Wednesday, 4 April 2012

சுய தொழில்கள்-20.5 விரால் மீன் வளர்ப்பு

விரால் மீன் வளர்ப்பு

விறு விறு லாபம் தரும் விரால் மீன்


 
ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்  என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து.  இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர்  ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச்  செயல்படுத்தி வருகிறது இம்மையம்.

மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க.  விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற  பத்து ரகங்களுக்கும் நல்ல  விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.

“ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும். பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத் தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும். இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். (பார்க்க, பெட்டிச் செய்தி) மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
நோய்களும்  பெரியதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்த விற்பனைக்குத் தயாராகி விடும்.
ஆறு சென்ட் குளத்தில் விரால் மீன் வளர்க்க இப்ராஹிம் சொல்லும் செலவு, வரவு கணக்கு
விவரம்
 செலவு
வரவு
தொழுவுரம்
100
 
மீன் குஞ்சு
1,000
 
உணவு
15,000
 
மின்சாரம் (தண்ணீருக்கு)
2,000
 
அறுவடை, பராமரிப்பு
1,500
 
200 கிலோ மீன் மூலம் வரவு
 
50,000
மொத்தம்
19,600
50,000
நிகர லாபம்
 
30,400
குறிப்பு: குளம் வெட்டுவதற்கான செலவான 15,000 ரூபாய் நிரந்தர முதலீடு என்பதால் அது செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
            நிறைவாக விற்பனை பற்றி பேசிய இப்ராஹிம், “நாம எங்கயும் அலைய வேண்டியதில்லை நம்மகிட்ட மீன் இருக்கறது தெரிஞ்தாலே வியாபாரிவர் தேடி வந்துடுவாங்க. எனக்கு நான்கு குளம் இருக்கறதால். மூன்று மாசத்துக்கு ஒரு தடவை மீன்களை விற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். குளம் வெட்டுற செலவும் ஒரே ஒரு முறைதான். கொஞ்சம் அனுபவம் வந்துவிட்டால் குஞ்சுகளையும் வெளிய வாங்க வேண்டியதில்லை. நல்ல ஆண், பெண் மீன்களை எடுத்து தனியா சிமென்ட் தொட்டியில் விட்டு, ஹார்மோன் ஊசி போட்டு முட்டையிட வெச்சு நாமளே குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக்கலாம்.

பத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம் என்றால் ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வைத்தால் சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்னா வலைகள் போட்டு பறவைகளிடமிருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான்  லாபம் கிடைக்கும். ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டால் 300 மீன்கள் கண்டிப்பாக வளர்ந்துடும். நன்றாக பராமரித்தால் 450 மீன்கள் வரைகூட தேத்தி விடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இரந்து 300 கிலோ மீன்வரைக்கும் அறுவடையாகும். குறைஞ்சபட்சமாக 200 கிலோனு வைத்துக் கொண்டால்  கிலோ 250 ரூபாய்ங்கிற கணக்கில் பத்து மாதத்தில் 50,000 ரூபாய்க்கு விற்றுவிடலாம். எல்லாச்செலவும் போக 30,000 ரூபாய் வரை கண்டிப்பா லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு
நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தொலைபேசி             0462-2560670      
ஹனீபா, மைய இயக்குநர், அலைபேசி:             94431-57415      
ஷெரீப், ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைப்பாளர், அலைபேசி:             98946-77286      
இப்ராஹிம், அலைபேசி:             97915-78187      
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடுகள்

விரால் மீன் வளர்ப்பு-2மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!

மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.

45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.
60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.

எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!

விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’

ஐந்து சென்டில்… 1,25,000!

நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’
இணையத்திலிருந்து

No comments:

Post a Comment