காதர்அத்னான்:இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு இன்னொரு ஆதாரம்!
20 Feb 2012
ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னானின் சிறை உண்ணாவிரதம் 65 தினங்களை கடந்த வேளையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் கோரமுகமும் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசு நிர்வாக ரீதியான சிறை(Administrativedetention) என்ற பெயரால் விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீன் மக்களுக்காக தனி மனிதனாக போராடி வருகிறார் அத்னான். மருத்துவமனையின் படுக்கையில் மிகவும் ஆபத்தான நிலையில் படுத்திருக்கும் அத்னான், உலகின் மிகப்பெரிய க்ரிமினல் அரசை மண்டியிடச் செய்வாரா? என்பதை உலகம் உற்றுநோக்கி வருகிறது.
இஸ்ரேல் என்ற ரவுடி தேசத்தின் அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் கடந்த 45 ஆண்டுகளாக ஃபலஸ்தீன் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். வதை சிறைகளும், வன்முறையும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளிடமிருந்து பிரிக்கமுடியாத அம்சம் என்பது உலகிற்கு தெரிந்த சேதி. சர்வதேச சட்டங்கள் எதுவும் தனக்கு பாதகமில்லை என்ற திமிரிலும், அமெரிக்காவின் அரவணைப்பிலும் ஆட்டம் போட்டுவரும் இஸ்ரேலுக்கு அத்னான் போன்ற ஃபலஸ்தீன போராளிகள்தாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்கள்.
யார் இந்த அத்னான்? – இஸ்லாமிக் ஜிஹாத் என்ற ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர் என்பதை தவிர வேறொன்றும் அவரைப் பற்றி வெளியுலகிற்கு தெரியாது. மேற்குகரையில் தனது வீட்டிலிருந்து கடந்த டிசம்பர்-17-ஆம் தேதி நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் அத்னானை கைது செய்தது. விசாரணை என்ற பெயரில் 18 தினங்கள் கொடூர சித்திரவதைகளுக்குப் பிறகு குற்றம் எதுவும் சுமத்தாமல் அரசு நிர்வாகரீதியான சிறை என்று கூறி அத்னானை சிறையில்அடைத்தது இஸ்ரேலிய சியோனிஷ அரசு.
முன்னூறுக்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் இதே குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது குறித்து எவ்வித கேள்வியும் எழுப்புவதற்கு வாய்ப்பை வழங்காமல் இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் எவரையும் 6 மாதம் வரை சிறையில் தள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் சிறைக்காவலை மீண்டும் ஆறுமாதத்திற்கு நீட்டிக்கலாம். இத்தகையதொரு கொடிய கறுப்புச் சட்டம் உலகில் இஸ்ரேலில் மட்டுமே அமுலில் உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களிடையே இரண்டு தடவை மட்டுமே அத்னான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் அரை மணிநேரம் வீதம். பேசும் பொழுது அருகில் ஆயுதமேந்திய இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் வட்டமிடுவர். உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ள அத்னானை நான்கு வயதான மகளால் அடையாளம் காணமுடியவில்லை என்று அவரது மனைவி ராண்டா அத்னான் கூறுகிறார். தற்போது இரவு நேரங்களில் திடீரென விழித்து தந்தையை கேட்டு மகள் அழுவதாக ராண்டா தெரிவிக்கிறார். திருமணத்திற்கு முன்பு ஐந்து தடவையும், திருமணத்திற்கு பிறகு இரண்டு தடவையும் இஸ்ரேல் ராணுவம் அத்னானை கைது செய்துள்ளது. ஆனால், அத்னான் ஏதேனும் தாக்குதல்களில் தொடர்புடையவர் என்பதை நிரூபிக்க ஒரு முறை கூட இஸ்ரேலிய அதிகாரிகளால் இயலவில்லை.
அத்னானை குறித்து அவருடன் முன்பு அஸ்கெலடான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபூ மரியா நினைவு கூறுகையில், ‘அத்னானுடன் இருந்த வேளையில் சிறை என்பது ஒரு பல்கலைக்கழகமாக இருந்தது. அத்னான் ஒரு பேராசிரியரைப் போல் இருந்தார்’ என்று குறிப்பிடுகிறார்.
மருத்துவர்கள் அத்னான் இன்னும் சில நாட்கள்தாம் உயிரோடு இருப்பார் என்று கூறுகிறார்கள். எந்தவொரு உண்ணாவிரதப் போராட்டமும் 70 நாட்களை தாண்டியதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் (இங்கே ஒரு சந்தேகம் எழும், இந்தியாவின் மணிப்பூரில் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா 10 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கிறாரே? என்று. ஆனால் அவருக்கு அரசு கட்டாயப்படுத்தி திரவ உணவை மூக்கு வழியாக டியூப் மூலம் அளித்துவருகிறது. அத்னான் கடந்த 65 தினங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்)
அத்னானின் தந்தை கிலாத் ஷாலித் என்ற இஸ்ரேலிய ராணுவ வீரனை குறித்து கவலையுடன் மேற்கோள்காட்டுகிறார். கிலாத், ஹமாஸினால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவர் விடுதலையான பொழுது பூரண உடல்நலத்துடன் தனது குடும்பத்தாரை சந்தித்தார். அத்னானின் தந்தை கேட்கிறார். ‘எங்கே கிலாத் ஷாலிதின் பெற்றோர்கள்? இந்த மனிதநேயத்திற்குரிய வழக்கை குறித்து எனக்காக அவர்கள் வருந்துவார்களா? எங்கே சென்றார்கள் அவர்கள்?’ கேள்வி எழுப்பும் அவர் கிலாதுடன் தனது மகனின் கைதை ஒப்பிட்டு இவ்வாறு கூறினார்: ‘எனது மகன் வீட்டில் வைத்து மனைவி, பிள்ளைகளுக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டான். அவனிடம் எவ்வித ஆயுதமும் இல்லை. ஆனால், கிலாத் ஆயுதமேந்திய ராணுவவீரனாக இருந்தார். ஷாலித் காஸ்ஸா மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களுடைய வீடுகளை இடித்தவர். ஆனால் ஷாலித் விடுதலையா கி உள்ளார்.’ என்று தனது ஆதங்கத்தைவெளியிடுகிறார் அவர்.
கிலாத் ஷாலிதின் விடுதலைக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்த ஐ.நா சபை பொதுச் செயலாளர் எங்கு ஓடி ஒழிந்தார் என்று தெரியவில்லை. ஜனநாயகத்தையும், மனிதநேயத்தையும் குறித்து அடிக்கடி கவலைப்படும் மேற்கத்திய நாடுகள் வாய் மூடிஇருக்கின்றன. இஸ்ரேலின் பயங்கரவாதத்தை குறித்து இவர்கள் எப்பொழுதுதான் கவலைப்பட்டார்கள்? சர்வதேச சமூகத்தின் தீராத மெளனம்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து அரங்கேற்ற இஸ்ரேலுக்கு துணிச்சலை கொடுத்துள்ளது.
“நான் பட்டினி கிடப்பது நீங்கள் இந்த பூமியில் வாழ்வதற்காகும். நான் மரணிப்பது உங்களின் வாழ்க்கைக்காக. ஆதலால் புரட்சியின் பாதையில் துணிச்சலுடன் உறுதியாக நில்லுங்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதன் மிகவும் பயங்கரமான குணத்தை தான் தற்போது உபயோகித்து வருகிறது. குறிப்பாக சிறைக் கைதிகளிடம். நான் அவமதிக்கப்பட்டேன். கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானேன். எதற்கும் எவ்வித காரணமுமில்லை. நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனர்களை சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்ய இஸ்ரேல் உபயோகிக்கும்அரசு நிர்வாக ரீதியானகைது என்ற அபத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும்வரை எனது போராட்டம் தொடரும் என்றுநான் அல்லாஹ்விடம் உறுதியளித்துள்ளேன்.”-வழக்கறி ஞர் மூலமாகஃபலஸ்தீன் மக்களுக்கு அளித்த செய்தியில் அத்னான் கூறியுள்ளார்.
அத்னான் போன்ற லட்சியவாதிகளின் உறுதிக்கு முன்னால் ஆதிக்க சக்திகள் எப்பொழுதும் தோல்வியைத்தான் தழுவார்கள். அவர்கள்தொடர்ந்து தங்களதுஅட்டூழியங்களை அரங்கேற்ற முடியாது. இதுதான் வரலாறு நமக்கு தரும் பாடமாகும். அத்னானின் உண்ணாவிரதப் போராட்டம் ஃபலஸ்தீன் போராட்டத்தை அணையா விளக்காக ஜொலிக்கச் செய்யட்டும்! அவருடைய வாழ்நாளை இறைவன் நீட்டிக்க செய்யட்டும்!
அ.செய்யது அலீ.
No comments:
Post a Comment