவாக இருப்பர் என்பது அவர்கள் நம்பிக்கை. ஏனோ தற்கொலைக் கடவுள் பெண் கடவுளாக இருக்கிறார்.
தாங்கள் வணங்கிய கடவுள்களுக்காக, கோவில்களையும், பிரமிட்களையும் மாயன்கள் மிகப் பிரமாண்டமாகக் கட்டினார்கள். அதுவே அவர்கள் இன்றளவும் பேசப்படும் ஒரு இனமாக இருப்பதற்குக் காரணமாயும் அமைந்தது. ஆனால், அதுவே அவர்கள் அழிவுக்கும் காரணமாகவும் அமைந்தது. மாயன்கள் எப்போதும் ஒரு பேரரசுக்கு கீழே வாழ்ந்து வரவில்லை. பல அரசுகளை மாயன் இனத்தவர் தமக்காக ஏற்படுத்தி வாழ்ந்து வந்தனர். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி பல போர்கள் நடந்து வந்தன. கி.பி.900 ஆண்டுகளில் இருந்து கி.பி.1100 ஆண்டளவுகளில் மாயன்களில் பலர் திடீரெனக் கூண்டோடு மாயமாய் மறைந்ததும் நடந்தது. இது பற்றித்தான் நான் ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். இவர்கள் எப்படி மறைந்தார்கள் என்னும் மர்மம் பற்றி இன்றுவரை சரியான விளக்கம் கிடைக்காவிட்டாலும், அவர்களுக்கிடையே நடந்த போர்களினால்தான் அழிந்தார்கள் என்று கருதுபவர்களும் உண்டு. அப்படி மறைந்தவர்கள் போக, மாயன்களில் பல இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியும் இருந்தார்கள். அப்படி எஞ்சிய மாயன்கள், 'ஆட்ஸ்டெக்' (Aztek), 'இன்கா' (Inka) என இரண்டு பெரிய அரசுகளாகப் பிரிந்து, வடக்கிலும், தெற்கிலும் வாழ்ந்து வந்தனர். இவை தவிர்த்த மற்றவர்கள் சிதறிய நிலையில் ஆங்காங்கே பரந்து வாழ்ந்தும் வந்தனர்.
இந்தக் காலகட்டத்தில்தான் மாயன்களை நோக்கி அவர்களே எதிர்பார்த்திராத ஆபத்து, கழுகுகள் போல வந்தன. பறந்து அல்ல மிதந்து வந்தன. ஆம்....! விரிந்து, பரந்து இருந்தது அமெரிக்கப் பெருங்கண்டம். வடக்கு, மத்தி, தெற்கு எனப் பிரியாமல், ஒன்றாக இணைந்த பெருங் கண்டமாக இருந்தது அமெரிக்கா என்னும் நிலப்பரப்பு. பெரும் வளங்களையும், பூர்வீக மக்களையும் தன்னுள் அடக்கி அமைதியுடன் இருந்தது அது. அந்த அமைதியைக் குலைக்க மிதந்து வந்தன கழுகுகள்.........!
பெரிய வளங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அதைத் தன் மூக்கினால் முகர்ந்து கொள்ளும் ஆற்றலுடன், வெறி பிடித்து இருந்தன ஐரோப்பிய நாடுகள். தான் முகர்ந்து கொண்டதை, தன் வசமாக்கும் குள்ள நரித்தனம் இரத்தத்தில் ஊறிய நோய் போல அவர்களுக்கு அப்போது ஊறி இருந்தது. பெரும் நிலப்பரப்பாய் விரிந்திருந்த அமெரிக்காவை, 'அப்பத்தைத் துண்டு போடும் பூனைகள் போல' ஐரோப்பாவின் பல நாடுகள் துண்டுகளாக்கி தம் வசமாக்கின. அதில் மாயன் பிரதேசங்கள் பக்கம் தன் கழுகுக் கண்ணைத் திருப்பியது ஸ்பெயின் நாடு.
அப்புறம் என்ன........! கொலையும், கொள்ளையும், அபகரிப்பும்தான் அமோகமாக அரங்கேறியது. பீரங்கிகளையே பார்த்து அறியாத மாயன்களின் 'யுகடான்" (Yucatan) மாநிலம் ஸ்பானியர்கள் வசம் வீழ்ந்தது. நிலத்தைக் கைப்பற்றிய ஸ்பானியர்கள், கொள்ளையடிப்பதை மிக நேர்த்தியாகச் செய்தார்கள். ஆனால் அவர்கள் அத்துடன் நிறுத்தி விடவில்லை........! எந்த நாட்டைக் கைப்பற்றச் சென்றாலும் ஒரு கையில் பீரங்கியும், மறு கையில் பைபிளுமாக செல்வதே அவர்கள் வழக்கமாயிற்றே! இங்கும் அவர்கள் அதைக் கைவிடவில்லை. கத்தோலிக்க மதத்தில் தீவிரமாக இருக்கும் ஸ்பானியர்கள், அடுத்தவர் மதத்தை மதிக்கும் வழக்கமே இல்லாதவர்கள். தங்கள் மதத்தைப் பரப்புவதிலேயே குறிக்கோளுள்ளவர்கள். இதனால், மாயன்களின் பல கடவுள்கள் வழிபாட்டையும், வழிபாட்டு முறைகளையும் ஸ்பானியர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மாயன்கள் தங்கள் மதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, கிருஸ்தவ மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றால் ஆயுதத்தால் மட்டும் முடியாது என்பதை உணர்ந்தார்கள். இதற்காகவே, ஸ்பெயினிலிருந்து வந்திறங்கினார் ஒருவர். அவர் பெயர் 'டியாகோ டி லாண்டா' (Diego de Landa). இவர் ஒரு கிருஸ்தவ மதகுருவாவார்.
கி.பி.1549ம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக, மாயனின் பெரு மாநிலமான யுகாடானுக்கு வந்து சேர்ந்தார் லாண்டா. ஆரம்பத்தில் மாயா மக்களுடன் நல்லவர் போல உரையாடி, உறவாடி அவர்களுடன் சேர்ந்தே இருந்தார் லாண்டா. மாயாவுடன் கூட இருந்து, அவர்களை முழுவதுமாக அறிந்து கொண்ட லாண்டா, இறுதியில் செய்த ஒரு விசயம்தான், இப்போதும் அறிஞர்களால் மிகவும் கண்டிக்கப்படுகிறது. அதுவே மாயன்களை முழுமையாக நாம் அறியாமல் செய்த கொடுமையாகவும் அமைந்தது. அப்போதே, "லாண்டா செய்தது சரியானதுதான்" என்று கிருஸ்தவ ஆதரவாளர்கள் சிலர் அவரை ஆதரிக்க, "அட..! இப்படிச் செய்து விட்டாரே!" என அதே கிருஸ்தவர்களில் பலர் கோபத்துடன் கொதித்தார்கள். அப்படி லாண்டா என்னதான் செய்தார்?
இராணுவ அடக்கு முறையுடன் மாயனை நசுக்கிய ஸ்பானியர்களின் மத்தியில், சாந்தமான முகத்துடன் அன்பைப் பொழியும் அகிம்சை வடிவமான 'லாண்டா' வித்தியாசமானவராக மாயன்களுக்குத் தெரிந்தார். "அட! இப்படியும் ஒரு நல்ல ஸ்பானியரா?" என்று அவருடன் உறவாட ஆரம்பித்தனர். மாயா மக்களுடன், மக்களாகச் சேர்ந்து வாழ்ந்தார் லாண்டா. அவர் புத்திசாலித்தனமாக, முதலில் மாயா மக்களின் மொழியைக் கற்றுக் கொண்டார். அப்படிக் கற்றுக் கொண்டவர் ஒரு நல்ல விசயத்தையும் அப்போது செய்தார். அதாவது மாயன்களின் எழுத்து முறையை அவர்களிடமே கேட்டு தனக்கென பதிவு செய்தும் வைத்திருந்தார்.
மாயன்களுடன் பழகிய லாண்டா, படிப்படியாகத் தனது மத போதனையை ஆரம்பிக்கத் தொடங்கினார். கிருஸ்தவ மத போதனைகளை ஆரம்பித்தவர், மாயாக்களின் கடவுள் வழிபாட்டை விட்டு விடும்படி அவர்களை வற்புறுத்த ஆரம்பித்தார். ஸ்பானியர்களிடம் இருந்த பயத்தில் இவரது மதத்தை ஆதரிப்பது போல இருந்த மாயாக்கள், தங்கள் தெய்வங்களை இரகசியமாக வணங்கி வரத் தொடங்கினர். இரவுகளில் சில மணி நேரங்கள் காணாமல் போனார்கள் மாயாக்கள். 'இவர்கள் இரவில் எங்கே போகின்றார்கள்?' என்று ஒளிந்திருந்து பார்த்த போதுதான் லாண்டாவுக்கு அந்த உண்மை தெரிய ஆரம்பித்தது.
ஆம்..! மாயாக்கள் லாண்டாவுக்குத் தெரியாமல் இரவில் தங்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோவிலுக்குச் சென்று, தங்கள் கடவுள்களை வழிபட்டு வந்தனர். மாயன்களே அறியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அந்தக் கோவிலைக் கண்ட லாண்டா மிருகம் போல ஆனார். அப்படி மிருகமான லாண்டா, செய்த மிருகத்தனமான செயலைத்தான் இப்போது உலகமே கண்டிக்கிறது. வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். அவர்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.
'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதை மாயாக்களுக்கு உதவி செய்யும் இரட்சகர் போல வந்து சேர்ந்த லாண்டாவும் செய்தார். இந்தச் செயலை உலகில் உள்ள எவருமே ஆதரிக்கவில்லை. அனைவருமே கடுமையாகக் கண்டித்தார்கள். இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், பொன் போலக் கிடைக்கவே முடியாத பொக்கிசங்கள். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் இப்போதுள்ள பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் வெகு சுலபமாக விடை கிடைத்திருக்கும்.
அதிகம் ஏன், '2012ம் ஆண்டு உலகம் அழியுமா? இல்லையா?' என்பதை நாம் இந்த அளவுக்கு ஆராயத் தேவையே இல்லாமல் விடை சுலபமாகக் கிடைத்திருக்கும். லாண்டாவினால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களில், அவர் கண்ணில் படாமல் தப்பியது நான்கே நான்கு நூல்கள் மட்டும்தான். The Madrid Codex, The Dresden Codex, The Paris Codex, Grolier Codex என்பவையே எஞ்சிய நான்கு புத்தகங்களுமாகும். அவையும் பின்னாட்களில் ஐரோப்பியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்பெயினில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும், பிரான்ஸில் ஒன்றும், மெக்சிககோவில் ஒன்றுமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. மான் தோலைப் பாடமாக்கி, விசிறி போன்று மடிக்கப்பட்டு புத்தகங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன அவை.
ஆயிரக்கணக்கான புத்தகங்களை எரித்த இந்தக் கொடுமையை மாயன் மக்களுக்குச் செய்வதாக நினைத்து, ஒட்டு மொத்த உலகிற்கே செய்தார் லாண்டா. அவர் நினைத்தது என்னவோ, 'ஒரு காட்டுமிராண்டிகளின் கலாச்சாரத்தையும், மத நம்பிக்கையையும் நான் அழிக்கிறேன். உண்மையான மதம் என்பது எனது மதம் மட்டும்தான்' என்பதே! ஆனால் அவர் அறியாமல் போனது 'இவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல, பிற்காலத்தில் உலகமே வியக்கப் போகும் அறிவாளிகள்' என்பதை.
ஆனால், உண்மை அவ்வளவு சுலபமாக அழிந்து விடுவது இல்லை அல்லவா…….? லாண்டா அறியாத ஒன்றும் அப்போது நடந்தது. 'நான் எல்லா நூல்களையும் அழித்து விட்டேன்' என்ற மமதையுடன் திரும்பிய லாண்டா, எப்படி அதைத் தவற விட்டார் என்பதுதான் இன்றும் உலகம் வியக்கும் ஒன்று. ஆம்…….! தங்கள் நூல்களில் உள்ள அனைத்து விசயங்களையும் முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு பகுதிகளையாவது தாங்கள் வாழ்ந்த அனைத்து இடங்களிலும், கட்டடங்களிலும், கோவில்களிலும், நிலங்களிலும், 'ஹைரோ கிளிஃப்ஸ்' (Hieroglyphs) என்று சொல்லப்படும் சித்திர எழுத்துகளில் வடித்து வைத்திருந்தார்கள் மாயன்கள். கொஞ்சம் யோசித்தால் , இப்படி எல்லாம் நடக்குமோ என்று மாயன்களுக்கு முன்னரே தெரிந்திருக்குமோ என்ற ஆச்சரியமே எமக்கு மிஞ்சுகிறது. மாயன்கள் எழுதி வைத்த சித்திர எழுத்துகளைப் பார்த்தால் அசந்தே போய்விடுவீர்கள். அவ்வளவு அதிக எண்ணிக்கையான சித்திர எழுத்துக்கள். இலட்சக்கணகான எழுத்துக்களை எல்லாச் சுவர்களிலும் தீட்டி வைத்திருந்தார்கள். புத்தகங்கள் போல இல்லாவிட்டாலும், இதுவாவது கிடைத்ததே என்னும் மன நிம்மதியைத் தரும் அளவிற்கு இருந்தன அவை.
லாண்டா என்னும் கிருஸ்தவப் பாதிரியார் ஒருவர் இப்படிச் செய்தது அக்காலங்களிலேயே கிருஸ்தவர்கள் பலராலேயே கண்டிக்கப்படத் தொடங்கிவிட்டது. படிப்படியாக இந்தக் கண்டனம் அதிகரித்து, இது ஒரு கிருஸ்தவ சர்வாதிகாரத்தனம் என்னும் ஒரு எண்ணமும் தோன்றியது. அதனால், லாண்டா செய்தது சரிதான் என்று உலகத்தை நம்ப வைக்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு உருவாகியது. எதைச் சொன்னால் லாண்டா செய்தது நியாயமாகும் என யோசித்தார்கள்? அதற்கு அவர்கள் ஒரு 'துருப்புச் சீட்டைக்' கையில் எடுத்தார்கள். அந்த துருப்புச் சீட்டுத்தான், 'மாயன்கள் நரபலி கொடுக்கும் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள். இவர்கள் மனிதர்களே இல்லை. மிகவும் கொடூரமான பயங்கரவாதிகள்' என்னும் சிந்தனையை விதைப்பது. கொடூரமான மிருகங்களின் நூல்களும் கொடூரமானதாகத்தானே இருக்கும். அதை அழித்தால் தவறில்லை அல்லவா? இந்த நினைப்பை உலகிற்கு நிலை நாட்டத் திட்டமிட்டார்கள். இதன் இன்றைய ஒரு வடிவம்தான் 'மெல் கிப்சன்' எடுத்து வெளியிட்ட 'அபோகலிப்டோ' என்னும் மாயன்கள் பற்றிய கொடூரமான சித்தரிப்புப் படம் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மாயன்களின் மதங்களையும், அவர்களின் நிலைப்பாடுகளையும் சில கோணங்களில் அவதானிக்கும்போது, இந்துக்களின் சாயல் அவர்களுக்கு இருக்கிறதோ என்னும் எண்ணம் பலருக்குத் தோன்றாமல் இல்லை. மாயாக்களுக்கும் இந்துக்களுக்கும் சம்பந்தம் உண்டா என்ற ஆராய்ச்சியும் சிலரால் மேற்கொள்ளவும் பட்டது. அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில பதில்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்துக்கள் என்ன இந்துக்கள், மாயன்களுக்கும் தமிழர்களுக்குமே சம்பந்தம் உண்டு என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
"என்னடா இது? இதுவரை நன்றாகத்தானே எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது, என்ன ஆச்சு இவருக்கு?" என்றுதானே நினைக்கிறீர்கள்? "குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று இவரும் ஆரம்பிக்கப் போகிறாரோ?" என்றும் யோசிக்கிறீர்கள். இல்லையா?
'இல்லை, நிச்சயமாக இல்லை' நீங்கள் இதுவரை நினைக்க முடியாத, கேள்விப்பட்டிராத கோணத்தில் இந்தத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு சாத்தியங்கள் சில உண்டு. இதை நான் சொன்னால், நீங்கள் நம்பவே தேவையில்லை. வேறொருவர் சொன்னால்? அதுவும் அவர் ஒரு அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் என்றால் நம்புவீர்களா?
அந்த அமெரிக்க ஆய்வாளர் என்ன சொன்னார் தெரியுமா? சொல்கிறேன்....! அடுத்த தொடரில் சொல்கிறேன்....!
பிற்குறிப்பு: கிருஸ்தவ மதவாதிகள் என்று இங்கு நான் குறிப்பிடுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அடிப்படைப் பழமைவாதிகளைத்தான். இன்று இருக்கும் யாரையும் அல்ல. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.
|
|
|
|
|
|
|
No comments:
Post a Comment