Monday, 2 April 2012

சுய தொழில்கள்-20.2 இயற்கை மீன் வளர்ப்பு


இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!


 
செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.

நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால  இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.

வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.

35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின்  அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.

பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

குஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும் மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த தீவனங்கள் மட்டுமில்லாமல் தினமும் 5கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல்வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இட வேண்டும். துளசி, சிறியாநங்கை  போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதே போல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.

இதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஒரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம். வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, “போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் இரண்டு கிலோ வரை எடை வரும். சி.சி.சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரைகிலோ எடை இருக்கும்.
33 சென்ட் நிலத்தில் 6 மாதங்களில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் வரவ –செலவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
மீன்குஞ்சு
3,000
 
தீவனம்
6,000
 
சாணம்
2,000
 
உரங்கள்
1,000
 
மீன் மூலம் வரவு (700X85)
 
59,500
மொத்தம்
12,000
59,500
நிகர லாபம்
 
47.500
இரண்டு மாத வயதுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கிறப்போது இறப்பு விகிதம் குறைந்துவிடறதால் எண்பது சதவிகிதம் மீன்கள் வளர்ந்து வந்துவிடும். அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த எல்லா  வகை கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா சராசரியாக  1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியாக  கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராமரிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு : பிச்சை பிள்ளை
அலைபேசி :             80985 – 54747      

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

 
ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்  என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து.  இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர்  ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச்  செயல்படுத்தி வருகிறது இம்மையம். 

மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க.  விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற  பத்து ரகங்களுக்கும் நல்ல  விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.

“ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும். பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத் தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும். இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். (பார்க்க, பெட்டிச் செய்தி) மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
நோய்களும்  பெரியதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்த விற்பனைக்குத் தயாராகி விடும்.
ஆறு சென்ட் குளத்தில் விரால் மீன் வளர்க்க இப்ராஹிம் சொல்லும் செலவு, வரவு கணக்கு
விவரம்
 செலவு
வரவு
தொழுவுரம்
100
 
மீன் குஞ்சு
1,000
 
உணவு
15,000
 
மின்சாரம் (தண்ணீருக்கு)
2,000
 
அறுவடை, பராமரிப்பு
1,500
 
200 கிலோ மீன் மூலம் வரவு
 
50,000
மொத்தம்
19,600
50,000
நிகர லாபம்
 
30,400
குறிப்பு: குளம் வெட்டுவதற்கான செலவான 15,000 ரூபாய் நிரந்தர முதலீடு என்பதால் அது செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
            நிறைவாக விற்பனை பற்றி பேசிய இப்ராஹிம், “நாம எங்கயும் அலைய வேண்டியதில்லை நம்மகிட்ட மீன் இருக்கறது தெரிஞ்தாலே வியாபாரிவர் தேடி வந்துடுவாங்க. எனக்கு நான்கு குளம் இருக்கறதால். மூன்று மாசத்துக்கு ஒரு தடவை மீன்களை விற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். குளம் வெட்டுற செலவும் ஒரே ஒரு முறைதான். கொஞ்சம் அனுபவம் வந்துவிட்டால் குஞ்சுகளையும் வெளிய வாங்க வேண்டியதில்லை. நல்ல ஆண், பெண் மீன்களை எடுத்து தனியா சிமென்ட் தொட்டியில் விட்டு, ஹார்மோன் ஊசி போட்டு முட்டையிட வெச்சு நாமளே குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக்கலாம்.

பத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம் என்றால் ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வைத்தால் சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்னா வலைகள் போட்டு பறவைகளிடமிருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான்  லாபம் கிடைக்கும். ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டால் 300 மீன்கள் கண்டிப்பாக வளர்ந்துடும். நன்றாக பராமரித்தால் 450 மீன்கள் வரைகூட தேத்தி விடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இரந்து 300 கிலோ மீன்வரைக்கும் அறுவடையாகும். குறைஞ்சபட்சமாக 200 கிலோனு வைத்துக் கொண்டால்  கிலோ 250 ரூபாய்ங்கிற கணக்கில் பத்து மாதத்தில் 50,000 ரூபாய்க்கு விற்றுவிடலாம். எல்லாச்செலவும் போக 30,000 ரூபாய் வரை கண்டிப்பா லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு
நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தொலைபேசி             0462-2560670      
ஹனீபா, மைய இயக்குநர், அலைபேசி:             94431-57415      
ஷெரீப், ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைப்பாளர், அலைபேசி:             98946-77286      
இப்ராஹிம், அலைபேசி:             97915-78187      

கூட்டின மீன் வளர்ப்பு

கட்லா
ரோகு
மிர்கால்
சாதா கெண்டை
வெள்ளிக் கெண்டை
புல் கெண்டை
மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்களையுடைய வெவ்வேறு வகை மீன்களை ஒரே குளத்தில் விட்டு வளர்த்து மீன் உற்பத்தியைப் பெருக்குவதே கூட்டின மீன் வளர்ப்பின் நோக்கமாகும்.
குளத்தில் மீன்களுக்குத் தேவையான உணவாகிய தாவர நுண்ணுயிர்களும், விலங்கின நுண்ணுயிர்களும், அழுகிய பொருட்களும், புல் பூண்டுகளும் உள்ளன.  தோப்பா, வெள்ளிக் கெண்டை போன்ற மீன்கள் நீரின் மேல் பரப்பில் இரை எடுக்கும் தோப்பா விலங்கின நுண்ணுயிர்களையும் வெள்ளிக்கெண்டை தாவர நுண்ணுயிர்களையும் முக்கிய உணவாகக் கொள்கின்றன.  ரோகு மீன் நீரின் இடைப்பரப்பில் இரை தேடுகிறது.  மிர்கால், சாதா கெண்டை போன்ற மீன்கள் நீரின் அடிப்பரப்பில் உள்ள அழுகிய பொருட்களை உணவாகக் கொள்கின்றன. புல் கெண்டை மீன் தாவர உணவுப் பொருட்களை உண்கின்றது. இவ்வாறாக மாறுபட்ட உணவுப் பழக்கமுள்ள மீன்களை கூட்டாக குளத்தில் விட்டு வளர்ப்பதால் அவைகளுக்கும் உணவுக்காக போட்டி ஏற்படுவதில்லை. மேலும் குளத்தில் உள்ள எல்லா உணவுப் பொட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மீன் வளர்ப்பிற்கு குளத்தை தயார் செய்தல்
  • குளத்தின் வளர்ந்திருக்கும் பாசியையும், கொடிகளையும், புல்-பூண்டுகளையும் முதலில் அகற்ற வேண்டும்.
  • உயர்ந்த ரக மீன்களை வளர்ப்பதால் அவைகளுக்கு விரோதிகள் என்று கருதப்படும் சிலவகை மீன் வகைகள், நீர்ப்பாம்பு, ஆமை, நீர்நாய் போன்றவைகளை அகற்ற வேண்டும்.
  • குளத்தின் அடியில் சேர்ந்து அழுத்திக் கிடக்கும் சகதியை முடிந்த வரை அகற்ற வேண்டும்.
  • கோடையில் வற்றிவிடும் குளமானால். மத்தியில் ஒரு பள்ளம் தோண்டி வைப்பது அவசியம்.  குளம் மொத்தத்தில் வற்றினாலும் பள்ளத்தில் வேண்டிய அளவு தண்ணீர் தேங்கி மீன்கள் ஒதுங்கியிருக்க ஆதாரமாக இருக்கும்.
  • குளத்தைச் சுற்றி கரைகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.
  • கரைகளில் பலன்தரும் மரங்களை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
  • குளத்திற்கு தண்ணீரைக் கொண்டு வரும் வாய்க்கால்கள், பழைய தண்ணீரை வெளிப்படுத்தும் வடிகால்கள் ஆகியவைகளில்  பலகை கதவுகள் அல்லது கம்பி வலைக் கதவுகளை வெலான் ஸ்கிரீன் வலையுடன் பொருத்த வேண்டும் (பலகைக் கதவுகள் தண்ணீரின் போக்குவரத்து அளவை கட்டுப்படுத்த உதவும்.  வலைக்கதவுகள், மீன்கள் தப்பிப் போகாமலும். வேண்டாத பொருட்கள் குளத்தில் வந்து சேராமலும் தடுக்கும்).
குளத்திற்கு உரமிடுதல்
குளத்தில் உள்ள மீன்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் அளவை உரமிடுதல் மூலம் உயர்ந்த முடிவதால் மீன் உற்பத்தி பெருகும்.  உரத்தில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள் நீரிலுள்ள மண்ணினால் ஈர்க்கப்பட்டு அவை படிப்படியாக வெளியிடப்டுகின்றன.  பாஸ்பேட். நைட்ரேட் வகையைச் சேர்ந்த யூரியா. அம்மோனியம், நைட்ரேட், பொட்டாசியம் ஆகியவை தேவையான உரவகைகளாகும்.  சாணம், கோழிக்கழிவு ஆகியவை தேவைப்படும் இயற்கை உரங்களாகும்.
ஆறுவகை மீன்கள் இருப்பு செய்தல்
மீன் குஞ்சுகளின் வகைகள்
மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை
 (ஹெக்டேருக்கு)
தோப்பா
750
ரோகு
1000
மிர்கால்
750
சாதா கெண்டை
750
புல்கெண்டை
1000
வெள்ளிக் கெண்டை
750
மொத்தம்
5000

நான்கு வகை மீன்கள் இருப்பு செய்தல்
மீன் குஞ்சுகளின் வகைகள்
மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை
(ஹெக்டேருக்கு)
தோப்பா
1750
ரோகு
1500
மிர்கால்
1000
வெள்ளிக் கெண்டை
750
மொத்தம்
5000
சேல் கெண்டை, கல்சேல், வெள்ளிக்கெண்டை, பால்கெண்டை ஆகிய மீன் வகைகளையும் மேற்கண்ட வகைகளுக்குப் பதிலாக இருப்பு செய்யலாம்.

மீன்களுக்கு இரையிடுதல்
தவிடு, புண்ணாக்கு, அரிசி மாவு போன்றவைகளை குளத்திலுள்ள உணவுப் பொருட்களைக் கணக்கிட்டு, கலந்து அதற்குத் தேவையான அளவில் தினமும் வழங்கலாம்.  இவ்வாறு நேரடியாக அளிக்கப்படும் தீவனங்களால் மீன் உற்பத்தி அதிக அளவை எட்டும்.

மீன் பிடிப்பு
விற்பனைக்கு ஏற்ற அளவு  மீன்களை மட்டும் பிடிப்பதால் மீன் உற்பத்தி அதிகரிக்கும்.  நன்கு வளர்ந்த மீன்களைப் பிடித்து விடுவதால் அதே வகை சிறு மீன்களை நீரில் அப்படியே விட்டு வைத்து வளர்ப்பது இலாபகரமான வழியாகும்.  துவக்கத்தில்  இருப்பு செய்யப்பட்ட மீன்குஞ்சுகளின் வளர்ச்சி துரிதமாக இருப்பதால் அவை பெருகிய பின். பிடித்து விட்டு அதனால் குளத்தில் ஏற்படும் காலி பரப்பில் அதே வகை புதிய மீன் குஞ்சுகளைவிட்டு இரண்டாம் முறை மீன் வளர்ப்பைத் தொடர முடியும்.  பலவேறு வயதுள்ள மீன் வகைகளுடன் கூடிய குளத்தில் இவ்விதம் தொடர்ச்சியாக மீன் பிடிப்பு நடத்துவதனால் சிறந்த அளவிற்கு மீன் உற்பத்தி கிடைக்கும்.
ஒரு ஹெக்டேர் பரப்புள்ள குளத்தில் கூட்டின் மீன் வளர்ப்பினால்
      கிடைக்கும் இலாபம்
இருப்பு செய்யப்பட வேண்டிய மீன் வகைகள், இவைகளின் எண்ணிக்கை, உரமிடுதல், நேரடி இரையிடல், மீன் பிடித்தல் ஆகிய விவரங்களனைத்தும் இங்கு அளிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு விரங்கள்
(1 ஹெக்டேர் அல்லது 2.5 ஏக்கர் குளத்திற்கு)
அ)    முதலீட்டுச் செலவுகள்

வ.
எண்
பொருள்
செலவு
ரூபாய்
1.
குளம் வெட்டுவதற்கு (1 ஹெக்டேர் குளம் 1 மீட்டர் ஆழத்திற்கு)
50,000.00
2.
உள்ளேற்று / வெளியேற்று குழாய்கள் இணைப்பு மற்றும் தொட்டி கட்டுவதற்கு
20,000.00
3.
மோட்டார் பம்ப் செட் மற்றும் சாதனங்கள்
30,000.00
 
மொத்தம்
1,00,000.00
  ஆ)    நடைமுறைச் செலவுகள் (ஆண்டு ஒன்றுக்கு)

 வ.
எண்
பொருள்
செலவு
ரூபாய்
1.
மீன் குஞ்சுகள் 5000 எண்ணிக்கை (1000-ரூ 600 வீதம்)
3,000.00
2.
இயற்கை / செயற்கை உரங்கள்
 
 
அ.  மாட்டுச் சாணம் 10 டன் - ஆண்டுக்கு
6,000.00
 
ஆ.  உரங்கள் 400 கிலோ /ஆண்டுக்கு
    சுண்ணாம்பு 200 கிலோ / ஆண்டுக்கு
4,000.00
 
இ.  கூடுதல் தீவனம் தவிடு 1040 கிலோ (1 கிலோ
    ரூ.5 வீதம்) கடலைப்புண்ணாக்கு 520 கிலோ
    (1 கிலோ ரூ.20 வீதம்)
20,000.00
 
ஈ.  மின் கட்டணம்
3,000.00
 
உ.  மீன் அறுவடை கூலி
2,000.00
 
ஊ.  பழுது பார்த்தல் / இதர செலவினங்கள்
3,000.00
 
ஐ.  காவலர் கூலி
3,000.00
 
மொத்தம்
44,000.00
 இ.     மீன் விற்பனை மூலம் வருவாய்

வ.
எண்
பொருள்
வரவு
ரூபாய்
1.
மீன் பிடிப்பு 3000 கிலோ (ஒரு கிலோ ரூ.40/- வீதம்)
1,20,000.00
2.
நடைமுறைச் செலவுகள்
44,000.00
 
முதலீட்டுச் செலவினத்தில் 20%
20,000.00
 
நிகர லாபம் (ஆண்டுக்கு)
56,000.00
எனவே, வருமானத்தை இலட்சியமாகக் கொண்டு பார்க்கையில் கூட்டின மீன் வளர்ப்பு முறையே மிகவும் இலாபகரமானது. நீங்களும் கூட்டின் மீன் வளர்ப்பை மேற்கொண்டு பயன் பெறுங்கள்.
தகவல் - மீன்வளத் துறை, தமிழ்நாடு அரசு

No comments:

Post a Comment